கோவை ஞானியும் நிகழும் கவிதையும்

லதா ராமகிருஷ்ணன்

தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை ஞானி நடத்திய ‘நிகழ்’ இதழுக்கு முக்கிய இடம் உண்டு. பின்னர் வந்த, middle magazines என்று கூறப்படும் பல இதழ்களுக்கு இருந்த நிதிவள ஆதாரங்கள், பெரிய நிறுவனங்களின் பின்புலம் நிகழுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

நிகழில் என்னுடைய கவிதை, கட்டுரை சிலவற்றை வெளியிட்டார் கோவை ஞானி. நிகழில் அச்சேறும் சில கட்டுரைகள் குறித்த எதிர்க் கருத்துகளை எழுதி யனுப்பினால் அதையும் வெளியிடுவார். அதற்கான தன் பதிலையும் அளிப்பார். மாற்றுக் கருத்தாளர் களை மட்டமாக நினைக்க மாட்டார். நிகழில் கண்ணி யம் குறையாத காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து இடம்பெறும்.

கருத்துகளுக்காக கவித்துவத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டார் அவர்.

என்னுடைய கவிதைகளை தொகுப்பாக்கவேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து கூறிவந்தார். தானே வெளியிடுவதாகக் கூறினார்.(30 வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவர் இதை எப்படிச் சொன்னார் – தபால் அட்டையிலா என்பது நினை வில்லை. ஆனால், அவர் சொன்னது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது!) அப்போதெல்லாம் ‘ நான் இறந்த பிறகு என் கவிதைகளை ஒற்றை அர்த்தத்தில் மற்றவர்கள் இஷ்டத்துக்குப் பொருள்பெயர்ப்பதை நான் விரும்பவில்லை. என்னை மீறி நான் வாழக் கூடாது’ என்றெல்லாம் சொல்லி மறுத்துவிடு வேன்.

1980களிலிருந்தே எழுதிவந்தாலும் பின்னர் 2000-த்தில் தான் என் முதல் தொகுப்பு வெளிவந்தது. “ நீ இருக்கும்போதும் யாரும் உன் கவிதையைப் பேசமாட்டார்கள், இறந்த பிறகும் பேசமாட்டார்கள். கவலைப்படாதே” என்று நட்பினர் கொடுத்த தைரியத்தில் எழுத்தாளர் மா.அரங்கநாதன் சொல்லி கலைஞன் பதிப்பகம் என்னுடைய கவிதைகளை வெளியிடுவதாகக் கூறியபோது அதற்கு ஒப்புக் கொண்டேன்! திரு.கோவை ஞானியிடம் பிரதியை அனுப்பியபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

கோவையில் எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நூல் குறித்து கருத்துரை வழங்க நான் கோவை சென்றிருந்தபோது திரு.ஞானியைப் போய்ப் பார்த்தேன். மனமார வரவேற்று பேசிக்கொண்டிருந்தார்.

WELFARE FOUNDATION OF THE BLIND என்ற, நான் அங்கம் வகிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக ளுக்கான அமைப்பின் வழியாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 21 பேர் – வெவ்வேறு துறைகளில் சிறப்பாக இயங்கிவருபவர் களிடம் அவர்களுடைய வாழ்க்கை, பார்வையின்மை, பார்வையிழப்பு காரணமாக சந்தித்த சவால்கள் முதலியவற்றைப்பேசும் கட்டுரை வாங்கி தொகுப்பாக்கும் முயற்சியை மேற்கொண்டபோது திரு. கோவை ஞானியிடமும் ஒரு கட்டுரை கேட்டேன். வாழ்வின் நடுவில் நான் பார்வையிழந் தவன் – என்னிடம் கேட்கிறீர்களே, பொதுவாக நான் என் குறைபாடு குறித்து எழுத விரும்புவதில்லை’ என்று கூறினார்.(ஒருவகையில் பிறவியிலேயே பார்வைக்குறைபாடு இருப்பதை விட வாழ்வின் இடையில் பார்வை பறிபோவது அதிகமாக ஒருவரை சமூகரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நிலைகுலையச் செய்வது என்பார்கள்) ‘இல்லை, உங்களுடைய அனுபவங்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கும் என்பதற்காகத் தான் கேட்டோம்.’ என்றபோது விரிவான கட்டுரை எழுதியனுப்பினார். அந்தக் கட்டுரையை எங்கள் எளிய அஞ்சலியாக இப்போது தட்டச்சு செய்து இங்கே வெளியிடத் தோன்றுகிறது.

சமீப ஆண்டுகளில் திரு. கோவை ஞானியின் பல நூல்கள் புதுப்புனல் பதிப்பகம் மூலம் வெளியாகி யிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

…………………………………………………………………………………………
நெஞ்சில் உள்ளது ஞானம்

கோவை ஞானி

[மறுபார்வை என்ற தலைப்பிட்ட பார்வையற்ற 21 மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையைப் பேசும் கட்டுரைகள் உள்ள தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. வெளியீடு: WELFARE FOUNDATION OF THE BLIND. வெளியான வருடம்: 2006 ]

பார்வையற்றவன் என்று, சிற்சில சமயங்களில் தவிர, பெரும்பாலான சமயங்களில் நான் உணர்ந்ததில்லை. 53-வது வயதில் நான் பார்வையிழந்தேன். அதுவரையில் நான் இளமைக்காலம் முதலே, வாழ்வியல் பற்றி நிறையக் கேள்விகளோடு ஏராளமாகப் படித்தேன். தமிழ் என்றும், ஆங்கிலம் என்றும், வரலாறு என்றும், அறிவியல் என்றும், மெய்யியல் என்றும் நிறையவே படித்தேன். மார்க்சியத்தோடு எனக்கு ஆழ்ந்த உறவு இருந்தது. எனக்கு வாய்த்த ஆசிரியர்கள், நண்பர்கள் அற்புதமானவர்கள். கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். என் பெற்றோரும், உற்றாரும் அருமையான மனிதர்கள். கிராமத்தின் இயற்கைச் சூழலோடும், உழவர்கள் மற்றும் நெசவாளர்களோடும் நான் ஒன்றி இருந்தேன்.

இளமை முதலே என் தேசம் பற்றி எனக்கு அக்கறை இருந்தது. காந்தி, நேரு, நேதாஜி முதலியவர்களிடம் பெரும் மரியாதை கொண்டிருந்தேன். தெய்வம் பற்றி எனக்குள் இடைவிடாமல் கேள்விகள் எழுந்தன. என் துயரங்கள் என்னோடு மட்டும் தொடர்புடையவை அல்ல. என் துயரங்களுக்கு என்ன காரணம் என்று தொடர்ந்து பல திசைகளிலும் தேடினேன்.

மார்க்சியம் மூலம் எனக்குக் கூடியவரை தரமான விடைகள் கிடைத்தன. கட்சி மார்க்சியரோடு நான் உறவு கொண்டிருந்த போதிலும் கட்சிக்குள் என்னால் இருக்க முடியவில்லை கட்சிக்கு என்னை விட்டுக்கொடுக்க எனக்கு முடியவில்லை. குறுகிய வாழ்க்கை எனக்குப் போதாது. விரிவான வாழ்க்கை தான் எனக்குத் தேவையான விடுதலையைத் தரும்.

படிக்கிற காலத்தில் நான் தமிழை ஆழமாகக் கற்றேன். தமிழ் அறத்திற்கும், மார்க்சியத்திற்கும் இடையில் என்னைப் பொறுத்தவரையில் முரண்பாடு இல்லை. இரண்டும் எனக்குள் ஒரு புள்ளியில் இணைந்தன. நண்பர்களோடு இணைந்து இதழ் நடத்தினேன். ரஷ்ய மார்க்சியம் எங்களுக்குப் போதவில்லை. மாவோவின் மார்க்சியம் எங்களை ஈர்த்தது. மேற்குலகிலும் மார்க்சியம் புதிய திசைகள் தேடி வளர்ந்தது. இவற்றை எல்லாம் நாங்கள் பள்ளி மாணவர்களைப் போலத் தேடித்தேடிக் கற்றோம். விவாதித்தோம். எழுதினோம்.

வானம்பாடிக் கவிதை இயக்கத்தில் நானும் பங்கு பெற்றேன். நானும் கவிதை எழுதினேன். திறனாய்வில் ஈடுபட்டேன். கவிதை என்பது அதன் உள்ளாழத்தில் மெய்யியலாக இயங்குவதைக் கண்டேன்.திறனாய்வு என்பது இறுதியில் மனித விடுதலையை இலக்காகக் கொண்டிருப்பதை அறிந்தேன். மனிதன் இயற்கை யோடும், வரலாற்றோடும், இறுதியில் பிரபஞ்சம் என்ற பேரியக்கத்தோடும் தனக்குள்ளும், புறத்திலும் உறவுடையவன். இந்த உறவின் நிறைவில் தான் ஒரு மனிதன் கவிஞனாகிறான். மெய்யியலாள னாகிறான். மார்க்சியத்திற்குள் இந்த மெய்யியல் இருக்கிறது. தமிழ் மெய்யியல் என்பதும் இது அன்றி வேறில்லை.

பிரபஞ்சத்தின் பேரியக்கம் எனக்குள்ளும் இடம்பெறு கிறது. பிரபஞ்சம் என்னையும் படைக்கிறது. நானும் படைக்கிறேன். இந்த இயக்கம் அன்றி கடவுள் என வேறொன்றுமில்லை.

சோவியத் ஒன்றியத்தில் சமதர்மம் தகர்ந்தபோது முதலில் எங்களுக்கும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. சோவி யத் யூனியனில் சீர்குலைவுகள் எங்கிருந்து தொடங் கின என்பது பற்றிமுன்பே நாங்கள் அறிந்திருந்தோம். தகர்வின் காரணங்கள் எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தன. மார்க்சியத்தின் அடிப்படைகளி னுள்ளும் ஆய்வுகள் தேேவை என்று புரிந்துகொண் டோம். மார்க்சியத்தின் உள்ளுறையாற்றலைக் கண்டறிந்து மேம்படுத்த வேண்டும், விரிவுபடுத்த வேண்டும் இதைச் செய்ய முடியும்.

தமிழக சூழலில் மார்க்சியத்தின் போதாமை என்று கண்டு சிலர் மார்க்சியத்திலிருந்து விலகி பெரியாரியக்கத்திற்குப் போனார்கள். தலித்தியமும் பெண்ணியமும் தம்மளவில் முழுமையானவை என்று கண்டார்கள். எங்களுக்கு இதில் உடன் பாடில்லை.

மார்க்சியத்திற்குள் வந்த முதலாளியம் மார்க்சியத் தைக் குறுக்கியது போலவே பெரியார் இயக்கத் தினுள் ளும் புகுந்த முதலாளியம் வெறும் சாதி வாதம், மதவாதம், என்ற அளவில் குறுகிப் போனது. ஒட்டுமொத்தமான மனித விடுதலையின் ஒரு கூறு தான் தலித் விடுதலை. அதைப் போலவே பொரு ளியல் முதலிய பல களங்களிலும் நிலவும் ஆதிக்கத் திலிருந்து மனித சமூகம் பெறும் விடுதலையின் ஒரு கூறு தான் பெண் விடுதலை. இவற்றின் விடுதலையை தனித்துச் சாதிக்க முடியாது. தனிவகைப் போராட்டங் களும் தேவை தான் என்ற போதிலும் முழுமையான போராட்டத்தின் ஒரு பகுதியாக இவை இருந்தாக வேண்டும் மார்க்சியத் தின் விரிந்த எல்லைக்குள் இவையும் இன்றிய மையாத கூறுகள். பின் – நவீனத் துவம் ஏற்படுத்தும் அதிர்வின் மூலம் மார்க்சியம் தன்னைச் செழுமைப் படுத்திக் கொள்ள இயலும்.

இவ்வளவும் பேசிய பிறகு, இனித்தான் என் கண்பார்வை குறைவு பற்றிப் பேச முடியும். 53-ம் வயதில் நீரிழிவு காரணமாக கண்பார்வை பாதிக்கப்பட்டது. டாக்டர் ராமமூர்த்தி லேசர் மருத்துவம் செய்தார். எனினும் பார்வை இழப்பு தவிர்க்க இயலாததாக இருந்தது. ‘எனக்கு என்ன நேர்ந்தது? புரியும்படி சொல்லுங்கள்’ என்று மருத்துவரைக் கேட்டேன். விழித்திரையில் ஏற்பட்ட பழுதை இனி சரிப்படுத்த முடியாது என்பதை விளக்கமாகக் கூறினார். உடனடியாக நானும் ஏற்றுக்கொண்டேன். அவருக்கே வியப்பாக இருந்தது.

என் பள்ளித் தலைமையாசிரியரும் நான் தொடர்ந்து வேலை பார்க்கலாம் என்றார். எனக்கு உடன் பாடில்லை. நிறைய எழுத வேண்டும் என்று முன்பே நினைத்துக்கொண்டிருந்தேன். இது ஒரு வாய்ப்பாக எனக்குத் தோன்றியது. வேலையிலிருந்து விலகி னேன்.

உதவியாளரை வைத்துக்கொண்டு படிப்பதோடு நிறைய எழுதினேன். இதழ் நடத்தினேன். கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன் ஓய்வில் லாமல் இன்றுவரை உதவியாளரோடு படிக்கிறேன் எழுதுகிறேன், எனது நூல்கள் சிலவற்றை நானே வெளியிட்டேன்.காவ்யா மணிவாசகர் பதிப்பகங் களும் எனது நூல்களை வெளியிடுகிறார்கள்.

ஆங்கில நூல்களைப் படிப்பதற்கான உதவியாளர் கிடைப்பதில்லை. இந்த இழப்பை நான் பெரிதாக உணர்கிறேன். எனினும், என் நெருங்கிய நண்பர்க ளைச் சந்திக்கும்பொழுதெல்லாம் நிறையக் கேட்கிறேன். மொழிபெயர்ப்புகளைப் படிக்கிறேன், தற்பொழுது ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன. பெரும்பாலான நூல்களைப் படிக்கிற வாய்ப்பில்லை. 1988 வரை நான் படித்தவை கூடியவரை என்னைத் தாங்குகின்றன. புதிய அணுகுமுறைகளைக் கற்கிற பொழுதெல்லாம் பழையவற்றை மறுவாசிப்பு என்ற முறையில் என்னைப் புதுப்பித்துக்கொள்கிறேன். இதில் நான் குறை வைத்துக்கொள்ளவில்லை. என் வழியில் நான் செய்ய இன்னும் நிறைய இருக்கிறது. இறுதிவரை செய்வேன். இந்த வகையில் நான் நிறைவோடு தான் இருக்கிறேன்.

கண் பார்வை இருந்த காலத்தில் இரவு இரண்டு மணி வரை கூடப் படிப்பேன். தேடித் தேடி நூல்கள் வாங்கிப் படிப்பேன். புதியவற்றை மனம் திறந்து கற்பேன். 1988க்குப் பிறகு உலகம் மிகவும் விரிந்தி ருக்கிறது. ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன. இவற்றோடு எனக்குத் தொடர்பு பெருமளவு இல்லை. இதழ் நடத்துவதன் மூலம் நண்பர்களை நிறைய எழுதச் சொல்கிறேன். சிலர் எழுதுகிறார்கள். பலர் எழுதுவதில்லை. இதழ் நடத்துவதன் மூலம் என் குறையைச் சரிப்படுத்திக்கொள்ள நான் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கே பயன் தருகின்றன.

மையத்திலிருந்து நான் இன்னும் விலகிவிட வில்லை. நண்பர்கள் சிலரை நான் இழந்துவிட்டேன். சிலர் என்னை விட்டு விலகிச் சென்றார்கள். காரணம் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக இன்று தமிழ்ச் சூழலும் சரி, இந்திய மற்றும் உலகச் சூழலும் சரி, எவருக்கும் நிம்மதி தருவதாக இல்லை. நம்பிக்கைக்கு அதிக வாய்ப்பில்லை. எனினும் ஏதாவது செய்யத்தான் வேண்டும்.

இப்படி நான் நிறைய எழுதுகிறேன். நண்பர்களோ டும் விவாதிக்கிறேன். முன்பு ஒரு சமயம் நான் எழுதினேன். கண்பார்வை இல்லாத எனக்குள்ள பார்வைத்தெளிவு, கண் பார்வையுடைய பலருக்கு அறவேயில்லை. பணம், பதவி, அதிகாரம், சாதி, மதம், கட்சி என்ற வகைகளில் தனக்குள் இறுகிய வனுக்கு வாழ்க்கை பற்றி, வரலாறு பற்றி, இயற்கை பற்றி, கலை பற்றி, பிரபஞ்சம் பற்றி என்ன பார்வை இருக்க முடியும்? இவர்கள் தான் உண்மையில் பார்வைக்குறைவு உடையவர்கள், அல்லது, பார்வையே இல்லாதவர்கள். மனிதத் தரத்தில் இவர்கள் தாழ்ந்தவர்கள். இவர்களிடம் அன்பு இல்லை. இவர்களுக்கு வாழ்வின் அழகு தெரியாது. அர்த்தம் தெரியாது.

மனிதன் என்ற முறையில் வாழ்பவன், பிரபஞ்சம் அளவுக்குத் தன்னை விரித்துக்காண வேண்டும். உயிர்களோடு நல்லுறவு தேவை. உலக வரலாற்றுக் குள் இவன் தன்னைக் கரைத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய பேறு பெற்றவன் தான் உண்மையில் பார்வையுடையவன். எனக்குள் இந்தப் பார்வை குறைவில்லாமல் இருக்கிறது. சில வசதிக்குறைவு கள் என்னை வருத்துகின்றன. எனினும் இவற்றுக் காக என்னை நான் இழந்துவிடவில்லை.மக்களுக்கு நான் இன்னும் என்னால் இயன்றதையெல்லாம் செய்கிறேன். என் வசதிக்குறைவையும் மீறிச் செய்கி றேன். என்னைப் போதிய அளவுக்கு நண்பர்கள், மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் என் வருத்தம்.

53 வயது வரை கண்பார்வையோடு இருந்து, கிராமங் கள் நகரங்கள்,மலைகள், கடல்கள், வானம், பூமி என பலவற்றைப் பார்த்து வண்ணங்கள், வடிவங்களில் மனத்தைப் பறிகொடுத்து மனைவி, மக்கள், உறவி னர்கள், நண்பர்கள் என பலர் முகம் பார்த்து,நிறையப் படித்து, வரலாறு, வாழ்க்கை எனப் புரிந்துகொண்டு, தத்துவம் பயின்று வரலாற்றில் வாழ்கிற வாழ்க் கையை எனக்குள் வரித்துக்கொண்டு இப்படி எத்த னையோ வழிகளில், திசைகளில் உறவு கொண்டு நான் பெற்றது பலமான ஆளுமை.

பிறப்பு முதலேயே கண்பார்வை இல்லாத அல்லது 5 அல்லது 10 வயதில் கண்பார்வை இழந்த பத்தாயிரக் கணக்கான என் சகோதரர்கள், சகோதரிகள், குறைந்த அளவுக்கே கற்று, தொழில் பயின்று, குறைந்த கூலிக்கு வேலை பார்த்து பலரிடம் அவமானப்பட்டு வாழ நேர்ந்திருக்கிற வாழ்க்கை என்னைப் பெரிதும் வருத்துகிறது. பிரபஞ்சத்தோடு, வரலாற்றோடு, இயற்கையோடு தன்னைக் கரைத்துக்கொள்கிற வாழ்க்கைப்பேறு இவர்களில் பெரும்பாலோருக்குக் கிட்ட வாய்ப் பில்லை என்பதும், நெடுந்தொலை விற்கு விரிந்த வாழ்க்கை வாய்ப்பதில்லை என்பதும் என் வருத்தம்.

என் பார்வைக்குறைவு பற்றி யாரேனும் கேட்டால் எனக்கு எரிச்சல் வருகிறது. என் பார்வைக் குறைவை நான் ஒப்புக்கொள்வேன். எனக்கான தேவைகளைக் குறைந்த அளவுக்கேனும் உங்களால் சரிப்படுத்த இயலுமானால் உங்களிடம் நான் என்ன எதிர்பார்க் கிறேன்? நீங்கள் பார்ப்பதை எனக்குச் சொல்லுங்கள் உலகில் என்னவெல்லாம் நடைபெறுகின்றன என்பது பற்றிச் சொல்லுங்கள். இவற்றைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். இன்னும் சில ஆண்டுகளேனும் நான் நிறைவோடு வாழ இந்த உதவியைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். இதனால் உங்கள் வாழ்க்கையும் நிறைவு பெறும்.


Series Navigationமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டுபெருந்தொற்றின் காலத்தில்