சந்திப்போம்

 

 

அமீதாம்மாள்

உன்னைப்போல்

நீ மட்டும்தான்

புரிந்திருக்கிறாய்

சந்திப்போம்

 

உன்னை ஒதுக்கி

உறவுகளுக்காய் அழுகிறாய்

சந்திப்போம்

 

ஒன்றை நூறாக்கத் தெரிந்தவன்

ஆனாலும் ஒன்றுக்குள் வாழ்பவன்

சந்திப்போம்

 

பழங்கள் தரும்போது

நீ இருக்கப்போவதில்லை

ஆனாலும் நீர் வார்க்கிறாய்

சந்திப்போம்

 

உளிவலி தாங்கி

சிற்பமானவன் நீ

சந்திப்போம்

 

சுளை காக்கும் முள் நீ

அறிவேன்

சந்திப்போம்

 

ஒரு வலியில் பிறந்து

யாருக்கும் வலிக்காமல் வாழ்பவன் நீ

சந்திப்போம்

 

குருத்துக்காக

வாழை நீ சாய்ந்தாய்

சந்திப்போம்

 

கறையான் வேகம் நீ

சிலந்திப்பூச்சி முயற்சி நீ

ஆமை பொறுமை நீ

சந்திப்போம்

 

சந்திரனின் கறைகள்

வெறுக்கப்படுவதில்லை

சந்திப்போம்

 

இலக்குகளென்று

நீ நினைத்ததெல்லாம் பொய்

உண்மை இலக்கு நானே

சந்திப்போம்

 

அழக் கண்ணீர் வேண்டும்

அமைதிக்கு நான் வேண்டும்

சந்திப்போம்

 

கடலில் கலந்த நதி

முகவரி இழந்தாலும் நிரந்தரம்

சந்திப்போம்

 

உன்னைத் தொட்ட மழைத்துளி

எங்கிருந்து வந்ததென்று நானறிவேன்

சந்திப்போம்

 

நான் சந்திக்குமுன்

உன் பயணங்களை முடித்துவிடு

எனக்குப்பின்  உனக்கென்று

பயணங்களில்லை

நான் பெருநெருப்பு

நீ சுடர்

 

அமீதாம்மாள்

 

 

Series Navigationகவிதைஎழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !