குப்பை

ஆனந்தன், பூனா

 

அலுவலகத்தில் நாங்கள் மூவரும் ஒரே அறையை பகிர்கிறோம். நான், ஜெயந்தி மற்றும் எங்கள் உயரதிகாரி. என் உயரதிகரியும் எனக்கும் இடையே இடுப்பளவு மரத்தடுப்பே பிரிக்கும். ஒரு நண்பர்தான். நண்பராகிவிட்டார். இன்று அலுவலகத்தில் நுழைந்ததும், அழைத்தார்.

’கருப்ஸ்’

தடுப்பை தாண்டி எட்டி பார்த்தேன்.

ஒரு புதிய குப்பைகூடையை கையில் வைத்திருந்தார்.

நேற்று வாங்கினேன். அழகாக இருந்தது. பார்த்தாயா. வார்க்கப்பட்டது. மாசு மருவற்று, செய்ததற்கான இணைவுகள் எதுவுமில்லாமல். கீழே அடிபக்கம் தரையை தொடாமல் உயர வைக்கபட்டுள்ளது. சீராக உள்ள இந்த துளைகளை பாரேன், ஒரே அளவு, வேண்டிய உருவை நினைத்தால், இதில் பார்க்கலாம்.

அவர் ஆழ்ந்து பேசுவது வியப்பாக இருந்தது. சிரித்தபடியே தலையாட்டினேன். ஏதோ நினைத்தார்போல மேசையின் பக்கத்தில் வைத்துவிட்டு ஒரு கோப்பை புரட்டினார். நானும் இருக்கையில் அமர்ந்தேன். அப்படியே மேசையிலிருந்த கோப்பை விரித்து அதில் ஆழ்ந்தேன். வீட்டு பேலண்ஸ் சீட்டை சரி செய்வது எப்படி என சிந்தித்து கொண்டே கணக்கிலாழ்ந்து கொண்டிருந்தபோது

”கருப்ஸ்” அவர் விளித்தார்.

எழுந்து தடுப்பின் இப்புறமிருந்து பார்த்தேன்.

உள்ளே வா

சென்றேன். குப்பைகூடையை காட்டினார். அதில் ஒரு கசங்கிய தாள் இருந்தது. கேள்வியுடன் அவரை பார்த்தேன்.

இந்த குப்பையுடன் அழகாக இல்லை?

என்ன சொல்வது என் தெரியாமல் விழித்தேன். அதற்குள் கோப்பிலுள்ள கையெழுத்திட வைத்திருந்த ஒரு ஆவண குறிப்பை கிழித்தார், நான் தவறாக எழுதிவிட்டேனோ என பயந்தேன். அதை கூடையில் எறிந்து, பின் ரசனையுடன் பார்த்தார்.

எதுவும் தவறா?

இல்லை, இப்போது பார். இன்னும் அழகாக இருக்கிறது.

மேலதிகாரிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் கிறுக்குதான். நானும் தலையாட்டிவிட்டு வந்து மறுபடியும் அந்த அறிக்கையை தயாரிப்பதில் மும்முரமாக இரங்கினேன்.

இரண்டு நாட்களுக்கு பிறகு, நான் அலுவலகத்தில் நுழையும்போது, அவர் துப்புறவு செய்யும் தொழிலாளியை கோபத்துடன் சத்தமிட்டுகொண்டிருந்தார். அவன் அந்த கூடையை எடுத்து சென்று காலி செய்துவிட்டு வந்தானாம். இந்த சூழலுக்கு எப்படி எதிர்வினை செய்வது என தெரியவில்லை. அவனுடைய வேலைதான். தினமும் செய்வதுதான். அவனை என்ன சொல்லி திட்டுவது என புரியவில்லை. மௌனம் காத்தேன். அவனை மட்டும் அவ்வப்போது கோபமாக முறைத்தேன்.  அவரே சாந்தமைடைந்து இனி அவர் அறையை சுத்தம் செய்ய கூடாது என கூறினார். அவன் விழித்தான். நான் சைகை செய்து வெளியேற செய்தேன்.

நான் அலுவலக வேலையில் மூழ்கியபோது,

’கருப்ஸ்’

நான் ஒரு அவசர கோப்பை எடுத்துகொண்டு நுழைந்தேன். கூடை மேசை மேல் இருந்தது. ஆச்சரியத்தை காட்டிகொள்ளாமல் கோப்பை நீட்டினேன். கூடையை பார்த்தவாறே அதிலுள்ள தாளை கிழித்தார்.

”ஸார்” என்றேன் பதற்றத்துடன்.

நான் உழைப்போடு தயாரித்தது. என்ன தவறாக இருக்க முடியும், பார்க்ககூட இல்லையே. அதை கூடையில் விட்டெறிந்து ரசித்தார். எனக்கு பகீரென்றது. குப்பை கூடையின் தீவிரம் அப்போதுதான் புரிந்தது. அதன்பின் பல பைல்களின் தாள்கள் காணாமல் போயின, நான் அவருக்கென பிரத்தியோகமாக பல பிரதிகளாக கோப்புகளை தயாரித்தேன். பல வேலைகள் முடங்கின. அவர் கண்டுகொள்வதாயில்லை. மேலிடத்திலிந்து வந்த கடிதங்களுக்கு பதில் இல்லை, அவையும் கூடையில் சென்றன. சில நாட்களில் கூடையை வீட்டிற்கு எடுத்து சென்று கொண்டு வருவதுமாக ஆயிற்று. அவர் மனைவியை சந்தித்து பேசலாமென இருந்தேன். வீடு சென்றதும் அங்குள்ள வேலையில் மூழ்கி, மறந்துவிடுவேன். சிறிது நாட்களுக்கு பின் தெரிந்துகொண்டேன், அவர் காலையில் எல்லோருக்கும் முன் அலுவலகம் வந்து எல்லோருடைய குப்பையையும் எடுத்து தன்னுடன் வீட்டிற்கு எடுத்துசெல்கிறார் என. இப்போது அலுவலகம் முழுக்க தெரிந்த விசயமாயிற்று. எல்லோரும் கிசுகிசுப்பாக பேசிகொண்டார்கள், அவர் முன் பேச பயந்தார்கள். நானும் அவர் வீடு செல்ல அதிகமாக நினைக்க ஆரம்பித்தேன், முடியவில்லை. சில மாதங்களுக்கு பின் அவர் வருவது நின்றுவிட்டது. சொல்லாமல் நின்றுவிட்டாரே எதும் உடல் நிலை சரியில்லையா என நினைத்தேன். அப்போதும் அவரை சென்று பார்க்க முடியவில்லை. சில நாட்களுக்குபின் நீண்ட மருத்துவ விடுப்பிற்கான விண்ணப்பம் மேலிடத்திலிருந்து ஒப்புதலாகி வந்தது. தீவிரம் அதிமாகிவிட்டதென உடனே அவர் வீட்டிற்கு சென்றேன். அவரையே நம்பிய குடும்பம் போல, அவர் மனைவி கண்களை சுற்றிய கருவளையத்துடன் எப்போதும் களைப்புடன் உள்ளது போல தோன்றியது. அவரோ உடல் பலகீனத்துடன் கடின முயற்சிக்குப்பின் புன்னைக்க முயன்றார். சிறிது நேர சம்பிரதாய பேச்சுக்குபின் மனம் தாளாமல் விடைபெற்றுகொண்டு எழுந்தேன். கதவை அடைந்து திரும்பி அவரை நோக்கினேன். இனிப்பை சுற்றியிருந்த தாளை மெதுவாக அழகாக மடித்து தன் பாக்கட்டில் வைத்தார். தவிர்க்க முடியாமல் அவர் மனைவியை பார்த்தேன். கண்களில் கண்ணீர். மூன்று மாதங்களுக்கு பின் சென்ற ஜெயந்தி அதைவிட மோசமான செய்தியுடன் வந்தாள். இப்போது வீடெல்லாம் குப்பையென.

2

அவருடைய விடுப்பின் காலத்தில், என்னிடம் இடைக்கால பொருப்பை ஏற்றுகொள்ள மேலிட உத்தரவு வந்தது. இப்பொது, நானும் ஜெயந்தி மட்டுமே இவ்வறையில். அவளோ எப்பொதும் விடுப்பில். அல்லது தாமதாமாக வருவது, நேரத்துக்குமுன் கிளம்புவது. அதனால் பெரும்பாலும் அறையில் நான் மட்டுமே. இந்த பெரிய கட்டிடத்தின் மூலையில் உள்ள எங்கள் அறைக்கு யாரும் வருவதுமில்லை. கோப்புகள் இவ்வறையை கடப்பது நின்றால் மட்டுமே சில நினைவூட்டும் கடிதங்களுக்குபின் யாராவது வர வாய்ப்பு இருக்கும். அவ்வளவு கடின வேலையல்ல என்பதால் யாரும் வருவதில்லை. ஒருவேளை நாங்கள் சரியான நேரத்தில் முடித்துவிடிகிறோம். இல்லையென்றால் இங்கு வரும் கோப்புகளுக்கு முக்கியதுவமில்லையோ என்னவோ?

 

ஆறு மாதங்களாகிவிட்டன, இப்பிரிவுக்கான முழு பொறுப்பும் என்னிடமே என உத்தரவு, என் இடத்திற்காக புதிதாக பதவி நியமனம் வரும்வரை கூடுதல் பொறுப்பு. எல்லாம் ஒன்றுதான். ஒரே ஆள். இடம் மாறினேன். சம்பளம் மாறியது. ஆனால் புதிய ஆள் அவ்வளவு சீக்கிரமாக வர சாத்தியமில்லை. ஜெயந்தி அவ்வப்போது அலுவலகம் வருவாள். எதையும் பற்றி கவலைபடாதவள். அவள் குடும்பமே எப்போதும் அவள் மூளையை ஆக்கிரமித்திருக்கும். இப்பிரிவிற்கான மொத்த பொறுப்பும் என்னிடமே. பெரும்பாலும் நான் மட்டுமே இவ்வறையில். அலுவலகத்தில் அதிக நேரம் இருக்க ஆரம்பித்தேன். என் வேலையை ரசிக்க குறிப்புகளை மெதுவாக அழகாக எழுதினேன். பின் கடிதங்களை கணினியில் தட்டச்சு செய்யாமல் கைகளில் எழுதி ரசித்தேன். எழுத்துக்கள் ஓவியம் போல. அதன் வளைவுகளும் சுளிவுகளும் என்னை கற்பனை உலகுக்குள் ஈர்த்தன. சொற்களுக்கும் அதிலுள்ள எழுத்துகளும் எப்படி அழகுடன் சேர்கப்பட்டுள்ளது என வியந்தேன். harmony –ல் உள்ள h மேலேயும் y கீழேயும் நீண்டு அந்த சொல்லுக்கான அமைதியை ஒரு ஒவியமாகவும் காட்சிபடுத்துகிறது. அதிலுள்ள h-யை சிறிது சுழித்து தலைகீழ் y போலாக்கி அழுகுபடுத்துவேன். நான் எனக்கான எழுத்துருவை படைத்துவிட்டேன். அதில் கணினியைபோல நிலையான எழுத்தமைவில்லை. சொற்களுக்கேற்ப அதன் உணர்வை காட்சிபடுத்த மாறும் எழுத்துருக்கள். ஆனால் மொத்த பிரதியுடன் இணைந்து அவற்றின் அழகை குறைக்காதது. எழுத்துரு பரிணமித்தபின், கடிதத்தின் அமைப்பில் ஒரு முழுமையை கொண்டுவரமுயன்றேன். கடிதங்களின் அமைப்பை தெரிவு செய்ய புத்தகங்கள் வாங்கினேன். அதற்காக இணையத்தில் பரிந்துரை கேட்டேன். என் மேம்படுதப்பட்ட முறைகளை பகிர்ந்துகொண்டேன். அவற்றிலுள்ள குறைகளை பரிந்துரைகள் மூலம் மேலும் மேம்படுத்தினேன். மேலிடத்திலிருந்து கணினி தட்டச்சு செய்த அறிக்கைகளை கேட்டபோது அவர்களின் அழகுணர்ச்சியின்மையை கண்டித்து பதிலளித்தேன். அவ்ர்களின் கடித்திலுள்ள குறைகளையும் சுட்டி காட்டினேன். அதை அவர்கள் ஒப்புகொள்ளவில்லையென்றாலும் தொடர்ந்து கைகளால் எழுதிய அறிக்கைகளையே தயாரித்தேன். என் கடிதங்களை ஜெயந்தி வியப்புடன் பார்த்தாள். அவற்றின் அழகை பாராட்டினாள். மேலிடத்தின் அழகுணர்விணமையை அவளும் கேலி செய்தாள். அவளின் வேலைகளையும் நானே செய்தேன். அவை அழகாக இருக்க. அவள் விடுப்பு கடிதங்களைகூட எழுதினேன். அவளின் கையொப்பத்தை மேலும் அழகுற செய்ய சில ஆலோசனைகள் கூறினேன்.

அலுவலகத்தில் இருக்கும் நேரம் அதிகரித்தது. அதனால் இங்கு யாரும் வருவதுமில்லை. அதாவது வேலை அதற்குரிய வேகத்தில் சென்றது. என்னுடைய கண்டுபிடிப்புகளை தரத்தை அதிகரிக்க என் நேரத்தை அலுவலகத்தில் வேலைக்காக ஒதுக்க ஆரம்பித்தேன். என்னை போல அழகுணர்வுடன் வேலை செய்ய யாருமில்லை. என் வேலைக்கு நானே பார்வையாளன். எப்போதும் என் பேனாவை தொடும்போது நான் மிக கவனாக என் பர்வையாளர்கள் கவனத்தை தேர்ந்த நாடக நடிகரின் நளினத்துடன் கையாள்வேன். எழுதும்போது என்பின்னுள்ள, என் காதருகே என் தவறுகளுக்காக குறுகுறுக்கும் பார்வையாளனை தோற்றோட செய்ய கவனமாக பயிற்ச்சியின் முழுமையால் ஏற்படும் லாவகத்துடன் சரியாக அளக்கபட்ட இடத்தில் முதல் எழுத்திற்காக பேனா முனையை வைக்கும்போது வெற்றிபுன்னகை புரிவேன். எனக்கு தெரியும் கடிதத்தின் வலபுறம் தேதியிட்டு காலியிடத்தை அளந்தால் சரியாக 1.5 அங்குல இடைவெளியிருக்கும். இருந்தாலும் எழுதியபின் அளவிட்டு மகிழ்வேன். எந்த உபகரணங்களையும் பயன்படுத்தாமல் அளவிடபட்ட சட்டகத்தினுள் எழுத என்னால் மட்டுமே முடியும். ஒவ்வொரு முறையும் அறிக்கை தயாரித்தபின் அளவிட்டு பார்த்தபின் என் பார்வையாளனின் கரவொலி கேட்கும். இத்தகைய அங்கீகாரமே எனக்கு போதும். இதை புரிந்துகொள்ளாதவர்களை பற்றி கவலையில்லை. அவர்களுக்கும் புரியும் காலம் வரும். அதற்காக அலுவலக வேலையில் அழகுணர்வு என்ற நூலிற்காக குறிப்புகள் தயாரிக்க ஆரம்பித்தேன்.

 

இன்று மேலதிகாரியின் மேசையிலிருந்து திரும்பிய என் அறிக்கையை திறந்தேன். காதோரமுள்ள பார்வையாளன் அசிங்கம் என்றான். அறிக்கையை நோக்கினேன். அதன் இட மூலையில் எழுதப்பட்ட குறிப்பு அசிங்கமாக துருத்திகொண்டிருந்தது. அழகான சிலையின் மேல் சாணத்தை வீசியெரிந்ததுபோல. ஆவேசத்தால் என் கைகள் நடுங்கின. தலையை உயர்த்தாமல் என் உடலெங்குமுள்ள கண்களால் நான் அவமானபடுவதை உணர்ந்தேன். உடல் கூசியது. பெரிய அரங்கத்தின் நடுவே நான் அவமானபடுவதை என் பார்வையாளர்கள் கரவொலியிட்டு சிரிக்கிறார்கள். நடுங்கும் கைகளை ஒன்றை மற்றொன்றால் பற்றி அந்த பக்கத்தை கிழித்தேன். அதை என்னுள்லுள்ள உணர்ச்சிகளின் உத்வேகத்தால் கசக்கியெரிந்தேன். பரபரப்புக்குபின் முள் பிடுங்கிய நிம்மதியை மனம் அடைந்தது. கூச்சலும் குறைந்தது. திரும்பியபோது கூடையில் அழகிய வெள்ளைமலர்போல அந்த தாள். கூடையை எடுத்து மேசையின்மீது வைத்தேன். மேசை அழகுற்றது.

—————

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2கவிதை பக்கம்