கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்

நானும் பல்லியும் கரப்பானும்
சாம்பல் மற்றும் கறுப்பு நிற
கொட்டுப்பூச்சிகளும் ஒட்டடைகளும்
என இது நகர்கிறது…………………….

என் விடியலின் போது
நீ தூங்கிக் கொண்டிருக்கக்கூடும்…
உன் பக்கத்தில்
என்னால் கற்பனை செய்ய முடியாது போன
எவனோ ஒருவன்………….

என்
நிலவை உனக்கு பரிசளிக்க நினைத்தால்
உன்
கடற்கரையில் உங்கள் இருவரின் நிழல் உலவும்…
ஆனால் காற்று வீசாது….
அலைகளும் சண்டை பிடிக்காது
மூச்சு வாங்கி முழி பிதுங்கி நிற்கும்.
என்னையும்
உன் போல் மாற்ற நீ எடுக்கும் முயற்சி…..

சங்கிலிகள் பிணைப்பதற்கு முன்னால்
தரம் பார்க்கவும் தரம் பிரிக்கவும்
நினைக்கிறேன் –
உன்னுடையதைப்போல மீண்டும் ஒரு தோல்வி…….

வர்ணனை அதிகம் தான்…..
சிந்தனையும் எங்கோ செல்கிறது……
எதற்காக இடைஞ்சல் என்று
ஒதுங்கிக் கொள்ளுதல் தகும்……..
ஆனால்
பாழாய்ப்போன கிணற்றில்
போட நினைத்த மனது
சிறகு வேண்டிப் பறக்கிறது…………

இரவுப் பொழுதின் சுவர்களின் முன்னே
நட்சத்திரக் கோலம்
இன்னும் மறையவில்லை………….

புரியாத புதிரை விடுவிக்கக்கோரி
விண்ணப்பம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது…….

வானம் குருகி வார்த்தை பெருக்கிறது……

மண்டையோடும் மயிரும் தவிர்த்து
பாரம் கூடி தலைவலி கிளம்பிற்று………..

அறிவின் வளர்ச்சியோ என்று
மயங்காதே மனமே……….
‘கிரேக்க’ நாகரிகம்
வளரும் இடமா – இந்தச் சுருக்கங்கள்
நிறைந்த மூளை.

கேயெல்.நப்லா(நப்லி)
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

Series Navigationவெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )கவுட் Gout மூட்டு நோய்