சின்னக் காதல் கதை

வசந்ததீபன்

வெக்கையினால்

கொதித்த இதயத்தை

சற்றுக் காத்தாடக்

கழற்றி வைத்தேன்.

பசியால் அல்லாடிய 

பூனையொன்று

அதைக் கவ்விக்கொண்டு போய்

தின்னப் பார்த்து

ரப்பர் துண்டென எண்ணி

குப்பையில் வீசிப் போனது.

வானில் வட்டமிட்டலைந்த

பருந்தொன்று அதைக்

கொத்தித் தூக்கி

கொத்திக் கொத்தி

கல்லென நினைத்து

குளத்தில் எறிந்தது.

குள மீன்கள்‍‍ கூடிக்

கடித்துக் கடித்து

நெகிழித் துண்டென்று முடிவுசெய்து

நீரில் மிதக்க விட்டு விட்டன.

நீரில் குதித்தாட வந்த 

சிறு பிள்ளைகள்

சிவப்பு பழமென எடுத்து

மரக்கட்டையென 

வழிப்பாதையில் போட்டனர்.

அவ்வழி அவள்

தன் ஆபரணத்தில் கோர்க்க

பவழப் பதக்கம் கிடைத்தென

கைப்பையில் எடுத்துப் போனாள்.

அவளைத் தேடி

நானும் அலைந்து கொண்டிருக்கிறேன்

என் இதயத்தைத் திரும்பப் பெற.

Series Navigationகரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜாகண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்