சகவுயிர்

 sahauyir

 

 

பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள்.

தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி.

வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல்

அவளை அதிகமாய் அழச்செய்தது.

“இல்லை, என் வள்ளி தான் எனக்கு வேண்டும்…

எத்தனை வலித்திருக்கும் அவளுக்கு..”

என்று திரும்பத்திரும்ப அரற்றினாள் சிறுமி.

சுற்றிலுமிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பாயிருந்தது.

‘குவிக்ஃபிக்ஸி’ல் தலையைக் கழுத்தோடு விரைந்தொட்ட முயன்றார் தந்தை. முடியவில்லை.

சற்றே தொங்கிய பொம்மைத்தலையை யொருவர்

அவசர அவசரமாக அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டார்.

’உச்சகட்ட வன்முறைக்காட்சிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ள முடியும்…’

தலையற்ற வள்ளியின் உடலை மார்போடு அணைத்துக் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தாள் சிறுமி.

‘பாவம், வள்ளிக்குப் பசிக்குமே’ என்ற பரிதவிப்பில்

அள்ளிய உணவுக்கவளத்தை அவளால் உண்ணமுடியவில்லை.

அவளுக்குஇன்றேபுரியவைத்துவிடுவதுநல்லது;

பொம்மைகள்மனிதர்களுக்கென்றேதயாரிக்கப்படுபவை.

அவற்றிற்குஉயிர்கிடையாது….

”யார்சொன்னது? வள்ளி எத்தனை நல்லவள் தெரியுமா?

வெள்ளிக்கிழமைக்கு அடுத்துவரும் விடுமுறைகளில்

எனக்குச் சொல்வதற்காகவே எங்கிருந்தெல்லாமோ

அதிசயக்கதைகளை அள்ளியெடுத்து வருவாள்….

அழுதுகொண்டே கூறினாள் சிறுமி.

“கண்ணைத் துடைத்துக்கொள்-

யாரேனும் பார்த்தால் கிறுக்கி என்பார்கள்_”

பொறுக்கமுடியாமல் முதுகில் ஒன்று வைத்தாள் தாய்.

“ஐயோ….” என்று வீறிட்டாள் சிறுமி.

’கையால் அடித்ததற்கே இத்தனை வலிக்கிறதே…

கழுத்து வெட்டுப்பட்ட நேரம் எத்தனை துடித்திருப்பாள் வள்ளி …’

பள்ளிக்குக் கிளம்பும்போதெல்லாம் கையாட்டி விடைதருவாள்.

வள்ளல் அவள் – தனக்குத் தரப்படும் இனிப்புகளையெல்லாம்

எனக்கே தந்துவிடுவாள் பெருவிருப்போடு.

இனி என்னோடு தட்டாமாலை சுற்ற யார் இருக்கிறார்கள்….’

மனம் பதறிய சிறுமியின் விழிகளிலிருந்து பெருகிய கண்ணீர்

சிற்றோடையாய், நதியாய் கடலாய் பெருகிக்கொண்டேயிருந்தது.

ஆழிசூழ் உலகில் அன்றும் இன்றும் என்றும்….

அனைத்தும் தனக்கே படைக்கப்பட்டதாய் பாவிக்கும் அனேகரும்

அந்தச் சிறுமியும் வள்ளியும் அன்னபிறரும்

”அது வெறும் பொம்மை”

”இல்லை அது வள்ளி. என் அன்புத்தோழி. அதுவே உண்மை”.

ஏங்கியழுதுகொண்டிருந்த சிறுமியைப் பார்த்து

ஏதாவதொரு காட்டி லொரு மானோ முயலோ

எண்ணிக்கொண்டிருக்கக் கூடும் _

மனிதர்கள் குழந்தைகளாகவேயிருந்துவிட்டால் எத்தனை நன்றாயிருக்கும்..

 

 

 

 

0

 

 

Series Navigationஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ்ஒரு கல்யாணத்தில் நான்