கொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்

Spread the love

kbsகொடுமுடி காவேரி ஆற்றில் சலசலவென்று தண்ணீர் வழிந்து நழுவிச் சென்று கொண்டிருக்கிறது. ” கொடுமுடி கோகிலம் நடமாடிய வீதியல்லவா” என்றேன் நான். ” கேபி சுந்தரம்பாளைச் சொல்கிறீர்களா ” என்றார் நண்பர் .கொடுமுடி கோகிலம் என்ற புனைப்பெயரைச் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி. அநண்பரின் காலில் திடிரென்று சீமைக்கருவேலம் முள் குத்தியதால் ஏற்பட்ட வலியில் அவர் முகம் சிணுங்கியது. ”கொடுமுடி கோகிலம் காலத்தில் இந்தச் சீமைக்கருவேலம் மரங்கள் இருந்திருக்காது. ”அவரின் அம்மா குழந்தைகளைக்கூட்டிச் சென்று தற்கொலைக்கு முயன்ற போது “ அம்மா பாட்டுப் பாடி குடும்பத்தைக் காப்பற்றுவேன் “ என்று தற்கொலை முயற்சியைத் தவிர்த்து நாடக முயற்சிகளில் ஈடுபட்டவர் கேபி சுந்தரம்பாள். கிட்டப்பாவின் மரணத்திற்குப் பின்னால் எந்த நடிகருடனும் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கொண்டவர்.

கொடுமுடி மகுடேஸ்வரன் கோவிலின் மகிமைகள் பல சொல்லப்படுவதுண்டு.பேச்சு சுவாரஸ்யம் இல்லாதது போல் நண்பர் சீமைக்கருவேலம் முள் தந்த வலியில் இருந்தார்.

சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் இணைந்து நடித்த நாடகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. கிட்டப்பா ஏற்கெனவே திருமணம் ஆனவர் சுந்தராம்பாளை திருமணம் செய்து கொண்டார். கிட்டப்பா முரட்டுப் பிடிவாதக்காரராக இருந்த்தால் நெருக்கமான வாழ்க்கை வாய்க்கவில்லை. . ஒரு முள்ளாகவே நிலைத்து விட்டார். 1933-ம் ஆண்டு தனது 28-வது வயதிலேயே கிட்டப்பா நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார். தனது 25-ம் வயதிலேயே விதவையான கேபிஎஸ், ‘பிற ஆடவரோடு இணைந்து நடிப்பதில்லை’ என்ற முடிவோடு பொதுவாழ்க்கையில் இருந்து மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார். பின்னர் மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் காங்கிரஸின் பிரச்சாரத்தில் இணைந்து கொண்டார்..

மணிமேகலை (1940), ஒளவையார் (1953), பூம்புகார் (1964), திருவிளையாடல் (1965), மகாகவி காளிதாஸ (1966), உயிர்மேல் ஆசை (1967), துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973).. என்று பல வெற்றித்திரைப்படங்களில் கேபிஎஸ் நடித்திருக்கிறார். 1980-ல் கேபிஎஸ்-ஸின் மரணம் நிகழ்ந்தது.

இது கொடுமுடி நாதர், வடிவுடையம்மை, பெருமாள் மற்றும் தாயார் சந்நிதிகள் கொண்ட கோவில்.இங்குள்ள நடராஜர், தன் வலது காலைத் தூக்கி இருப்பதற்கு மாறாக, இரு கால்களையும் தரையில் வைத்துள்ளார். கதிரவனின் கிரணங்கள் (ஒளி) பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் நான்கு நாட்களுக்கு, சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளை ஒளிரச்செய்கிறது.

கொடுமுடி கொங்கு நாட்டின் முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாகும். இது கயிலாயத்தின் சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுந்தரர் இங்கு நமச்சிவாயப்பதிகத்தை இயற்றினார். பல இலக்கியங்கள் இக்கோயிலின் புகழைப் பாடுகின்றன. இக்கோவில் தமிழகத்தின் கொங்குநாட்டின் ஏழு தேவாரத் தலங்களில் ஆறாவதாகக் கருதப்படுகிறது.

இங்கு கோவில் கொண்டுள்ள பிரம்மனும், திருமாலும் ஈசனை வழிபட்டதால் திரிமுர்த்தி கோவில் எனப்படுகிறது. அகத்தியர் இங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் நடந்த சண்டையில், ஆதிசேடனின் தலையில் இருந்து ஐந்து ரத்தினங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றில் சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும், மரகதம் ஈங்கோய்மலையிலும், நீலக்கல் பொதிகையிலும், மாணிக்கம் வாட்போக்கியிலும், வைரம் இங்கும் விழுந்தனவாம்.

அகத்தியர் புவியின் நிலை காக்கத் தென்னகம் வந்த புராணம் பாண்டிக்கொடுமுடியுடன் தொடர்புடையதாகும்; அவரது கமண்டல நீர், கீழ்த்திசை உழவோர் நலன்காக்க, இங்கிருந்து காவிரியாக ஓடியதாக நம்பப்படுகிறது..அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமான் மேல் திருப்புகழ் பாடியுள்ளார். இங்குள்ள வன்னி மரம் பூக்காமலும், காய்க்காமலும் இருப்பது ஓர் அற்புதமாகும். 3000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வாழ்ந்து வரும் மரம். ஆனால் சீமைக் கருவேலமரங்கள் அடர்த்தியாக பல இடங்களில் விரிந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

****

கருவேல மர ஒழிப்பு இயக்கம் சார்ந்த கூட்டம் ஒன்றுக்குச் சென்று வந்தது பற்றி நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் சொன்னபோது அதிர்ச்சியுற்று அவரின் பேச்சு தடுமாறியதைக் கண்டேன். சின்ன வயதில் கருவேலங்குச்சிதான் பல் விளக்க பயன்பட்ட்தையும் அவரின் கிராம வாழ்க்கையில் கலப்பை, அரிவாள், கோடாரி , ஜன்னல், பலகை போன்றவை செய்ய அந்த உறுதியான மரம் பயன்பட்டதையும் சொல்ல ஆரம்பித்தார். வேலமரத்தி காய்கள் ஆடுமாடுகளுக்கு நல்ல உணவு என்றார். வெயிலுக்கு நிழலாகவும் இருக்கும் என்றார்.நான் சீமைக்கருவேலம் என்று திருத்திக் கொண்டபின் அவர் பெருமூச்செரிந்ததை உணர்ந்தேன். சீமைக்கருவேலமரத்திற்கு டெல்லிமுள், வேலிகாத்தான், உடைமரம், வேலிமரம், முள் மரம், வேலிக்கருவை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ரவுடி மரம், நிலத்தரகன் மரம் எனவும் அழைக்கப்படுறது. தேசிய மரம் என்றே அழைக்கப்படும் வகையில் எங்கும் நிறைந்து உள்ளது.

தமிழகத்தில் 10 ச.மீ இன்றாக இருந்த இவை இன்று 4 ச. மீக்கு ஒன்றாக வளர்ந்து ஆக்கிரமித்து விட்ட்து. வெவ்வேறு பெயர்களில் அதன் விசுவரூபம் பயமளிக்கிறது. சீமைக் கருவேல மரத்தின் சல்லி வேர்கள் நிலத்தடி நீரை பூமிக்குள் விடாமல் மேல் பகுதியிலேயே நிறுத்தி தேங்க வைக்கும். நிலத்தடி நீர்மட்டம் என்பது அறவே இல்லாமல் செய்து விடும்..

நீர்நிலை பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களின் இலைகள் மூலம் அந்த நீர்நிலைகள் நச்சுத்தன்மை உடையவைகளாக மாறுகின்றன. தண்ணீரில் உள்ள உயிர்வாழும் தவளை, மீன்கள், நண்டு உட்பட நீர்வாழ் உயிரினங்களுக்கான சுவாசக் கோளாறை உற்பத்தி செய்து வாழ முடியாமல் சாக வைக்கின்றன அல்லது வெளியேறுகின்றன. நீர்நிலைகளில் வாழும் பாம்புகளுக்கு தேவையான மேற்ச்சொன்ன உணவு கிடைக்காததால் அவையும் வெளியேறுகிறது. ஒரு மிகப்பெரிய உணவு தொடர சங்கிலி அறுபடுகிறது. நீராதாரம் என்ற வகையில் அழிவு ஏற்படுகிறது.

40 அடி உயரம் வரை கூட வளரும் தன்மையுடைய சீமைக்கருவேல மரங்கள் நிலத்தில் `ஆழத்தில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி வாழும் நீர்வளம் உள்ள பகுதியில் மட்டுமின்றி வறண்ட நிலங்களில் கூட வேர்பிடித்து வளரும் தன்மை கொண்டது. நிலத்தில் நீர் இல்லா விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி வாழும். வேர் செல்லும் அனைத்துப் பகுதியிலும் நீராதாரத்தை வேகமாக உறிஞ்சும்.. அதன் கீழ் வேறு எந்த தாவரங்களும், மரங்களும், விலங்குகளும், பறவைகளும் உயிரினங்களும் எவையும் வாழ முடியாதபடி சீரழிக்கிறது.

அவற்றில் எந்த பறவைகளும் அமர்வதும் இல்லை. கூடுகட்டி வாழ்வதும் இல்லை. மிகக் கூர்மையான அடர்த்தியான முட்களின் காரணமாகவே பறவைகள் கூடுகட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யவும் முடிவதில்லை. நீரில் வாழும் பறவைகள் இதன் முட்கிளைகளில் சிக்கி இறக்கின்றன. வளரும் வேளாண்மை நிலங்களை சும்மா தரிசாகப் போடுவதால் பறவைகளின் எதிர்காலம் என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாகிவிட்ட்து.

நாட்டுக்கருவேல முட்களில் கோரைக்கிழங்குகளைக் கோர்த்து அழகு பார்த்திருக்கிறேன். பனையோலை காற்றாடிகளுக்கு அது ஆதாரமாக இருந்திருக்கிறது. அதன் காய்களை கால்களில் கட்டி சலங்கை போல் ஆடியிருக்கிறேன். அதன் நிழல் தூரத்து வெயிலுக்கு ஆதரவுதான்.சீமை கருவேல முட்கள் விசத்தன்மை வாய்ந்தவை.

தமிழகத்தில் இருந்து சீமைக் கருவேல மரம் இன்று டெல்லி, குஜராத், அஸ்ஸாம் என அனைத்து பகுதியிலும் உள்ளது. கேரளம் மட்டும் விழிப்புணர்வோடு இருந்து சீமை கருவேலம் தவிர்ர்க்கப்பட்டு வருகிறது.. அதன் நிழலில் செடிகள், மரங்கள் வளராது. கட்டி வைக்கப்படும் ஆடுமாடுகளும் மலட்டுத் தன்மை கொண்டவையாக மாறும். தொடர்ந்து தங்கி இருப்பவர்களுக்கு குழந்தை பேறு இன்மை ஏற்படுகிறது. பால்சுரக்கும் கால்நடைகள் பால் சுரக்கும் திறன் குறைந்து விடுகிறது வேலிக் கருவையின் இலை, தழைகளை எந்த விலங்குகளும் சாப்பிடுவதில்லை.மக்கி மண்னையும் நீர்நிலைகளையும் பாதிக்கிறது. மெக்சிகோ, கரீபியன் தீவு, ஆஸ்திரேலியாவில் இருந்து விதைகளாக கொண்டு வந்து அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்து பரவியது. இன்று தமிழநாடு முழுவதும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது கடந்த ஆண்டுகளில் போதிய மழையில்லாத காரணத்தால் தற்போது இந்த மரங்கள் வேலிகளைத் தாண்டி வயல்வெளிகளிலும் பரவிவிட்டன. தமிழகத்தில்

. இதன் ஆணி வேர்கள். வறட்சியை தாங்கி வளரும் பிற தாவரங்களுக்கு வேலி பயிராக இந்த மரங்களை வைத்திருந்தால், அந்த செடிகளுக்கு அளிக்கக்கூடிய தண்ணீரை உறிஞ்சிக்கொள்கின்றன. வேலி பயிராகக்கூட இந்தசீமைக் கருவேலமரங்களை பயன்படுத்த முடியாது.. சீமைகருவேல மரங்கள் இருக்கும் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் என்பது அறவே இல்லாமல் போய்விடுகிறது.

விவசாயம் செய்து வந்த ஒருவர் தற்போது கரி வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் அடுப்பில் சுடுதண்ணீர் காய்ச்சுவதற்காக கரி வாங்கப் போன ஒரு முறை இதெல்லாம் எங்கிருந்து வாங்குகிறீர்கள் என்றேன். “ அந்த ரவுடி வேலைதா “

“எந்த ரவுடிங்க “

” தெரியாதா..”

“ ரவுடி மரம்ன்னு சொல்வாங்க அதெச்சொல்றீங்களா “

”ஆமா . இதெல்லா என்ரத் தோட்டத்திலெ இருந்து புடுங்கி போட்டதுதா. சீமெண்ணை ஊத்தி எரிச்சதுதா “ என்றார். அதிர்ந்து போய் விட்டேன். பிடுங்காமல் விட்டதால் பெரும் மரமாகவே வளர்ந்து ஏகமாய் பரவி விட்டதாம் அவர்கள் பகுதியில். சக விவசாயிகளிடமிருந்தும், அவர்களின் பழைய விளை நிலங்களிடமிருந்தும் கரியை வாங்குவதாகச் சொன்னார். பழைய விவசாயிகள் இப்படி கரி வியாபாரிகளாக மாறி விட்டனர். சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து விட்டால் அதைச் சரி செய்ய நிறைய செலவு செய்ய வேண்டுமாம். முழுக்க பிடுங்காமல் விட்டு விட்டால் துளிர்த்து இருந்தாலும் லேசான மழையில் உயிர் பிடித்து பரவி விடுமாம். சீமைக் கருவேல மரம் ஒழிக்கப் பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு இருந்தாலும் நடைமுறைபடுத்தப்படவில்லை.. ஊராட்சி மன்றங்களின் கிராமசபையிலும் சீமைக் கருவேலமரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தீர்மான அளவில் உள்ளன.

தன்னார்வ அமைப்புகள் தற்போது இந்த நடவடிகைகளில் இறங்கியுள்ளதன் அடையாளமாகவே திருப்பூரில் அந்தக் கூட்டம் இருந்தது. இது எல்லா ஊர்களுக்கும் இயக்கமாகப் பரவ வேண்டும். சீமைக் கருவேலம் பரவுவது மிக எளிதாக உள்ளது.இந்த இயக்கத்தைப் பரப்புவது அவ்வளவு எளிதில்லை என்றாலும் முயல்வது நல்ல விளைவுகளைக் கொடுக்கும்.சீமை கருவேல இல்லாத பிரதேசங்களை உருவாக்குவது முன்னணி சிக்கல்களில் ஒன்றாக மாறிவிட்டது.

கொடுமுடியில் படர்ந்து விரிந்திருந்த சீமைக்கருவேலம் மரங்களினடர்த்தி அச்சம் கொள்ளவே செய்தது.நண்பர் அந்த விசமுள்ளின் வலிமைபற்றியேச் சொல்லிக் கொண்டிருந்தார்.காவேரியின் சலசலப்பு அவருக்கு மகிழ்ச்சி தரவில்லை.

Series Navigationசெம்மொழிச் சிந்தனையாளர் பேரவை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)தேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்