கொடி மரம்…

author
0 minutes, 1 second Read
This entry is part 8 of 15 in the series 5 டிசம்பர் 2021

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை

மே மாதம்… கத்தாரில் கனல் கக்கிக் கொண்டிருந்தது….  ஊரிலிருந்து வந்த  அலைபேசி அழைப்பை எடுத்தேன்.. 

 

மறுமுனையில்… யாஸீன்“ ஹலோ மச்சான்’ என்றான்

 

யாஸீன் தொடர்பில் இருந்த அந்த தருனத்தில் தோஹா நகரின் ஈச்சமரத்து சோலையாக காட்சித் தரும் கடற்கரையோர கார்னிச் சாலையில் நான் பயனம் செய்த டாக்ஸி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது…

 

மச்சான்…கட்டிக்கிட்டு இருக்கிற நம்ம  வூட்டுக்கு நாளைக்கு நிலை வைக்கப்போறோம்… துவா செய்ங்க …   யாஸீனின் குரலில் உற்சாகம் தெறித்தது.

 

மப்ரூக் (வாழ்த்துக்கள்) … மச்சான்..

டிசம்பரில் நீங்க வூடு குடியேறும்போது ஊருல இருப்பேன்…  இன்ஷா அல்லாஹ்… என்றேன்.. 

 

புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் தலை வாசலுக்கான மரச்சட்ட பொறுத்துவதைத்தான்  நிலை வைப்பது என்பார்கள், அது ஒரு வைபோகமாக ஊரில் கொண்டாடுவார்கள்.. பெரிய காப்லானில் (பீங்கான் தட்டு) பேரித்தம் பழம், சீனி, வாழைப்பழங்கள் வைத்து நிலை வைக்கும் சடங்குக்கு வருபவர்களுக்கு பகிரப்படும்.

 

முன்பெல்லாம் பெரும்பாலும் பர்மா தேக்கில்தான்  அந்த வாசல் நிலையை வைப்பது வழக்கம். கடந்த டிசம்பரில் ஊரில் இருக்கும்போது…

 

இப்பலாம். எவன் மச்சான்  தேக்கு மரம் வாங்கி  நெலை  வைக்கிறான்… எல்லாம் ரோஸ் வுட் தான் வைக்கிறானுவ.. என யாஸீன் அங்கலாய்த்தான்..

 

தேக்கின் விலை வின்னைத்தொடும் இந்த காலத்தில் செங்கோட்டையிலும், கேரளாவிலும் கிடைக்கும் செம்மரக்கட்டைகள்தான் தலைவாசல் கதவுகள் செய்ய பயன்படுகிறதாக யாஸீன் சொன்னதை அப்பொழுது மனதில் அசைபோட்டு கொண்டிருந்தேன்…

 

நான் பயனம் செய்த கர்வா (Karwa) டாக்ஸி   சிறு குன்று போல சைஸில் இருக்கும்  யானையின் அளவு உயரத்தில்  பள பளக்கும் விலை உயர்ந்த  ஓக் மர அரண்மனை கதவுகள் கொண்ட  கத்தார் நாட்டின் பாராளுமன்றமான அமீரி திவான் கட்டடடத்தை கடந்து கொண்டிருந்தது. அந்த கட்டடத்தின் உச்சியில் இராட்சத  அரை முட்டை வடிவ டூம் வின்னை முட்டிக் கொண்டு  நின்றது. இடது பக்கம்  கத்தாரின்  விஸ்தாரமான சிகப்பு, வெள்ளை நிறம் கொண்ட தேசியக் கொடி காற்றில் அசைந்து கொண்டிருந்ததை பார்த்தவுடன் , ஊரில் தொழுகைப்பள்ளி வெட்டையில் வருஷா வருஷம் ரபீயுல் ஆஹிர் (இஸ்லாமிய மாதம் ) மாதம் தூக்கி நடப்படும்  கொடிமரம் ஞாபகத்தில் வந்தது… கூடவே யாஸீனின் வாப்பாவான மீராசா மாமாவும்தான்…

 

மீராசா மாமாவுக்கு கொடிமரத்துக்குமான பினைப்பு அபூர்வமானதாகவே எனக்கு தோன்றும்…

ஆண்டுதோறும்  முகைதீன் ஆண்டவர் மவுலூது மாதத்தில்  மீராசா மாமாவின் வீட்டு வெட்டையில் (காலி இடம்) தவறாமல் கொடியேற்றம்  விஷேசமாக நடக்கும். பச்சை வர்ணம் பூசப்பட்டு “பள பள” வென உருண்டு திரண்டிருந்த தேக்கு  மரத்திலான முப்பது மீட்டர் நீளத்தில் ஓங்கி உயர்ந்த கொடிமரத்தை அன்னாந்து பார்த்தாலே எனக்கு அப்பொழுதெல்லம் உடல் ஒரு மாதிரி சிலிர்த்துக்கொள்ளும்..

 

மூங்கில் குச்சிகளால் கப்பல் போல சட்டம் செய்து கலர் கலராக துனியை சுற்றி முறுக்கி  அலங்கரித்து உச்சானி ( உச்சி) கம்பத்தில் சொறுகியிருப்பார்கள். அந்த கொடியலங்காரத்தில் மீராசா மாமாவின்  கைவன்னம் பளீரிடும்..

 

ஒரு சமயம்.. அந்த மூங்கில் கப்பலுக்கு கொஞ்சம் கீழே அறையப்பட்டிருக்கும் இரும்பு வளையத்தில்  வெள்ளை துனியில் பிறையை நறுக்கி ஒட்டு வைத்து தைக்கப்பட்டிருந்த பச்சை நிற கொடிகள் கோர்க்கப்பட்டு பறந்து கொண்டிருந்ததை காட்டி 

 “எவ்வளவு அழகா இந்த கொடி பறக்குது பாத்தியலா  மச்சான் ” என யாசீனிடம்  கேட்டேன்..

 

“மொய்தீன் ஆண்டவளோட கராமத் (மகிமை) ”  என்றான்… 

 

வடிவான கொடி காத்துல பறப்பதும் கூட கராமத்தா? என்று எனக்குள் எழுந்த வினாவை “தவ்பா”  (பாவமன்னிப்பு)  கேட்டு அடக்கிக் கொண்டேன். 

 

அப்பொழுது…  நான் சிறு குழந்தை.. மூனு நாலு வயசு இருக்கும். .. சூறை காற்று சுழன்றடித்து, ஓயாது பேய் மழை கொட்டிய ஒரு நாள் நடு இரவில்,  சீலப்போக்கு  (சீதபேதி நோய்) அதிகாமாகி  மயக்கமுற்று  தலை தொங்கி வதைபட்டு கிடக்கிறேன்..

 

பதறிய  வாப்பிச்சா  தான் உடுத்தி இருந்த வெள்ளை சேலையின் முந்தித் துனியை ஏந்தி ” யா முகையதீன்… கஞ்ச சிஸ்தி.. ஜஃப்தர் ஜைலானி.. பலா ,முஸீபத்து ( நோய் நொடி)  நீங்கி புள்ளைக்கு சதுர சுகத்தை கொடுக்க உதவி செய்யும் ”  என இறைஞ்சி  கேட்டார்கள்..

அந்த இருளில் கசிந்த  மங்களான முட்டைகுட்டு லாம்ப் ( முட்டை வடிவ இரவு விளக்கு) வெளிச்சத்தில் லேசாக கன் விழித்திருந்த  எனது நினைவுகளில் அது இன்றும் உறைந்து கிடக்கிறது..

 

அதற்கு பிறகு சீலப்போக்கு ( சீதபேதி)  மட்டுப்பட்டதற்கு இன்னும் உசுரு போகாமல் இருக்கும் நானே சாட்சி.. எல்லாம் வல்ல இறைவனின் அருள் அது.. வாப்பிச்சா கவுதுல் அஹ்லம் முகைதீன் ஆண்டகையைதான் துனை செய்ய அழைத்தார்கள்.  உலக  சூஃபிகளுக்கெல்லாம்  சிகரம்  அல்லவா…முகைதீன் ஆண்டவர்..

 

பகுதாதில் வாழும் ஞானி முகையதீனே..

ஞானி முகையதீனே..

 

என்ற பாடலில் இசை முரசு ஹனீபா சாப்  நீட்டி முழக்கி பாடும்..

 

என்னில்லாத காரணம் காட்டி..

இதமாய் எங்கும் தீன் கொடி நாட்டி..

 

என்று வரும் வரிகள் எனது மனதை மிகவும் வருடும்…

 

முகைதீன் ஆண்டவரின் “என்னில்லாத  காரணமான” அந்த  கராமத்துக்களை அறிய ஆவல் பிறக்கும்…

 

எங்களது ஆண்மீக குரு சேகுனா கொழும்பிலிருந்து ஊர் வந்து விட்டதை அறிந்து சீனி காக்காவுடன் தைக்காவுக்கு சென்றபோது “கராமத்”  கேள்வியை முன் வைத்தேன் 

 

” கறாமத்துண்டா என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறிய… அல்லாஹ்க்கு  உவப்பா  இரிக்கிற அவுலியாக்களுக்கு தந்து தனது ஹொதரத்தை (அற்புதம்) காட்டுறான்.. அது மூலந்தான் கறாமத் உண்டாவுது, விஷம் குடிச்சவன் உசுரு பொழைக்கிறது, சைத்தான் குனம் போக்குறது, மசக்க மருந்து ஒன்னும் இல்லாம ஆப்பரேஷன் செய்றதுண்டு எல்லாம் கறாமத்துகளையும் அவுலியாமாருவலால (இறை நேசர்கள் ) செய்ய முடியும்.

 

விஞ்ஞானத்துக்கு மிஞ்சிய விவரங்களை கேட்கும்  போது கொஞ்சம் “த்ரில்” ஆகத்தான் இருக்கிறது.. ” வலா ஹவல வலா குவ்வத்த” ..

இதுக்கு மேல இருந்தம்டா சேக்குனா ” டென்ஷனா ஆயிடுவஹா… வாங்க நடைய கட்டுவோம்… என்று காதில் கிசு கிசுத்தார் உடன் வந்த சீனி காக்கா…

 

மஞ்சக்கொல்லையில் இருந்து சேகுனாவை பார்க்க தலையில் பச்சை முண்டாசு கட்டி,  கண்ட மனி, பாசி மனி மாலைகளை கொத்தாக கழுத்தில் தொங்கவிட்டு கொண்டு, மரிக்கொழுந்து அத்தர் மணக்க தைக்கவுக்கு வந்த  ஜான் சாபும் கூட  ‘முகைதீனியா தரீக்கா, காதிரியா தரீக்கா என ஏகத்துக்கு ஆத்மஞான பீடங்களை கொண்ட மெய்ஞான தீபம் ஏற்றும் ஆண்மீக தளம் அல்லவா இந்த கரை…. என்று வியந்து சொன்னார்….

 

ஆண்மீகத்தின் உச்சியில் நின்று கும்மி அடித்த சூஃபிகள் நடமாடிய நிலம் அப்படிதான் களை கட்டுமாம்…

 

தைக்காவை விட்டு வெளியே வந்தபோது அந்தி  சாயும் நேரமாகி இருந்தது. செங்காரத் தெருவில், சொக்கநாதர் கோயில் அருகே நல்ல தன்னீர் கினற்றை ஒட்டிய  மீராச மாமாவின் பழைய  ஓட்டு வீட்டு வாசலில்  விளக்கு எரிந்து கொண்டிருப்பது மங்கலாக தெரிந்தது…

 

மஹ்ரிப் (மாலை) தொழுகைக்கு  பிறகு ” யா குத்பா”வை  ( புகழ் பா) முகாரி ராகத்தில் மெட்டெடுத்து பென்கள் கோரஷாக  ஓதுவது ரம்மியமாக காதில் வந்து மோதியது… அந்த கோரஷ் குரல்களில் முத்தாய்ப்பாக ஓங்கி ஒலித்த பென் குரல் ஒன்றின் சங்கீத ஆலாபனையில் இசை அரசி வானி ஜெயராமின் வசீகரம் வசப்பட்டு மனதை வருடியது… 

 

அப்பொழுதெல்லாம் மீராசா மாமாவின் வீட்டில் மவுலூதுக்கு (புகழ் பாடல்)  கொளுத்தி வைக்கும் சந்தனக்குச்சியின்  புகை  தெருவெங்கும் பரவி  சின்னக்கடையில் இருக்கும் எண்ணைக்கடை வரை நறுமனம் வீசி நாசியை இதமாக வருடும்..

செக்கில் எண்னையை கசக்கி பிழிந்து எடுத்துவிட்டு சக்கையாக   கடையில் ஓரமாக குவிக்கப்பட்டு கிடக்கும் புன்னாக்கு கூட இந்த நறுமன புகைபட்டு கஸ்தூரி வாசம் வீசும்.. 

 

எல்லாம் அவுலியாக்களின் மகிமை அது காற்றில் பரவி கரையை கடக்கும் சக்தி பெற்றது.. என்பார் மீராசா மாமா.

 

கடலில் முஸல்லா பாயை  (தொழுகை விரிப்பு ) விரித்து நடந்த அவுலியாமார்கள் வாழ்ந்த ஆண்மீக தளத்தில் காற்றும் வசப்பட்டு வாசனை தருவதும் கராமத்துதான்…

 

மவுலூது மாசம் தலைப்பிறைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே “கமால் பாச்சாவை கூப்புட்டுஉடு…

கொடிமரத்தை செதுக்கி உட்டு  பெயிண்ட் அடிக்க ஆளை  தருவிக்கனும்… 

நிலைகொள்ளாமல் பரபரப்பார் மீராசா மாமா..

 

கமால் பாச்சா கையோடு அழைத்து வரும் ஆசாரி சன்முகம் அப்பு கையில் மரத்தை ராவும் அறமும், மரப்பிசுறுகளை செதுக்கு உளியும் இருக்கும்.

அதுவரை மீராசா மாமா.. வீட்டு வெட்டையில் இருந்த தொழுகைப்பள்ளி வாசலில்  நிம்மதியாக சாய்ந்து  கிடந்த கொடிமரம் திடுமென விழித்துக் கொள்ளும்.. புத்துனர்ச்சி பெற்று அந்த மாதம் முழுவதும் நிமிர்ந்து நிற்கப்போகும் கொடிமரம் சன்முக அப்புவால் மராமத்து பார்த்து மரகத பச்சை வர்ணம் பூசப்பட்டு அதன் மவுசு கூடிக் கொள்ளும், அதே புத்துனர்வும், மகிழ்ச்சியும் மீராசா மாமாவுக்கும் ஒட்டிக் கொள்ளும்…

 

ஒரு முகைதீன் ஆண்டவர் மவுலூது மாதம் தலைப்பிறை அன்று…மழை நேரத்தில் மட்டுமே முளைக்கும் முட்டைக் காளானை  நறுக்கி கழுவிய வாப்பிச்சா..,  அடுப்பில் மன் சட்டியை ஏற்றி இஞ்சி , வெள்ளைபூண்டு போட்டு கானா எண்னையில் வசக்கினார்கள், மஞ்சள் சேர்த்து  சீரகத்தூளை லேசாக தூவி, நுரைவிட்டு தள தள வென கொதித்து கொண்டிருந்த சட்டியில்  கெட்டி தேங்காய்பாலை ஊற்றி  கிளறிகொண்டிருந்த   வாப்பிச்சா…

 

தம்பி ..அலுமாரில காசு இருக்கிது…எடுத்துக்கிட்டு போயி…கூனா தாணா கடையில செவப்பு கலருல 5 மீட்டரு சட்டைத் துனி வாங்கிட்டு வந்துறு .. கொடி தைக்கனும்.. உனக்கு நேந்தது …மீராசா நேத்தே கேட்டு உட்டுச்சு. என்றார்கள்…

 

குழந்தையில் எனக்கு ஏற்பட்ட சீலப்போக்கு குனமாக  வருடா வருடம் கொடியேற்றம் அன்று  சிவப்புக் கொடி தைத்து கொடிமரத்தில் ஏற்றுவதாக  வாப்பிச்சா வைத்த வேண்டுதல் அது.. 

வாப்பிச்சா கொடியை மறந்தாலும் மீராசா மாமா..நேர்ச்சைக்கான கொடிகளை தெரு ஜனங்களுக்கு நினைவூட்டி வாங்க தவறுவதில்லை. கொடிக்கனக்கு மீராசா மாமா..ஞாபகத்தில் துள்ளியமாக இருப்பது ஆச்சரியத்தை தரும்…

 

நம்ம கொடி உச்சியில பறக்கப் போவுது என்ற ஆர்வத்தில் ” துனி வாங்க ” கடைத் தெருவுக்கு சைக்கிளில் பறந்து சென்றேன். கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற  துடிக்கும் இன்றைய அரசியல் தலைவர்கள் இப்பொழுது கொள்ளும் அதிகார  தாகம் அப்பொழுது எனது சைக்கிள் சக்கரத்தின் சுழற்சியில்  இருந்தது.

 

நேர்ச்சைக்கான சிவப்புக் கொடியை கொண்டு போய் மீராசா மாமாவிடம் கொடுத்தால் வெறும் கையோடு அனுப்ப மாட்டார்கள்.. தேங்காய் சீவல் ஆங்காங்கு தென்படும் அரிசி மாவில் சுட்ட கனத்த ரொட்டியும் ,  மாவும் , சீனியும் இட்டு பிசைந்த சீனித்தொவையும் தந்து  அனுப்புவார்கள்.. சில நேரம் கொதிக்க கொதிக்க  தேங்காப்பூ போட்டு கிண்டிய தித்திக்கும் பாச்சோற்றை பீங்கானில் வைத்து யாஸீனிடம் கொடுத்து விடுவார்கள்.

 

ஊரெல்லாம் கொடிமரங்களில் பச்சை கொடி பறக்கும் போது  நமக்கு மட்டும்ஏன் சிகப்பு கொடி நேர்ச்சை .. என்ற சந்தேகம் ஏற்பட்டது..  மலக்குடலில் அலர்ஜி ஏற்பட்டு இரத்த கழிசல் (சீதபேதி) ஏற்படுவதை தான் ஊரில் சீல நோய்  என்பார்கள்.. நோய் குனமாகி சிவப்பு குருதி போக்கை கட்டுபடுத்த  நேர்ச்சையாகத்தான் சிகப்புக் கொடியாம்…. லேட்டாகத்தான் புரிந்து கொண்டேன்.. கேள்விகளுக்கு முடிவில்லை.. அது தொடர் கதையாகவேதான் இன்றும் இருக்கிறது…

 

நேர்ச்சைகள் சில சமயம் கிறுக்குத்தனமாகவும் தோன்றும். செய்வினையால் கிறுக்கு பிடித்து ’ ஏய் அப்பாஸ் மந்திரி’ என கூக்குரலிட்டு அந்தர் பல்டி அடித்து படாரென தலையை   தின்னையில் மோதும் மன நோயாளிகளுக்கு கேஸ் பார்க்கும்  ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் தர்காவில் நடைபெறும் கொடியேற்றம் அந்த வட்டாரத்திலேயே மிக பிரபலம். அதைவிட கேரளாவில் மிக மிக பிரபலம்.

 

ஆண்டுதோறும் இஸ்லாமிய  மாதமான துல்கஹ்தா தலை பிறை அன்று  யானைகள், குதிரைகள் ஊர்வலம் செல்ல, ஹத்தார்கள்  லெவ்வைகள் மற்றும் பக்தர்கள் புடை சூழ ஏர்வாடி தர்ஹாவில்  பாதுஷா நாயகத்தின்   கால்மாட்டு பகுதி கொத்தளத்தில் 100 அடி கொடிமரம்  நடப்பட்டு முதலில் செம்பிறை கொடியும், பின்பு பச்சைப்பிறை கொடியும் ஏற்றப்படும்.  ஏர்வாடி கொடியேற்றத்துக்கு மூன்று நாளைக்கு முன்பே .. தேங்காய் மீராசா மாமா அலங்கார வாசல் அருகே ரூம் எடுத்து தங்கி கொடியேற்ற ஏற்பாடுகளில் தர்கா லெவ்வைகளோடு சேர்ந்து தானும்  மூழ்கி விடுவார்கள்..

 

முதலில் ஏன் செங்கொடி ?  அவுலியாக்களும் கம்னியூஷத்தை போதித்தார்களோ.. குதர்க்கமான சந்தேகம் வந்தது.

 

தர்கா ஹத்தார் அஸனா லெவ்வையிடம்தான் கேட்டேன்..

 

ஏன் லெப்பை…செவப்புக் கொடிய முதல்ல ஏத்துறிய…

 

துருக்கியோட கொடி என்ன  சீதேவி .. என்றார் அஸனா லெவ்வை..

 

செவப்பு கொடி … என்றேன்

 

செம்பிறை கொடின்னு சொல்லனும் என்றார் அஸனா லெவ்வை…

 

800 வருஷத்துக்கு முந்தி  துருக்கி நாட்டு சக்கரவர்த்தி சுல்தான் சலாஹுதீன் அய்யுபியோட ரஹ்மதுல்லாஹியின்   அனுமதியின் பேர்ல பாண்டி நாட்டுக்கு கப்பல்ல  வந்தவொதான் குத்பு சுல்தான் செய்யது இப்ராஹீம் பாதுஷா நாயகம்..  

 

’ஸஹாதத் நாமாவுல’ இப்படித்தான் இரிக்கிது… விளங்கிக்குங்க .. என்ற விளக்கம் தந்தார் அஸனா லெவ்வை.

 

மீராசா மாமாவுக்கு ஏர்வாடி சரித்திரமெல்லாம் அத்துப்படி,,, வருடம் ஒரு முறை நாகூரில் இருந்து ஊருக்கு ஜான் சாபு தலைமையில் பாளையம் இறங்கும் பக்கீர்கள் குழு  தைக்கா திடலில் பப்பரப்புளி மரத்தின் அடியில் சுற்றி அமர்ந்து  “ஆயிரம் மசாலா ”  வை (இஸ்லாமிய சிற்றிலக்கிய நூல்) பிழிந்து தப்ஸ் (கொட்டொலி )அடித்து கதாகலோட்சபம் செய்வது வழக்கம். 

 

பக்கீர் ஷா ” ஏர்வாடி அவுலியா சரித்திரத்தையும் சேர்த்து சொல்லுங்க… மீராசா மாமாவின் கோரிக்கையை ஏற்று ஸஹாதத் நாமா  கதைகளையும் நவரசம் ததும்ப  அவ்வப்போது பக்கீர்மார்கள் சொல்லும்போது கேட்டு அதிசயதித்தது உண்டு….

 

அந்த மாதம் முழுவதும் ஊரில் மூலைக்கு மூலை முகைதீன் ஆண்டவருக்கு கொடியேற்றும் படலம்  நடக்கும் இடங்களில் எல்லாம் மீராசா மாமாவை பார்க்க முடியும்…ஊரில் அஹ்மது தெரு தைக்காவிலும், சேகப்பா தைக்காவிலும் ஏற்றும் கொடிமரங்கள்  நீளத்திலும், சுற்றிலும் மிகப்பெரியது….

 

செங்கொடி ஏந்திய புரட்சிகர சிந்தனை கொண்ட முற்போக்கு  கவிஞர் ஒருவர் .. ” இவ்வளவு நீள கொடிமரத்த தைக்கா கொத்தளத்துல ஏற்றுவதற்கு பதிலாக  அதை முறிச்சி எடைபோட்டு நாலு வீட்டுக்கு ஒரு தூக்கு  கொடுத்தா மக்கள் அடுக்களையில் எரிக்க பயன்படுத்துவதை தவிர வேறு என்ன புனிதம் இருக்கப்போகிறது… என்று முழங்கினார்.

சமையல் கேஸ் எல்லாம் வராத காலம் அது… 

 

என்ன கெப்பரானா பேச்சு.. அதபு கெட்டு(முறை தவறி) பேசுனா அவுலியா குறுக்க முறிச்சு போட்டுறுவாஹ.. என்றார் மீராசா மாமா

 

காலப்போக்கில் விதி  ஆட்டத்தை மாற்றிப் போட்டது… முற்போக்கு கவிஞர் நாத்திகராகி ஊரைவிட்டு தானாகவே விலகி மீண்டும் இந்த மன்னை மிதியாமல் மரித்துப் போனார்….  

 

கொடியேற்றல், கொடி இறக்கமும், ஹத்தம், பாத்திஹா, மவுலூது, கந்தூரி என்பதே தனது வாழ்க்கையாக்கி அலைந்த  மீராசாமாமா ராஜமுந்திரியில் ஒரு தர்கா கொடியேற்றத்துக்கு உதவப் போன இடத்தில் 70 அடி தேக்குமர கொடிக்ககம்பம் ஒன்று திடீரென முறிந்து  மேலே விழுந்ததில் குறுக்கு உடைந்து மரணத்தின் வாயிலை தொட்டு நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக ஒடுங்கி, நடை பினமாகி போனார்.

 

அத்துடன் கொடிமரமும் தன் களையிழந்து  வெட்டையில் கவனிப்பாறின்றி நெடுஞ்சான் கிடையாக படுத்துக்கொண்டு விட்டது..

 

இரண்டு வருடங்களுக்கு முன் பேசும்போது ’ கொடியேத்தம்லாம் இப்போ நடக்குதா” என கேட்டேன்

’வாப்பாவையே ஒழுங்க பார்க்க முடியல…கொடிமரத்தை யாரு பார்க்குறது.. என்றான் யாஸீன்

மறுநாள்  மீராசா மாமா மவுத்தான (இறந்த ) செய்தி வாட்ஸ் அப்பில் வந்தது…

 

இந்த டிசம்பரில் ஊருக்கு போய் இறங்கியதும்..  யாஸீனின் வூடு குடியேற்றத்துக்கு போக  செங்காரத் தெருவை நோக்கி நடந்தேன்.. முன்பு வெத்தலை கொடிகால்கள் அதிகம் நிறைந்திருந்த அந்த  செம்மன் சாலையில் கால் வைத்த போது… சொக்க நாதர் கோவில் வாசலில் கட்டப்பட்ட கூம்பு ஒலிப் பெருக்கியிலிருந்து  ” என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை” பாடலில் மதுரை சோமுவின் பக்தி ரசம் ததும்பும்  தழுதழுக்கும் குரல் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது…

 

யாஸீன் கட்டிய புது வீட்டை நெருங்கியதும்… வாங்க  மச்சான்.. உள்ளக்க வாங்க என வரவேற்றான்.. வீட்டுக்குள் நுழையும் முன் எதிரில் வெட்டையில் இருந்த  தொழுகைப்பள்ளி வாசலை நோக்கினேன்  நெடுஞ்சான் கிடையாக கிடக்கும் கொடிமரத்தை கண்கள் தேடியது…  சுற்றி முற்றி பார்த்தும் கண்களில் புலப்படவில்லை..

 

யாஸீன்… எங்கப்பா  கொடிமரத்தை கானமே….. மனம் துடித்துக் கொண்டிருந்தது…

 

அதா மச்சான்… தேக்குலாம்  இப்பா காசு கொடுத்து வாங்க முடியுமா… இங்க பாருங்க … கொடி மரத்தை அறுத்து நிலையும், கதவும் செஞ்சிட்டேன்… அழகா இருக்கிதா ? என புது வீட்டின்  தலைவாசலை காட்டினான்..

 

ஒருவித இறுக்கத்துடன் வாசல் படிகளில் ஏறினேன்… ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் மதுரை சோமுவின்  பக்திக் கண்ணீர்  இன்னும்  வடிந்து கொண்டிருந்தது…

 

வார்னிஷ் பூசப்பட்ட பளபளக்கும்  கண்ணாடி போன்ற வாசல் கதவில் மீராசா மாமாவின்  தண்டுவடம்… தெரிந்தது..

 

 

———————————————————————————

மஹ்மூது நெய்னா .எஸ்கீழக்கரை

மின்னஞ்சல் : naina1973@gmail.com

Series Navigationமாம்சம் – தரை –மார்புத்துணிஇலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *