“ கோலமும் புள்ளியும் “

Spread the love

ஸ்ரீ


கிராமத்துத் தெருக்களைப்
பசுஞ்சாணி கரைத்துக் குளிப்பாட்டி
அம்மாவும் பெண்ணும்
அக்காவும் தங்கையும்
தோழியும் தோழியும்
போட்டி போட்டுப் போடும் கோலங்கள்
அஞ்சுக்கு எட்டு புள்ளி
பத்துக்குப் பதினைந்து புள்ளி
அதற்கும் மேலே
இருபத்தஞ்சு கூட போகும்
ஒன்றோடொன்று புள்ளிகளை இணைத்தும்
ஒவ்வொரு புள்ளியையும்
நடுநடுவே வைத்தும்
கோடுகள் இழுத்தும்
கொடிபோல வளைத்தும்
கோலங்கள் கிளர்ந்தெழும்
தாமரைப்பூ மலரும்
தாழம்பூ சிரிக்கும்
கிளிகள் பறக்கும்
கிருஷ்ணன் கால் தெரியும்
கலர்ப்பொடியை நிரப்பி
பார்டர்கள் போட்டு
நடுமத்தியில்
கைநிறைய பசுஞ்சாணி வைத்துப்
பூசணிப்பூச் சொருகி
“அம்மா பாரு என் கோலம்” என்பதற்குள்
அழித்துவிட்டுப் போகின்ற
அக்கிரமக்காரத் தம்பியைத்
துரத்திச் சென்று போய் அடி பின்னியவள்
புகுந்த ’ஃபிளாட்’டின் வாசல்
ஒட்டியிருக்கின்ற
ஸ்டிக்கர் கோலத்தை
வைத்தகண் வாங்காது பார்த்து
மௌனமாய் முணுமுணுக்கிறாள்
“எட்டுக்குப் பதினைந்து….”

Series Navigationபிரசவித்துச் சென்ற அக்காவின் அறைதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்