கோசின்ரா கவிதை

Spread the love

கோசின்ரா

1

இந்த உலகம்

உன்னைப்போல நட்பாயிருக்கும் போது

காலத்தின் நிலத்தில்

விதையாக இருந்தேன்

இந்த உலகம் உன்னை போல

புன்னைகைக்கும் போது

சில கரங்கள் நீருற்றின

இந்த உலகம் உன்னை போல

பேசத்தொடங்கும் போது

நான் வளர்ந்தேன்

இந்த உலகம்

உன்னைப்போல பருவங்களை மாற்றிகொண்ட போது

பூக்க தொடங்கியிருந்தேன்

காய்களும் கனிகளுமாய் மாறினேன்

இந்த உலகம் உன்னை போன்று

மாறத்தொடங்கிய போது

வேகமாக காற்றடித்தது

பழங்கள் உதிர்ந்தன

இலைகள் உதிர்ந்தன

என்னவானது

இந்த உலகம்

ஏன் என்னை கைவிட்டு விட்டது

உன்னை போல.

 

 

2

புத்தக காட்சியில்

நதியை வாங்கிச் சென்றவர்கள்

நதியில் படகுகளைவிடவில்லை

அந்த நதியில் அலைகளில்லை

அந்த நதியில் நீரோட்டமில்லை

சிலர் கூண்டுகளை வாங்கி சென்றார்கள்

அந்தக் கூண்டிலிருந்து

பறவைகளை திறந்து விடவில்லை

அவைகள் கூண்டிலே அடைப்பட்டு கிடந்தன

சிலர் இறந்த காலங்களை

வாங்கிச் சென்றார்கள்

அந்த கோப்பைகள் காலியாக வில்லை

முழுவதுமாய் குடிக்கப்படாமல்

மிச்சமிருக்கின்றன இறந்த காலம்

கற்பனைகளை

முத்தமிட்டு வாங்கிச்சென்றவர்கள்

உதடுகள் மீட்கப்படவில்லை

கனவுகளை வாங்கி சென்றவர்கள்

உறிஞ்சி குடிக்கவேயில்லை

வரலாற்றை வாங்கிச் சென்றவன்

வேத காலத்தில்

நடந்துக்கொண்டிருக்கின்றான்

அடுத்த புத்தக காட்சிக்குள்

இந்த நூற்றாண்டுக்குள் நுழைந்து விடுவானா

ஆகாயங்களை வாங்கிச் சென்றவன்

தான் ஒரு ஆகாயமாக விரிவதாக

யாரெல்லாம் மேகமாக முடியுமோ

வாருங்களென்று அழைப்பு விடுகின்றான்

போன வருடம் பேய்களை

சந்தோஷமாக வாங்கிச்சென்றவன்

இந்த வருடம் நாய் வளர்க்கும்

வித்தையை வாங்கி செல்கிறான்

காந்தியையும் கோட்சேவையும் ஒரே பைக்குள்

போட்டுச் சென்றவன்

எதிரே வருகின்றான்

ஒரு சமயம் அவன் காந்தியை போல சிரிக்கின்றான்

ஒரு சமயம் கோட்சே போல நமஸ்கரிக்கின்றான்

நான் ஹே ராம் கற்றுக்கொண்டு விட்டேன்

3

ஒரு பறவையை உருவாக்கும் போதே

யாரென்று உங்களை காட்டிக்கொள்வீர்கள்

பறவையின் கழுத்தை வரையும் நீங்கள்

தலையையும் உடலையும் பிரித்து வைத்திருக்கிறீர்கள்

பிறகு சிறகுகளை இணைக்கிறீர்கள்

கால்களை ஒட்டவைக்கிறீர்கள்

பறவைக்கு பிடித்த நிறத்தில்

வண்ணம் தீட்டுகிறீர்கள்

அது பறவையென்று புரிய வைக்கிறீர்கள்

அதற்கு முன்பாக

வானத்தை தயாராக வைத்திருக்கிறீர்கள்

பறவைக்கு தெரியாமல்

மறைந்திருக்கும் பலத்த இடி மின்னல்களளை

அப்புறபடுத்துகிறீர்கள்

பறக்க விடுவதற்கு முன்

ஒரு பாடலை சொல்லித்தருகிறீர்கள்

பறவையை பறக்க தயாராக இருக்கிறது

நீங்கள் ஏன் கூண்டு வரையவில்லை

நீங்கள் ஏன் பறவையின் ஆசையை கேட்டீர்கள்

நீங்கள் ஏன் பாடலை சொல்லித்தந்தீர்கள்

நீங்கள் இந்த உலகம் சுதந்திரமானது என நினைக்கிறீர்கள்

ஆனால் நீங்கள் ஏன் சோகமாக இருக்கிறீர்களென

தெரிய வில்லை

உங்கள் பறவைதான் பறந்துவிட்டதே

இல்லை அது திரும்பிக்கொண்டு இருக்கிறது

ஏன் திரும்பி வருகிறது

எனக்கு என்ன செய்தி கொண்டு வருகிறது

திரும்பி வந்த பறவை சொன்னது

பறப்பது கடவுளின் செயல்

சிறகுகள் கொடுத்த கடவுளுக்கு நன்றி

வானத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி

மொழியை கொடுத்த கடவுளுக்கு நன்றி

எப்படி கற்றுக்கொண்டாய் பறவையே

யார் கடவுளை சொல்லிக்கொடுத்தது

பறவை சொன்னது

உன் தூரிகையென்றது

அதுதான் சொன்னது

கடவுள் நேரில் வர மாட்டார்

உன் ரூபத்தில் வந்திருக்கிறார் என்றது

என்னை பார்த்து

யாரேனும் இந்த பறவையை பார்க்கும் போது

புரிந்துக்கொள்ளுங்கள்

இந்த பறவை என்னுடையது

அதன் கருத்து என்னுடையதுதல்ல

வானம் என்னுடையது

அதன் மாயை என்னுடையதல்ல

பாடல் என்னுடையது

அதில் புகுந்திருக்கும் ஆன்மீகம் என்னுடையதல்ல

4

மூச்சு திணற ஓடி வந்த பிறகு

கோடை காலம்

காகிதத்தை கொடுத்து சொன்னது

இது ஒரு மரத்தின் கடைசி வாழ்வு

என்ன செய்யப்போகிறாய்

காதலை எழுத இளைஞன் கேட்டான்

கணவனுக்கு எழுத மனைவி கேட்டாள்

தற்கொலை எழுத ஒருவன் கேட்டான்

காகிதத்தின் ஆசையை கேட்டேன்

காகிதம் சொன்னது

நான் நனைய வேண்டும்

நான் என்பது கிளைகள்

நான் என்பது இலைகள்

நான் என்பது வேர்கள்

நான் ஒரு கப்பல் செய்தேன்

தன்ணீரில் நனைந்த படி சென்ற

அந்தக் கப்பலில்

எல்லோரும் பயணம் செய்தனர்

அது கப்பல் என்று

தன்னை நினைத்துக்கொண்டதில்லை

இன்றைக்கும்

மரமென்றே ஞாபகம் வைத்து மிதக்கிறது

சில நேரங்களில் அதிலிருந்து

சத்தம் வரும்

அது அலைகளின் சத்தமென்பார்கள்

எனக்குத்தெரியும்

அது கிளைகளின் சத்தம்

துள்ளிக்குதிக்கும்

பட பட சத்தம் வரும்

அது மீன்களின் சத்தமென்பார்கள்

எனக்குத்தெரியும்

அது மரத்தின் கிளையில் கூடு கட்டிய

ஒரு பறவையின் சிறகடிப்பு.

கப்பலுக்குள் மரம்

மரத்துக்குள் கப்பல்.

 

 

 

 

 

 

 

 

 

 

5

நான்கைந்து வருடங்களுக்கு முன்னால்

ஒரு சிற்றிதழில் பிரசுரமான

கவிதையை திறந்துக்கொண்டு வந்தாள்

அந்தக் கவிதை பெண்ணை பற்றியதல்ல

பிரசுரமான பிறகு எந்தக் கவிதையையும்

மீண்டும் சந்திப்பதில்லை

வந்தவள்

கவிதையிலிருந்த நதியை பற்றி சொன்னாள்

அழுக்கடைந்த

அந்த நதியில் மூழ்கி

ஒரு நாகரீகத்தை கண்டெடுத்தாள்

அந்த நாகரீகத்தின் நகரத்தில்

ஒரு வீடு கட்டி குடியேறினாள்

நினைக்கும் போதெல்லாம்

அந்த வீட்டில் சந்திப்போம்

வார்த்தைகளால் கட்டப்பட்ட வீட்டை

ஒவ்வொரு சந்திப்புக்கு பிறகும் மாற்றியமைக்கிறாள்

அதன் ஒலி ஒளி அமைப்பு அவளுடையது

அங்கும் வீசும் பூக்கள் அவளுடையது

அவள் புன்னகைகளை

சன்னல்களாக மாற்றியிருக்கிறாள்

கண்களை கதவுகளாக வைத்திருக்கிறாள்

தன் மனசை அறைகளாக வைத்து

மலைகளிடமிருந்து வாங்கி வந்த பச்சையை

அறை முழுவதும் தூவியிருக்கிறாள்

தன் கூந்தலை கூரையாக்கியவள்

தன் அழகை உட்புற ஓவியமாக்கியிருக்கிறாள்

அந்த வீட்டில்

அவளைத் தவிர யாருக்கும் அனுமதியில்லை

அங்கே நானும் யாரையும் கூட்டி செல்ல முடியாது

ஒரு கவிதை வீட்டை கட்டியிருக்கிறது

அந்த வீட்டுக்குள்

ஒரு உலகம் நிலவை

சுற்றிக்கொண்டிருக்கிறது

பூமி போல

தன்னைத்தானும் சுற்றிக்கொள்கிறது.

 

 

 

Series NavigationCaught in the Crossfire – another English Book – a novelவாய்ப்பு