குருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை

author
0 minutes, 1 second Read
This entry is part 4 of 13 in the series 10 டிசம்பர் 2017

வெலிகம ரிம்ஸா முஹம்மத்
Kuruthik Kaadum Kulalisaiyum
குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பொலிகையூர் ரேகா. இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் பொழிகையூரைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழ் நாட்டை வசிப்பிடாகவும் கொண்டுள்ள ரேகா கோவிந்தராசா இளங்கலை வணிகவியல், முதுகலை வணிகவியல், வணிக ஆய்வியல், முதுகலை வணிக நிர்வாகவியல், வணிக நிர்வாக ஆய்வியல் ஆகியனவற்றைக் கற்று தற்போது உதவிப் பேராசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு இனத்தின் குரலாக 65 பக்கங்களில் வெளிவந்துள்ள இவரது குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலில் 56 கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

துன்பங்கள் சூழ்ந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இன்பமாக வாழ்ந்திட வேண்டும் என்பதே மானிடர் விருப்பமாகும். சிலரது வாழ்க்கை விதியின் வசத்தால் இன்பமாகவே கழிந்தாலும், சிலரது வாழ்க்கையும் அதே விதி வசத்தால் துன்பகரமானதாகவே அமைந்துவிடுகின்றது. அதனை விட்டுத் தூரமாக சந்தோச மழையில் நனைய வேண்டும் என்ற கவிஞரின் ஆதங்கங்கள் விடியும் (பக்கம் 13) என்ற தலைப்பில் அமைந்துள்ள கீழுள்ள கவிதை வரிகளால் நன்கு உணர்த்தப்படுகின்றது.

என்றோ விடியுமென்றே
இன்றும் எதிர்பார்ப்பு
நன்றே வாழ்ந்துவிட
நாளும் உயிர்காத்து
வென்றே சென்றுவிடும்
கனவும் நிதமாச்சு!

ஒருநாள் எங்கள்
கனவும் நனவாகும்
என்றெண்ணும்போது
மனமும் நலமாகும்.

யுத்தம் தின்ற பூமியில் எஞ்சிய வடுக்களாக வாழும் மக்களின் மனப்போராட்டம், வடுக்கள் (பக்கம் 14) என்ற கவிதையில் மிகவும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. காயங்கள் ஆறிவிட்டாலும் வடுக்கள் அழிவதில்லை. அந்த வலியை கீழுள்ளவாறு பதிந்திருக்கிறார் நூலாசிரியர்.

ஆறாத காயங்களோடே
ஆதரவற்ற வாழ்க்கை
உறுப்பிழந்த வாழ்விலே
உறுதிகளும் போனது

குருதித் துளிகளில்
குறிப்பெடுத்தவர்களே
இவர்கள் எதிர்காலத்தையும்
இனி நினைவில் கொள்ளுங்கள்!

மலர்களின் வாசனை, மென்மை பற்றியெல்லாம் ரசித்துக் கொண்டிருக்கும் எமக்கு, சாட்டையடியாக விழுந்திருக்கின்றது செம்பூக்கள் (பக்கம் 16) என்ற கவிதை. இந்தக் கவிதையில் ஒரு வரலாற்றின் சோகமே அப்பிக் கிடக்கிறது. இந்தச் சிறிய கவிதை சொற்செறிவுடன், கருத்துச் செறிவும் பெற்று அமைந்திருப்பது சிறப்பானது.

எங்கள் மண்ணில் மட்டும்
வெள்ளைப் பூக்கள்
பூப்பதேயில்லை!
மலர்வதற்கு முன்பே
குருதிக் குளியலில்
அவைகள் நிறம் மாறிப்
போய்விடுவதால்!

யாழில் எரிக்கப்பட்ட நூலகம் அம்மக்களின் வரலாற்றையே அழித்ததற்கு ஒப்பானது எனச் சொல்லப்படுகின்றது. இனவெறியர்களின் இத்தகைய செயற்பாடுகள் அப்பாவி மக்களின் வாழ்க்கை முறையை அடிமட்டமாக்கிவிட்டதை எரிக்கப்பட்ட அடையாளம் (பக்கம் 17) எனும் கவிதையில் ஆணித்தரமாகப் பதிகிறார் நூலாசிரியர் ரேகா.

எரித்தது நூலகமல்ல
எங்கள் வரலாறு..
அழிந்தது நூல்கள் அல்ல
எங்கள் உடமைகள்..

சாம்பலான வரலாறுகளோடு
சாய்ந்துவிட மாட்டோம்..
புதிதாய்ச் சரித்திரம் படைப்போம்
புவியே வியக்க வளர்வோம்!

இடி விழுந்த மண் (பக்கம் 18) எனும் கவிதையிலும் போரின் அவலமே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இடி விழுந்த மரம், இடி விழுந்த இடம் என்ற சொற்களுக்கெல்லாம் அப்பால் இடி விழுந்த மண் என்று தனது இதய சோகத்தை சொல்லில் வடித்திருக்கிறார் கவிஞர் ரேகா. அவ்வரிகளின் வலிகள் பின்வருமாறு அமைந்துள்ளது.

உப்புக் கடல் நடுவே
உப்புக் கரிக்கும் வாழ்விங்கே
கரை தொடும் அலைகள் கூட
கறையாகும் கொடுமையிங்கே

கருவறையையும் கல்லறையாக்கும்
கயவர்களின் கூடமிது
கடவுள்களையும் கைதியாக்கும்
கடுமையான தீவிது

கதவடைத்த உலகமிது
கதறல்களும் கேட்கவில்லை.
இடி விழுந்த மண்ணிலே
இயல்பு வாழ்க்கை இன்றுமில்லை

ஒரு மணித்தியாலம் கெடு விதித்து வெளியேறுமாறு ஒரு இனத்துடைப்பு செய்த போது அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்ட பதற்றத்தை, எதை எடுக்க? (பக்கம் 40) என்ற கவிதையில் தத்ரூபமாகக் காண முடிகின்றது. தலையெழுத்தின் வழிகாட்டலில் பாதை மாறிப் பயணிக்க வேண்டும் என்ற நிலையானது அவர்களை எந்தளவு பாதித்திருக்கும். பின்வரும் வரிகளில் அதனை நன்கு உணரலாம்.

எதை எடுப்பது
எதை விடுவது
ஒரு மணி நேரத்துள்
ஓடிவிட வேண்டுமாம்

உயிருக்குப் பயந்து
ஊர்விட்டு ஓடிட
உடமைகள் வேண்டுமா
உணவு மட்டும் போதுமா

பரம்பரை ஆவணங்களை
பத்திரமாய் எடுக்கவா
அடுத்த ஊரில் பிழைக்க
அனைத்தையும் எடுக்கவா

கையில் கிடைத்தவற்றை
கணப் பொழுதில் பற்றிக் கொண்டு
ஓடத் தொடங்கிவிட்டோம்
ஓய்வில்லா வாழ்வை நோக்கி

உயிருக்குப் பயந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்தோருக்கு சொந்த மண்ணின் ஏக்கம் எப்போதும் இருக்கும். உறவுகளுடன் வாழ்ந்து, சொந்த நாட்டின் காற்றைச் சுதந்திரமாகச் சுவாசிக்க வேண்டும் என்ற கனவு எப்போதும் இருக்கும். அவர்களது ஏக்கம், அடங்கும் உயிர்கள் (பக்கம் 58) எனும் கவிதையில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை மண் விட்டு வந்த
வெறுமை வாழ்வில்
ஆயிரமாய் உழைத்தாலென்ன
அடுத்தடுத்து வென்றாலென்ன

மறுமுறை பார்ப்போமா என்ற
ஏக்கத்துடனேயே
அடங்கிப் போகுது உயிர்கள்
அயல் நாட்டிலே!
Reka Govindarasa
புலம்பெயர்ந்த நிலையிலும் தாய் மண்ணின் மீது கொண்ட அதிக பற்றால் அதன் விடிவுக்காக அங்கிருந்து குரல் கொடுத்திருக்கும் இளந் தலைமுறைக் கவிஞர் ரேகா பாராட்டுக்குரியவர். அவரது எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்!!!

நூல் – குருதிக் காடும் குழலிசையும்
நூல் வகை – கவிதை
நூலாசிரியர் – பொலிகையூர் ரேகா
வெளியீடு – கீதம் பப்ளிகேஷன்ஸ்
விலை – 60 ரூபாய் (இந்திய விலை)

Series Navigation”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்நிமோனியா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *