சிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பனின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 10 in the series 1 அக்டோபர் 2017

ராமலக்ஷ்மி

கவிதைகளைத் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன். அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன. உரக்கச் சொல்லவில்லை எதையும். ஆனால் உணரச் செய்கின்றன அழுத்தமாக. நூலிம் 91 கவிதைகளையும் நாம் கடந்து வரும்போது இது புரிய வரும். இயற்கையின் உன்னந்தங்கள், சமூகத்தின் அவலங்கள், இயந்திரமான நகர வாழ்வில் தொலைந்து போன அருமைகள், அன்றாட வாழ்வின் அவதானிப்புகள், வாழ்க்கையில் மாற்றவே முடியாது போய் விட்ட நிதர்சனங்கள் என நீள்கின்றன இவரது பாடுபொருட்கள்.

அழகிய மொழி வளமும், கற்பனைத் திறனும் இவர் கவிதைகளின் பலம்.

மனதைக் கவருகிறது ‘மகிழ்வின் நிறம்’:
“எந்தவொரு புதினத்தையும் விட
சுவாரஸ்யமாகவேயிருக்கிறது

ஜன்னல்களினூடே விரியும்
யாருமற்ற ஏகாந்த வெளியில்
ஒன்றையொன்று துரத்தும்
ஜோடி மைனாக்களின்
கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்

காற்றில் வழிந்து வரும்
புல்லாங்குழலை விட
இனிமையான மழலையின் நகைப்பும்….”

அவரவர் துயரத்தின் போது அடுத்தவர் வேதனையையும் எண்ணி பதைக்கும் ஒரு மனதைப் பார்க்க முடிகிறது ‘எவரேனும்’ கவிதையில் எழுப்பட்டக் கேள்வியில்..
“தலை சாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
முன் தினம் மின்கம்பத்தில்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்

பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
யாரேனும் இருக்கக் கூடுமோ?”

சமுதாயத்தில் அது, இது, எதுவுமே சரியில்லை எனும் எந்நாளும் சலித்துக் கொள்ளும் நாம் சரியில்லாத ஒன்றை சந்திக்க நேரும்போது செய்வதென்ன என்பதை கேட்கிறது, ‘சொல்வதெளிதாம்’. “விட்டு வந்த வயலும் வீடும் குளமும் குயில் கூவும் தோப்பும் கனவுகளாய் இம்சிக்க” ‘நகரமென்னும்’ மாயையான சொர்க்கத்தில் மயங்கி நாம் கிடப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

“காடுகளை அழித்து இன்னொரு காடு” ஆக ‘கான்க்ரீட் காடு’கள்:
“விருட்சங்கள் கூட
எங்கள் வீடுகளில்
இயல்பைத் தொலைத்து
குறுகி நிற்கின்றன

வாழ்விடம் போலவே
மனமும் குறுகிப்போய்
கான்க்ரீட் காடுகளில் வாழும்
நாங்களும் ஆதிவாசிகள்தாம்”

சபிக்கப்பட்ட்டவர்களாய் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் குழந்தைகள் பரம பதத்தில் முன்னேறி சிம்மாசனத்தைப் பிடிக்கிறார்கள் ‘தாயம்’ கவிதையில். ஆனால் காலம் மாறினாலும் சமூகம் முழுவதுமாகவா மாறி விடுகிறது? இன்றும் அங்கே இங்கே எனத் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது கள்ளிப்பால் கதைகள். ‘சன்னமாய் ஒரு குரல்’ பிசைகிறது மனதை:
“உணவென்று நம்பி அருந்திய பால்
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே
உறக்கம் கொண்டு விட்டோம்
கள்ளித்தாய் மடியிலேயே
பெற்றவளின் முகம் கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி
என் முகம் அவள் பார்த்த
தருணமென்றொன்று இருந்திருக்குமா.”

தேர்ந்த நிழற்படக் கலைஞரான இவர் எடுத்த படமே சிறகை விரித்து சிட்டுக் குருவியாய் நிற்கிறது அட்டையில். அனைத்து உயிர்களுக்குமான பூமியை மனிதன் சுயநலத்தோடு ஆக்ரமித்துக் கொள்ள அலைக்கழியும் சிட்டுக்குருவிகளின் ஆதங்கத்தை வடித்திருக்கிறார் ‘பிழைத்துக் கிடக்கிறோம்’ கவிதையில். நெகிழ வைக்கிறது, ‘அந்த இரவில்’ மகனுக்கும் தந்தைக்குமானப் பாசப் பிணைப்பு. மனிதர்கள் சுமந்து திரியும் ‘முகமூடிகள்’, ‘தொடங்கிய புள்ளியிலேயே’ நிற்கிற காலம், மீனவர் துயர் பேசும் ‘ரத்தக் கடல்’, மனசாட்சியை உறுத்த வைக்கும் ‘இன்று மட்டுமாவது’, அன்பெனும் ‘மந்திரச் சொல்’, கடவுளின் ‘கையறு நிலை’, ஆழ்மன வேதனையாய் ‘கணக்குகள் தப்பலாம்’ எனத் தொகுப்பில் கவனிக்கத் தக்கக் கவிதைகளின் பட்டியல் நீண்டபடி இருக்கிறது.

பால்ய காலத்துக்கே அழைத்துச் சென்ற ‘ரயிலோடும் வீதிகள்’ ஏற்படுத்திய புன்னகை வெகுநேரம் விலகவில்லை:
“..அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இஞ்சின்
வலியில் அலறிக்கொண்டு”

அழகியலோடு வாழ்வியலும், அவலங்களோடு ஆதங்கங்களும் வெளிப்படும் கவிதைகளுக்கு நடுவே மனித மனங்களில் நம்பிக்கையை விதைக்கச் செய்ய வேண்டியக் கடமையை மறக்கவில்லை ஆசிரியர். இளையவர் பெரியவர் பாகுபாடின்றி சந்திக்கும் எல்லாத் தோல்விகளுக்கும் தேடித் தேடிக் காரணம் கண்டு பிடித்து, பிறரைக் குறை சொல்லி, தம் தவறுகளை நியாயப்படுத்தியபடியே இருக்கிற உலகம் இது:
“விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்
பெருங்கடலாயினும் குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக் கற்றுக் கொண்ட மீன்கள்.”

ஆசிரியரின் கவிதை மீதான நேசமும் உணர்வுப் பூர்வமான வரிகளும் நம் எண்ணங்களின் சிறகை விரிய வைத்திருக்கின்றன.

வாழ்த்துகள் சாந்தி மாரியப்பன்!
*

‘சிறகு விரிந்தது’
சாந்தி மாரியப்பன்
‘அகநாழிகை’ வெளியீடு
96 பக்கங்கள், விலை ரூ.80/-
தபாலில் பெற்றிட:
aganazhigai@gmail.com
இணையத்தில் வாங்கிட:
http://aganazhigaibookstore.com/

**

– ராமலக்ஷ்மி

Series Navigationஅருணா சுப்ரமணியன் கவிதைக்வெற்றி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *