சான்றோனாக்கும் சால்புநூல்கள்

 

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

கிழிந்திட்ட   துணிதன்னைச்   செம்மை   யாக்கக்

கிழிச்சலினைத்   தைக்கின்ற   ஊசி   போல

கிழிந்திட்ட   மனந்தன்னை   நல்ல நூல்கள்

கீழ்வான   வெளிச்சம்போல்     செம்மை   யாக்கும்

வழிமாறிப்   போகின்ற நீர்த   டுத்து

வளமாக   மாற்றுகின்ற   அணையைப்   போன்று

விழிமறைக்கும்   அறியாமை   இருளை   ஞான

விளக்கேற்றிப்   போக்குவதும்   நூல்கள்   தாமே !

 

அறிவுதனை   வளர்க்காமல்   விலங்கைப்   போல

அலைவதுவும்   தின்பதுமே   வாழ்க்கை   யன்று

அறிவிலியும் வாழ்கின்றான்   அந்த   வாழ்க்கை

அறிஞர்கள்   போற்றுகின்ற   வாழ்க்கை   யாமோ

நெறியோடும்   பண்போடும்   வாழ்வ   தற்கும்

நேர்செயல்கள்   சிந்தித்தே   ஆற்று   தற்கும்

அறிவார்ந்த   நூல்களினைப்   படிக்க   வேண்டும்

அதன்வழியில்   நடப்பதற்கே   முனைய   வேண்டும் !

 

நூல்கள்தாம்   நமக்குற்ற   நல்ல   நண்பன்

நூல்கள்தாம்   சூழ்ச்சிசெய்யா   உண்மை   நண்பன்

ஆல்விழுது   அடிமரத்தைக்   காத்தல்   போல

அருநூலே   நம்வாழ்வைக்   காத்து   நிற்கும்

கால்உடலைத்   தாங்கிவழி   நடத்தல்   போல

கற்றிட்ட   நூல்கள்தாம்   வழியைக்   காட்டும்

சால்புதரும்   சிறப்பான   நூல்கள்   கற்றே

சாகாத   சான்றோராய்ப்   புகழில்   வாழ்வோம் !

Series Navigationஎழுத்துப்பிழை திருத்திஎன்னைப்போல