சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்

 

பின்நவீனத்துவ நோக்கில் “வெளியிலிருந்து வந்தவன் “
 
முனைவர் ம இராமச்சந்திரன்
 
 
பின் நவீனத்துவப் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதை. சமூகத்தால் எதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறதோ பின் தள்ளப்படுகிறதோ சுரண்டப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவமதிக்கப்படுகிறதோ அசிங்கமாகக் கருதப்படுகிறதோ அவற்றையெல்லாம் நவீனத்துவத்தின் விளைவுகளாக முன்வைக்கும் சூழலே பின்நவீனத்துவம். இந்தக் கண்ணோட்டத்தின் மூலமாக இச்சிறுகதையைச் சிந்திக்கும்போது சமூகத்தில் இன்னொரு பரிணாமத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 
 
சிறுவயது நண்பர்களாக இருந்து, விளையாடி, கேலி பேசி, குடித்து, இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து சமூகத்தின் புலனாகாத அதிகாரத்தை எதிர்கொள்வதற்கு ஒன்றுபட்ட இரண்டு இதயங்களின் சந்திப்பில் இக்கதை நகர்கிறது. ஒவ்வொரு இயலாமையிலும் ஏற்படுகின்ற சமூகக் கோபத்தைக் குடித்துப் போதை ஏறி தங்களுக்குள் உளறி தீர்க்கும் நபர்களாக இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்களின் வாழ்க்கை வேறு வேறு திசைகளில் செல்கிறது. மனைவி குழந்தைகளோடு இவனது வாழ்க்கை புரிதலோடும் பதற்றத்தோடு சென்று கொண்டிருக்கும் சூழலில் அவனது வீட்டிற்கு வருகிறான் நண்பன். பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு தனது முகவரியை எந்த நபருக்கும் கவனமாக வழங்காமல் இருந்த சூழலில் ஒரு குறிப்பிட்ட கணத்தில் குடி போதையில் இவனுக்கு மட்டும் வழங்கியிருக்கிறான்.
 
அலைந்து திரிதலின் ஊடாகவும் மனக்குமுறலை ஒரு கட்டமைப்புக்குள் வெளிப்படுத்த முடியாமலும் குடிக்கு ஆட்பட்டவனாக இவனது வாசல் தேடி வந்திருக்கிறான் நண்பன். இரவு பொழுதில் நிற்க முடியாமல் தடுமாறும் போதையில் அவனைக் கண்ட நண்பனுக்கு மனமெல்லாம் பதற்றம். தனது மனைவி என்ன நினைப்பாளோ? என்ன சொல்லுவாளோ? என்று, இருந்தாலும் குடித்துவிட்டு வந்து இருக்கிறவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் அவளும் அவனுக்குத் துணை புரிகிறாள். இப்படியே இரவு கழிந்தது.
 
போதையிலிருந்து இன்னும் மீண்டுவரவில்லை. இவனை இப்படியே விட்டுவிட்டு செல்வதும் ஏற்புடையதாக இருக்காது. அக்கம் பக்கத்து வீட்டார் என்ன நினைப்பார்கள், ஆகையால் இன்று விடுமுறை எடுத்து விட எண்ணுகிறான். பிறகு எழுந்த நண்பன் மீண்டும் போதையில் அப்படியே தூங்கி விடுகிறான். நேரம் கடந்து செல்கிறது. போதை தெளிகிறது. தன்னைத்தானே உணர்ந்து கொள்கிறான். சட்டையெல்லாம் அழுக்காக இருக்கிறது. இதனைக் கண்டு வியப்படையாமல் உரிமையோடு தனது  நண்பனின் சட்டை ஒன்றை வாங்கி போட்டுக்கொண்டு ‘தொந்தரவுக்கு மன்னிக்கவும் தங்கச்சி, போயிட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். தன்னைத் தங்கச்சி என்று கேட்ட மன உணர்வில் இருந்து மீளாமல் அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்க்கிறான். அவள் சொல்கிறாள் ‘பாவங்க அவரு’. இத்துடன் இந்தக் கதை முடிவடைகிறது.
 
சமூகச் சிக்கல்களால் குடிபோதையில் தள்ளாடி நின்றவனைக் கதையின் முதன்மைப் பாத்திரமாக வைத்திருப்பது பின் நவீனத்துவத்தின் முக்கிய வெளிப்பாட்டு உத்தி. அதேநேரத்தில் அவன் எதற்காகக் குடித்தான் என்று எந்த விளக்கமும் சொல்லாமல் வாசகனை அவனுக்குள் சிந்திக்கத் தூண்டுவது பின் நவீனத்துவத்தின் முக்கியமான செயல்பாடு. குடும்பம் என்ற சமூக அமைப்பு மனிதர்களை அரவணைத்துக் கொள்வதும் குழப்பமான செயல்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்துவதும் குடும்ப அமைப்பின் சுரண்டலையும் அராஜகத்தையும் சமூகத்தின் பொது மேடைக்குக் கொண்டு வருவதும் முக்கியமானது. இங்கே பல இடங்களில் மனைவி என்ன நினைப்பாளோ என்ற இவனின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறார். ஏனென்று சொன்னால் குடும்ப அமைப்பு சிதையும் போது அல்லது குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறும் பொழுது இந்தச் சமூகத்தை எதிர்கொள்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. 
 
அந்தச் சவாலின் சிக்கல்களை முரண்பாடுகளை பின்நவீனத்துவம் வெளிக்கொணர எண்ணுகிறது. கதையாசிரியர் இங்கே குடிகாரனைச் சமூக மதிப்பீடுகளிலிருந்து மாற்றி இந்தச் சமுதாயத்தில் இவனுக்கும் வாழ்வதற்குத் தகுதி உண்டு. நம்மைப்போல இவனும் மனிதன்தான் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார். நண்பனின் மனைவியைப் பார்த்துத் தங்கச்சி என்று ஒலிக்கும் பொழுது ஏற்படுகின்ற நிதானம் அவனது உன்னதத்தை வெளிப்படுத்துகிறது. ஏதோ ஒரு ஓரத்தில் விழுந்து கிடப்பதை விட நண்பனின் வீட்டு வாசல் அவனுக்கு உயர்ந்ததாகப் படுகிறது. அந்தவகையில் அவனது சமூக அக்கறை என்பது இங்கு சிந்திக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உரிமையோடு ஒரு பொழுதைக் கழிக்க என்னும் மனநிலையானது நம்பிக்கையும் அதே நேரத்தில் தன்னால் யாருக்கும் சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையோடு கூடிய செயல்பாட்டையும் எங்கும் காண முடிகிறது. 
 
நண்பனுக்கு ஏற்படுகின்ற பதற்றத்தைவிடவும் அவனது மனைவி இந்தச் சூழலை மிக இலகுவாகக் கையாள்வதைக் காணும்போது பெண்கள் சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் பெண்களும் ஒடுக்கப்பட கூடியவர்களாக இருக்கிறார்கள் அதேநேரத்தில் குழந்தைகளும் ஒடுக்கப்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் ஏதோவொரு ஒவ்வாமையில் சமூக நெருக்கடியில் குடித்துவிட்டு வாசல் வந்த கணவனின் நண்பனுக்கும் இவர்களுக்குமான ஒரு ஒத்திசைவை இங்குக் காட்ட எண்ணுகிறார் கதாசிரியர்.
 
இச்சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் நினைக்கின்ற விரும்புகின்ற வாழ்க்கை அமையாத போதும் அமைந்துவிட்ட போதும் அவனுக்கு ஏற்படுகின்ற மனப்பதற்றமும் மனச் சிக்கல்களும் பின்நவீனத்துவத்தின் கருப்பொருள்கள். அந்தவகையில் வெளியிலிருந்து வந்தவன் என்ற மனப்பாங்கு மாறி அண்ணனாக திரும்பி செல்கிறான் அவன். இங்கு மனிதம் வெளிப்பட்டு நிற்கின்றது. நவீனத்துவத்தின் கற்பிதங்கள் தவிடுபொடியாகும் தன்மையைக் காணமுடிகிறது. இவ்வாறு குடிகாரன் என்கிற பண்பாட்டு விளிம்புநிலை மனிதனையும் மனிதனாக எண்ணுகின்ற பின்நவீனத்துவ மனப்பான்மையைக் கதையின் ஊடாக உணர்ந்து கொள்ள முடிகிறது. நவீனத்துவம் கூறும் தன்னை மட்டும் நேசி தனது குடும்பத்தை மட்டும் நேசி என்பதற்கு மாற்றாக மனிதனை நேசி, எப்படிப்பட்ட மனிதனையும் நேசி என்ற ஒற்றைக் குரலின் வெளிப்பாடு இக்கதை.
 
                    
                   
Series Navigationஇலக்கியப்பூக்கள் 230‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்