கேள்விகள்

Spread the love

மஞ்சுளா

எங்கிருந்து முளைக்கின்றன

இந்த நினைவு மரங்கள்? 

எங்கிருந்து தூவப்படுகின்றன அதற்கான விதைகள்? 

பலமாய் பற்றிக்கொள்கின்றன 

நம்மீது அதன் வேர்கள் 

நாமும் வாழ்கிறோம் 

அதன் உயிர்ச்சத்துக்களாய் 

கிழைத்துச் செழிக்கும் 

அதன் உணர்வுகளில் 

சேர்கிறோம் ஒன்றாய் 

பிரிகிறோம் பலவாய் 

செல்லும் பாதைகளில் 

பூக்களைத் தூவும் நம் மனம் 

சில நேரங்களில் முட்களையும்…. 

அதன் மீதே 

நடக்கச் செய்கிறோம் 

அறியாத 

நம் குழந்தைகளின் 

சின்னஞ் சிறு பாதங்களையும் 

இலையுதிர்க்க தொடங்கிவிட்டது காலம் 

பழுத்து உதிரத் தயாராகிவிட்டன கனிகள் 

உணர்கிறோம் 

நிலையாமை பற்றி 

கனிகள் சுவைக்கப்படுகின்றன வாழ்விற்காக 

வாழ்வின் கேள்விகளாகி மீண்டும் 

நினைவு மரத்தில் ஏறுகிறது 

வேதாளம் 

                      –  மஞ்சுளா 

manjulagopi04@gmail.com

Series Navigationசமூகம்தூரத்து விண்மீன்கள்