குரோதம்


-முடவன் குட்டி
குழந்தையா மறந்து போக..?
மன்னித்து விட காந்தி மகானா ..?
வெறுப்பின் காளவாய் ஊதி
தீக் கங்குகளாய் சொல் வளர்த்தேன்
அணையவிடாது காத்தேன் 
ஓர் நாள்
சாவகாசமாய் ஏதோ பேச வந்தாய் 
சடா – ரென உன் முகத்தில்  வீசினேன்
கதறித் துடித்தாய்
இவ்வளவு வல்லமை  வாய்ந்தனவோ
என் சொற்கள்..?
பொறுக்கிச் சேர்க்கலானேன் 
செதுக்கிச் செதுக்கிக்  கூர் செய்தேன்
சொற்கள் விஷமேறின 
வலிமை கொண்டன
ஆயுதமாயின 
 கவசமாயின  
ஆளுமையில் நிலை கொண்டன
வீசி வீசி எறியலானேன்
அலறினான் அவன்..
நொண்டி ஓடினான் இவன்..
கவ்விக் குதற
இன்னும் எவரேனும் ..?
ஒருவரையும் காணோம்
ஆனால்
காத்த்திருக்கிறது
காத்துக்க்கொண்டே இருக்கிறது
வெறுப்புக் காளவாயில்
நான் இட்டு வளர்த்த ‘குரோதம்’
பற்றிச் சூழ உயிர் தேடி
யாரே அறிவர்..?
அதன் அடுத்த பலி
நானாகவும்
இருக்கலாம்.
Series Navigationசைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணிநினைவு