குப்பையாகிவிடவேண்டாம் நாம்!

latha ramakrishnan

வாட்டர்கேட் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் – இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ ஊழல்கள். அவற்றில் குப்பை ஊழலும் ஒன்று. ஆம், நம் நாட்டின் நகரங்களில் சேரும் குப்பைகளை அகற்று வதில் நடைபெற்றுவரும் ஊழல் பற்றி 16.03.2014 அன்று நடிகர் அமீர்கானின் தயாரிப்பு-இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் தமிழ் ஒளிபரப்பில் அறியக்கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டின் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் தினசரி வெளியேற்றப்படும் திட, திரவ, மக்கும் மக்காக் கழிவுப்பொருட்கள், அவை நகரின் ஒதுக்குப்புறமான சில பகுதிகளில் மலைமலையாய் குவித்துவைக்கப்பட்டிருப்பது, அதனால் ஏற்படும் பாதிப்புகள், குப்பை களை அகற்றுவதில் பல்முனைகளில் நடைபெற்றுவரும் ஊழல் என ‘குப்பை’ப் பிரச்னையின் பல கோணங்களும் அகல்விரிவாக அலசப்பட்டது. உரிய வல்லுனர்களை, களப்பணியாளர்களை இடம் பெறச் செய்திருந்தது நிகழ்ச்சியின் சிறப்பு.

 

குப்பை அகற்றுதல் என்பதில் இடம்பெறும் அரசியலும், ஊழலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. நகரின் பல பகுதிகளிலிருந்தும் குப்பைகளை அகற்றி அவற்றை அதற்கென ஒதுக்கிவைக்கப்பட்டி ருக்கும் இடத்தில் குவித்துவைக்கும்போது (இப்படி ஒதுக்கிவைக்கப்படும் இடங்களும் பெரும்பாலும் சுற்றுச்சூழல் சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த அக்கறையோடு தெரிவுசெய்யப்படுவதில்லை என்பதே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது)  அவற்றை உரிய வழிமுறைகளின் மூலம் [பிராஸஸிங்] நச்சுத்தன்மை அகற்றி வைக்கவேண்டியது அவசியம் என்று உச்சநீதிமன்றம் விதித்திருந்தும் கூட நடைமுறையில் அது செய்யப்படுவதேயில்லையாம். அதற்கென்று ஒதுக்கிவைக் கப்பட்டிருக்கும் இடத்தில் குப்பையை எடுத்துச்செல்ல, குவித்துவைக்க ஒரு லாரிக்கு இவ்வளவு, ஒரு ‘லோடு’க்கு இவ்வளவு என்று எடுத்துக்கொண்டுபொவதற்கு இவ்வளவு என்று கட்டணம் இருக்கிறது. அரசுகள் இந்த வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் சில காண்ட்ராக்டர்கள் கையில் தருகிறதாம். இந்த காண்ட்ராக்ட் கிடைப்பதிலும் நிறைய பணம் கைமாறுகிறதாம். ஆனால், காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் மக்கும் கழிவு, மக்காக் கழிவு என குப்பைகளை இரண்டாக, தனித்தனியாக பிரித்துவைக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றுவதேயில்லை என்றார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற வல்லுனர்கள். இதனால் இந்தக் குப்பைகளை மலையாகக் குவித்துவைத்திருக்கும் பகுதிகளில் மட்டு மல்லாமல் அண்டை அயல் பகுதிகளிலும், ஏன் தொலைதூரப் பகுதிகளிலும் கூட குப்பைமலையிலி ருந்து கிளம்பும் நச்சுக்காற்று பரவி பல பாதிப்புகள் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுகின்றன.

makkum kuppai makkaatha kuppai

மக்கும் குப்பைகள் சில :

சமைத்த மற்றும் சமைக்காத உணவு வகைகள்,

பழங்கள்

மற்றும்  பூ கழிவுகள்,

 

 

 

 

 

 

மக்காக் குப்பைகள் சில:

பாலித்தீன் கழிவுகள்,

மரவகைகள்,

 உலோகங்கள்,

 துணிவகைகள்,

கண்ணாடி, கம்பிகள்,

தோல் பொருட்கள்

, அட்டைப்பெட்டிகள்,

பிளாஸ்டிக் பொருட்கள்,

தண்ணீர் பாட்டில்கள்,

பால் கவர்கள்

 

 

மக்கும் கழிவுகள், மக்காக் கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்தல் அத்தியாவசியம். மக்கும் கழிவுகளிலிருந்தே நம்மால் நமக்கு வேண்டிய இயற்கை உரத்தையும், எரிசக்தியையும் எளிதாகப் பெற முடியும்.இதன் மூலம் அரசுகளுக்குப் பலகோடி ரூபாய் மிச்சமாகும். அப்படி மிச்சமாகும் பணத்தை தேவையான வேறு பல நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று ’குப்பை மேலாண்மை’ குறீத்து அந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில வல்லுனர்கள் தகுந்த ஆதாரங்களோடும், புள்ளிவிவரங்களோடும் எடுத்துரைத்தார்கள். உணவுக்கழிவுகள், தாவரக்கழிவுகள் போன்றவை அதிகம் கிடைக்கக்கூடிய சிற்றுண்டிசாலைகள், உணவுவிடுதிகள் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மிக அதிக அளவில் மக்கும் கழிவுகள் என்பதால் அவை மிகச் சிறந்த அளவு மறுசுழற்சிக்கு உகந்தவை என்று அவர்கள் சுட்டிக்காட்டினார் ஒரு வல்லுனர்.

குப்பை மேலாண்மையில் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மற்றும் குப்பை அகற்றலில் நாம் தவறாமல் பின்பற்றவேண்டிய மூன்று Rகள்  REDUCE, REUSE, RECYCLE, வல்லுநர்களால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

                                      

மக்கும் குப்பைகள், மக்காக் குப்பைகள் குறித்த விழிப்புணர்வும் நமக்கிருக்கவேண்டியது அவசியம். இந்த இரண்டு வகைக் குப்பைகளையும் ஒன்றாகக் கலந்து கொட்டுவதன் மூலம் நாம் நம்முடைய நாட்டின் சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிய தீங்கிழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணரவேண்டியது அவசியம். இந்த விழிப்புணர்வோடு சில நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதும் தங்கள் நிறுவனக் கழிவுகளையே மறுசுழற்சி செய்வதன் மூலம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பதோடு தங்களுக்கான எரிபொருளையும் தாமே தயாரித்துக்கொள்வதும் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விழிப்புணர்வோடு செயல்படும் தனிநபர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டியது அத்தியாவசியம்.

மக்காக் குப்பைகளையும் உரிய வகையில் பயன்படுத்தி, மறுசுழற்சி செய்து பயன் அடைய வழியுண்டு என்பதையும் எடுத்துரைத்தார்கள் அந்த வல்லுனர்கள். குப்பைகளை பூமிக்கடியில் புதைத்துவைத்து மேலுக்கு மரங்களோ, மலர்த்தோட்டங்களோ வளர்த்தால் மேலே எல்லாம் துப்புரவாகிவிட்டதுபோல் தோற்றமளித்தாலும் பூமிக்கடியிலுள்ள நீரும் வேரும் நச்சுத்தன்மையடைவது தான் உண்மையில் நடக்கும் என்று எடுத்துரைத்தவர்கள் பல அயல்நாடுகள் உண்மையாகவே துப்புரவாக இருப்பதைச் சுட்டிக்காட்டி அதற்குக் காரணம் அவர்கள் குப்பையை அகற்றுவதில் கையாளும் சீரிய வழிமுறைகளே என்று குறிப்பிட்டார்கள். அதேசமயம், அயல்நாடுகளின் தட்பவெப்பநிலை காரணமாக அங்கே மக்காக் கழிவுகளே அதிகம் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் குப்பைகளை எரிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அப்படியே செய்வது காற்றை நச்சுப்படுத்துவதைத் தவிர நன்மை எதையும் விளைவிக்காது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்றனர். ஏராளமாய் பணம் செலவழித்து அப்படி குப்பை எரிக்கும் இயந்திரம், தொழில்நுட்பத்தை நம் நாடு இறக்குமதி செய்ததன் விளைவாய் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, வேலூரைச் சேர்ந்த ஒரு களப்பணியாளர் தவளை, வாத்து, கோழி, பசு என பல்வேறு உயிரினங்களுக்கு தாவரக்கழிவுகளை உணவாக்குவதன் மூலம் அவற்றிடமிருந்து இயற்கை உரமான சாணம் முதலான பலவற்றைப் பெற முடியும் என்று அழுத்தமாக எடுத்துரைத்தார். குப்பை என்பது கருப்புத் தங்கம். நான் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளத் தயார். ஆனால், குப்பை அகற்றலில் நடைபெற்றுவரும் ஊழல் காரணமாக உண்மையான அக்கறை கொண்டவர்கள் அலட்சியப்படுத்தப்படு கிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று வேதனையோடு கூறினார் ஒரு வல்லுனர்.

[*நிகழ்ச்சியின் வேகத்தில் வல்லுனர்களின் பெயர்களைக் குறித்துக்கொள்ள இயல வில்லை. www.sathyamevjayathe.comஇல் இந்த நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்]

குப்பை அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்மணிகளும், அவர்களுக்கன ஒரு அமைப்பை நடத்திவரும் பெண்மணி ஒருவரும் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். குப்பை அகற்றும் பெண்களுக்கான அமைப்பின் தலைவி சானிடரி நாப்கின், குழந்தைகளுக்கான அரையாடை [diaper] ஆகியவை அப்படியப்படியே குப்பைத்தொட்டிகளில் வீசியெறியப்படுவதால் குப்பை அகற்றுவோர் அடையும் இன்னல்களை எடுத்துரைத்து, அவற்றை மூடிய உறைகளுக்குள் நன்றாகப் பொதிந்து குப்பைத் தொட்டியில் போடவேண்டியது அவசியம் என்றார். சானிடரி நாப்கின், குழந்தையின் ‘அரையாடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகள் விற்க எக்கச்சக்கமாக பணம் செலவழிக்கின்றன. அதில் ஒரு சிறு பகுதியையாவது மேற்குறிப்பிட்ட துணிகளைப் பயன்படுத்திய பின் அவற்றை மூடிய உறைக்குள் பொதிந்து குப்பைத்தொட்டியில் போடவேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கென இலவசமாக காகித உறை அல்லது ஹ்டுணி உறையையும் தரவும் முன்வர வேண்டும் என்றும் கருத்துரைத்தார்.

குப்பை அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்மணி ஒருவர், ’குப்பை அகற்றும் காரணத்தால் அந்தக் குப்பைக்கழிவுகளைக் கண்டமேனிக்குக் கொட்டுபவர்களெல்லாம் தங்களைப் பார்த்து மூக்கைப் பொத்திக்கொண்டு போவதையும், காவல்துறையினர், மற்றும் ரௌடிகளால் தங்களுக்கு நேரும் இடையூறுகள், இன்னல்களையும், குப்பை அகற்றும் பணியைச் செய்யும் தங்களுக்கு சரியான வருமானமும் மதிப்பும் இல்லாத அவல நிலையையும் எடுத்துரைத்தார். குப்பைக்குவியல்களைக் கிளறித் துழாவி, மக்கிய மக்காக் கழிவுகளைப் பிரித்தெடுத்து சேகரித்து அகற்றும்போது தேள், பெருச்சாளி நாய் போன்றவை கடிக்க வாய்ப்புண்டு, உடைந்த கண்ணாடிபுட்டித் துண்டுகளை அப்படியே வீசிவிடுவதால் கையில் காலில் குத்தி ரத்தம் வரக்கூடும், காயம் ஏற்படக்கூடும், ஆணி, ஊசி, கம்பி என்று எத்தனையோ எங்கள் கைகளை பதம் பார்க்கும்” என்று வேதனையோடு அந்தப் பெண்மணி குறிப்பிட்ட போது சமீபத்தில் வாசிக்க நேர்ந்த கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன் எழுதிய ’குப்பை சேகரிப்பவன்’ என்ற தலைப்பிட்ட கவிதை தவிர்க்க முடியாமல்  மனதைத் துளைத்தெடுத்தது :

. குப்பை சேகரிப்பவன்

 ஷங்கர் ராம சுப்ரமணியன்

குப்பைகளிலிருந்து
கவிதைகளைச் சேகரிக்கும்
சிறுவன் நான்.
எரியும் சூரியனுக்குக் கீழே
நான் வெயிலின் மகன்
தனிமையான இரவு வானத்தின் கீழே
நான் நட்சத்திரத்தின் பிள்ளை.
மழையில் என் வசிப்பிடம்
மூழ்கும்போது
தவளை ஈனும் தலைப்பிரட்டைகளில்
ஒரு உயிர் நான்.
ஈரக்குப்பை
உலர்குப்பை
மக்காத குப்பை அனைத்தும்
எனது கைகளுக்குத் தெரியும்
கண்ணாடிப் பொருட்களால்
ஊறுபட்ட காயங்களும் தழும்புகளும்
எனக்கு உண்டு.
நட்சத்திரத்தின் உயரத்திலிருந்து
குப்பைத்தொட்டிகளைப் பார்த்தால்
இந்த உலகம் அழகிய சிறு கிணறுகளால்

ஆனதாய் நீங்கள் சொல்லக்கூடும்
ஆனால் உண்மையில்
இவை ஆழமற்றவை..
நான் நடக்கும் நிலத்திற்கு
அடியில்
கடல் கொண்ட நகரங்களும்
மூதாதையரும்
அவர்தம் மந்திரமொழியும் புதைந்துள்ளது
எனக்கும் தெரியும்.
ஆனாலும்
ஒரு ஆணுறையை
பால்கனியிலிருந்து
எறியப்படும் உலர்ந்த
மலர்ச்சரங்களை
குழந்தைகளின் ஆடைகளை
தலை உடல்
தனியாக பிய்க்கப்பட்ட பொம்மைகளை
விரலில் சுற்றி வீசப்பட்ட கூந்தல் கற்றையை
ரத்தம் தோய்ந்த மருந்து ஊசிகளை
சுமந்து செல்லும்போது
பூமியின் பாரத்தை
உடைந்த சிலம்புகளை
சுமக்கும்
புனித துக்கம் எனக்கு…

 

குப்பை அகற்றல் குறித்து அகல்விரிவாகப் பேசிய இந்நிகழ்ச்சி அது தொடர்பான அவலங்களைப் பேசுவதே, ஆவேசப்படுவதே போதும் என்று எண்ணாமல் குப்பை அகற்றல் தொடர்பான விஷயங்களை, பிரச்னைகளை ஆக்கபூர்வமாக, மேலான மாற்றுவழிகளை செய்துகாட்டிய வல்லுனர்கள், களப்பணி யாளர்களின் பங்கேற்போடு முன்வைத்த விதம் பாராட்டிற்குரியது. இந்த குப்பை அகற்றல் விழிப்புணர்வை ஆரம்பப் பள்ளியிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்தவேண்டியது அவசியம். வளர்ந்தவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது என்பதே நடப்புண்மை. இதற்கான முன்முயற்சிகளை கல்விக்கூடங்களும், அரசுகளின் கல்வித்துறை, சுகாதார-நலவாழ்வுத்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத்துறை ஆகிய அரசுத்துறைகளும் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. அச்சு மற்றும் ஒளி-ஒலி ஊடகங்கள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் மிக நேரிய பங்காற்ற முடியும்.

புதுவருடம் பிறந்து மூன்றாவது மாதத்தின் மத்தியில் இருந்தாலும் பரவாயில்லை _ ’குப்பை அகற்றல் தொடர்பாக நம் வரிப்பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்துவரவேண்டியது நம் கடமை, உரிமை என்பதை உணர்வோம்; குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்போரை மனிதர்களாக மதிப்போம்; சமூக நலனில் அவர்களுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்வோம்; இனியேனும் நாம் வெளியேற்றும் குப்பைகளை மக்கிய குப்பை, மக்கா குப்பை என்று தனித்தனியே பிரித்தெடுத்து, பாதுகாப்பாய் பொதிந்து குப்பைத்தொட்டியில் போடுவோம்’ என்று நாம் உறுதிமொழியெடுத்துக்கொண்டால் அது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது,

———————————————————————–

 

Series Navigationபங்காளிகளின் குலதெய்வ வழிபாடுஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]