குரங்காட்டியும் குரங்கும்

 

கோலெடுத்தான்

குரங்காட்டி

ஆடியது குரங்கு

கர்ணம் போட்டது

காவடி எடுத்தது

தங்கச்சி பொம்மையைத்

தாலாட்டியது

இரண்டு கால்களால் நின்று

இசைக்கு ஆடியது

கைகளை ஏந்தி

காசு கேட்டது

குடும்பம் நடந்தது

குரங்காட்டிக்கு

ஒரு நாள்

மனம் மாறினான்

குரங்காட்டி

ஒரு குரங்கால்

நம் குடும்பம் நடப்பதா?

வெட்கம்

குரங்கை காட்டிலே விட்டு

வீடு ஏகினான்

பாவம் குரங்கு

அதற்கு சுதந்திரம்

புரியவில்லை

செடிகளிடமும்

சில்லரை மிருகங்களிடமும்

காசு கேட்டுத்

திரிகிறது.

அமீதாம்மாள்

Series Navigationஇசை – தமிழ் மரபு – 3