கைந்நிலை காட்டும் இல்லத்தலைவி

மணி.கணேசன்
அக்கால மகளிர் அறிவிலும்,உடலுழைப்பிலும் ஆணுக்கு நிகராகவே விளங்கி இருந்தனர்.பெண் மீதான உடைமைச்சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விடும் பட்சத்தில் அவள் அவளது தாய்,தந்தை,உடன்பிறந்தோர் மற்றும் உற்றார்,
உறவினர்களால் அலர் தூற்றப்பட்டு இற்செறிப்பிற்கு ஆட்பட்டுத் தவித்துப் போனாள்.

நூழை_நுழையும் மடமகன் யார்கொல்?என்று அன்னை
புழையும் அடைத்தாள் கதவு (59:2-4)

இவ்வாறாக,கதவில் தென்படும் சிறுதுவாரத்தையும் மூடி கடுஞ்சொல் கூறி கடுங்காவலுக்கு உட்படுத்திட்டப் போதிலும் பெண்ணானவள் தமக்குரிய துணையைத் தாமே தேர்ந்து தன்னுடைய விருப்பத்தினைச் சுதந்திரமாக வெளியிடும் திறம்
பெற்றிருந்தாள் என்பது கண்கூடு. அதுபோல் வயது மற்றும் பிள்ளைப்பேறு காரணமாகத் தன் எழில்நலம் குன்றித் தளர்ந்திட்ட தருவாயில் பிரிய முற்படும் தலைவனையும் பின் அவன் பொருட்டு வாயில் வேண்டி நிற்கும் பாணனிடமும் அவ் இல்லத்தலைவி தன்  உள்ளக் கிடக்கையினை ஒளிவுமறைவின்றி_

மூத்தேம் இனி;-பாண!முன்னாயின் நாம் இளையேம்
கார்த்தன் கலிவயல் ஊரன் கடிது எமக்குப்
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று (45)
என்று துணிவுடன் வாயில் மறுக்கின்றாள்.கணவன் மற்றும் பிற ஆடவன் முன் நாணியும் அஞ்சியும் நின்று அழுதுபுலம்பாமல் துணிச்சலுடன் எதிர்கால வாழ்க்கையை எதிர்கொள்ளும் நோக்கும் போக்கும் கட்டாயம் பெண்களுக்கு அவசியம் என்பதை பின்வரும் பாடல் வேறு இயம்புவதாக உள்ளது.
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப என் உடையை?
அ•து அன்று எனினும் அறிந்தேம் யாம் செய்தி
நெறியின்-இனிய சொல் நீர் வாய் மழலைச்
சிறுவன் எமக்கு உடைமையால் (41)

இன்பம் ஒன்றினையே குறிகோளாகக் கொண்டு புறச்சேரிகளில் உறைந்து வாழும் பரத்தையர்களுடன் குளிர்ந்த குளத்தில் வீழ்ந்து மதஎருமை போல் களித்துக் கிடக்கும்(37)தலைவனின் நடத்தையினைச் சாடுவது மட்டுமல்லாது அவனை முழுமையாகவும் புரிந்து வைத்திருக்கிறாள் அத் தலைவி.தவிர,குடும்பத்தைக் கவனியாது அல்லாடும் ஆண் வர்க்கத்திடையே குடும்பத்தைப் பேணிக் கட்டிக் காத்து வளர்த்திடும் தலையாயச் சுமையையும் மனம் உவந்து ஏற்றுக்கொள்ளும் பாங்கையும் நம்மால் கண்ணுற இயலும்.இனிய மழலைச் சொற்கள் பேசுகின்ற எம் புதல்வன்
எனக்குத் துணையாக இருப்பதால் வேறுதுணை தேவை இல்லை என்று கூறுவதன் வாயிலாக பெண் தன்னம்பிக்கை மற்றும் தற்சார்பு மிக்கவளாக எக்காலத்தும் திகழ்தலே நலம் பயக்கும் எனும் பெண்ணியச் சிந்தனை ஈண்டு நோக்கத்தக்கது.

மேலும்,ஈன்று புறந்தருவது மட்டும் பெண்ணின் கடமையன்று அக் குழந்தையினைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து நாட்டிற்கு நல்லக் குடிமகனாக அளித்தலும் இன்றியமையாதக் தனக்குள்ளதாக இத்தாய் கருதுவது சிறப்பு.இதன் மூலம் பண்டை மகளிர் கணவனை எப்போதும் சார்ந்தும் அடிபணிந்தும் வாழாமல் தாமே பொருளீட்டித் துணியுடையவராய் வாழ்தல் வேண்டுமென்பது இங்கு அறை கூவலாக உள்ளது.ஆதலால்தான்,சங்ககாலத்தில் இருந்ததைப் போல பிற்காலப்
பெண்களும் சுயத்தொழில் முனைவோராக விளங்க முற்படுதல் ஒன்றே குடும்பம் தழைக்கச் சிறந்த வழி என்கிறது இப்பாடலின் உட்கருத்து.

தவிர,தன்னையும் தம் குடும்பத்தையும் விட்டுப்பிரிந்து வேறு பெண்களுடன் சிற்றின்பத்தில் மூழ்கித் திழைக்கும் கணவனை தொலையட்டும் என்று கைகழுவிடாது அவன் மீது கொண்டுள்ள உண்மையான பாசம் எள்ளளவும் குறையாதவளாக-

போது அவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத்
தாது அவிழ் கோதைத் தகை இயலார் தாம் புலப்பர்
ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர் மகளிர்
பேதைமை தம்மேலே கொண்டு (43)
எனப் பிற மகளிரின் தொடர்பு இருப்பதாகக் கூறி பிணக்கம் எனப் பரத்தையரின் அவல நிலையையும் தலைவனின் விரும்பத் தகாத நடத்தைகளையும் பலர் வாயிலாக அறிவதாக வாயில் வேண்டுவோரிடம் குறைப்பட்டுக் கொள்கின்றாள்.இதன்மூலம்
தான் ஒரு நல்ல இல்லத்தலைவி என்பதை நிலைநாட்டிட எங்கோ தொலைவில் வாழ்ந்து வரும் தன் மணவாளன் மீதான நினைப்பையும் அவனை மீளவும் நல்வழிக்குத் திரும்பிட வேண்டுமென்கிற அவாவையும் அவள் விழைய முனைவதை நாம் உணர இயலும்.அவன் அவளது கண்காணிப்பு வளையத்திற்குள் அகப்பட்டவனாகக் காணப் படுகின்றான்.

ஆதலால்தான் அவன் மையல் கொண்டுள்ள சேரிப் பரத்தையரின் புகார்களை அலட்சியப்படுத்தாமல் ஓரிருவர் சொல்வதை மட்டும் கேளாமல் அவற்றின் உண்மைத் தன்மையினை பலர் வாயிலாகச் சொல்லக்கேட்டு உறுதிபடுத்திக் கொள்கிற
மனப்பக்குவத்தை அவசரப்படும் பெண் சமூகத்திற்கு மாற்றாக முன்வைக்கின்றாள் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார் படைத்துக் காட்டும் இம்மருதநிலத் தலைவி.ஏனெனில்,ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும்.

மேலும்,தமக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கும் பரத்தையினை சக எதிரியாகக் கொள்ளாது அவளையும் உற்றத் தோழியாய்க் கருதி இரக்கம் கொள்வதும் அவளை அழகிய மலர் மாலையை அணிந்த அழகினையுடையவள் எனப் போற்றுவதும் அத்தலைவியிடத்தே விளங்கும் மனிதநேயப் பண்பைப் பறைசாற்றுவதாக உள்ளன.

ஆக,குடும்பத்தின் குலவிளக்காகத் திகழும் இல்லத்தலைவி இல்வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பதில் முழுசுதந்திர உணர்வு,குறைகளைச் சுட்டிக் காட்டுவதில் துணிவுடைமை,தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளல்,சுயசார்பு,மாறாத அன்புடைமை,மெய்ப்பொருள் காணும் அறிவுடைமை,இன்னாச் செய்தாரை ஒறுக்கும்
மனப்பாங்கு முதலான மாண்புகளை உடையவளாகப் பெண் காணப்படுதல் சாலச் சிறந்ததென கைந்நிலை பெண்குலத்திற்கு எடுத்துரைக்கின்றது.

Series Navigationபங்காளிகளின் குலதெய்வ வழிபாடுஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]