சின்னாண்டியின் மரணம்

Spread the love

(இது வெறும் கற்பனை மட்டுமே. இருந்தோர், இறந்தோர் அல்லது இறக்கவிருப்போர் எவரையும் குறிப்பிடுவது அல்ல)

எல்லோரையும் போலவே ஒருநாள்

சின்னாண்டியும் செத்துப் போனார்.

 

அல்லோகலப்பட்டது புழுதிக்காடு.

 

செத்த சின்னாண்டி,

சிலபேருக்குத் தலைவர்

பலபேருக்குப் பகைவர்.

பெயருக்கு நேரெதிராக

பெரும் பணக்காரர்.

 

புழுதிக்காட்டின் பாதி அவருடையது.

மீதியும் அவருடையதே என்பது

பொதுஜன அறிவு.

 

புண்ணாக்கு விற்றே

புழுதிக்காட்டை வளைத்ததாக

அன்னார் சின்னாண்டி

அடிக்கடி சிலாகிப்பார்.

 

இதில்,

எள்ளுப் புண்ணாக்கு விற்றவரெல்லாம்

ஏழைகளாய் இருக்கையில் – வெறும்

இலுப்பம் புண்ணாக்கு விற்ற சின்னாண்டி – இத்தனை

ஏற்றம் பெற்றது எப்படி?

எப்படி?

எ…..ப்…..ப….டீ?

 

கேட்போர் ஒருவருமில்லை புழுதிக்காட்டில்.

கேட்டவர்

புழுதிக்காட்டின்

தூசாய் மாறியதே வரலாறு.

 

மாயாண்டி மருதாண்டி

வேலாண்டி விருமாண்டி என்கிற மகன்களுடன்

ஏகப்பட்ட

பேராண்டிகளும் உண்டு

அன்னார் சின்னாண்டிக்கு.

 

அடி சகீ….

அத்தனை பயல்களும்

அயோக்கியர்களடீ!

 

ஒரே மகள்.

உமிக்கரி.

 

உமிக்கரியின் மகாத்மியம்

ஊரறிந்த ரகசியம்.

……அஹோ தள்ளி நில்லும் பிள்ளாய்!

அதையெல்லாமிங்கு சொல்வதற்கில்லை!

 

+++++++

 

அன்னார்

சின்னாண்டி

ஆகபெரிய பூச்சாண்டி.

அதையும் தாண்டி

பெரும் புளுகாண்டி.

 

அவர்,

உண்மை பேசி

ஒருவரும் அறிந்ததில்லை.

பொய்மையும் புரட்டும்

திருட்டும் கொள்ளையும்

அகராதியிலில்லா அத்தனை

அயோக்கியத்தனங்களும்

நீக்கமற நிறைந்ததே சின்னாண்டி வாழ்க்கை.

 

எனினும்,

சின்னாண்டிக்கு இனி,

சந்துக்குச் சந்து

சிலை வைப்பார்கள்.

பொந்துக்குப் பொந்து

புனர்விஜனம் செய்வார்கள்

புழுதிக்காட்டு மக்கள்.

புழுதிக்காட்டு

வழக்கம் அப்படி.

பொய்மையப் பூஜித்தே

புழுதியாய்ப் போனவர்கள் அவர்கள்.

இன்னும் உறக்கம் கலையாமல்

உறங்கியே கிடப்பவர்கள்.

 

என்ன செய்ய?

 

இறைவா,

இன்னொரு சின்னாண்டியைத்

தாங்குமா புழுதிக்காடு?


Series Navigationஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?