சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?

 

 

 

ஸிந்துஜா 

 

சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுதிய எழுத்தாளர்கள் வரிசையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பா. ராகவனில் ஆரம்பித்து, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி, சுஜாதா, தேவமைந்தன், மெலட்டூர் நடராஜன் (யார் இவர்?) என்று பலர் (tamilhelp.wordpress.com) ! துப்பறியும் சாம்பு இன்னும் கண்டு பிடிக்காதது எப்போதும் குழப்பம் நிறைந்த இந்தக் கதை எழுதும் விவகாரம்  ஒன்றுதான்.

 

ஆக ஒரு சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்கலாம் என்று பார்ப்போம். முதலில் வார்த்தைகள். அதாவது வருணனை என்று சொல்லிச்  சேதப்படுத்தும் விரயங்கள். கான்சரில் செத்துக் கொண்டிருக்கும் ராமானுஜத்தைப் பற்றி எழுதுகையில் அவன் வீட்டிற்குப் போகும் வழியில் உங்கள் கண்ணில் தட்டுப் படும் ஆவாரம் பூ உங்களைக் கவர்ந்தது என்றால் அதற்கு இரண்டு வரிகள் கொடுங்கள். அதன் வண்ணம் இதழ் அழகு என்று இரண்டே இரண்டு வரி. அது எப்படி வளர்கிறது அது யார் நிலத்தில் விளைகிறது, என்ன உரம் போட  வேண்டும் அது எப்படி இன்னொரு ஆவாரம் செடியைப் பிரசவிக்கும்  என்னும் உங்கள் “கிராமீய” “விவசாய” அறிவாற்றலை இரண்டு பக்கங்களுக்கு வளவளக்காதீர்கள் – “ஆவாரம் பூவைத் தினமும் பார்த்தாலே போதும், ராமானுஜத்துக்குக் கான்சர் குணமாகி விடும்” என்று இருந்தாலொழிய.

 

தெளிவாக இல்லாத சிந்தனைக்கு உருவம்  கொடுக்க முயலாதீர்கள். என்ன சொல்கிறோம் என்று தெரிந்தால்தான் எப்படிச் சொல்கிறோம் என்று தீர்மானிக்க முடியும், மௌனியைப் போல் பூடகமாக எழுதுகிறேன் என்று ஆரம்பித்து எழுத வேண்டாம். தமிழ்நாடால்  ஒரு மௌனியைத்தான் தாங்கிக் கொள்ள இயலும். 

 

செண்பகத்துக்கும் அவள் கணவன் வடிவேலுவுக்கும் வரும் பிணக்கு பற்றி எழுத ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக செண்பகத்தின் மாமியார் மாமனார் பொல்லாதவர்கள் என்றும் இதே ரீதியில், அவர்கள்  இருவரின் அத்தைகள் -மாமன்கள், சித்திகள்-சித்தப்பாக்கள், பெரியம்மாக்கள் -பெரியப்பாக்கள்,ஆகியோர் குல விவகாரங்களையும் உள்ளே இழுத்துக் கொண்டு வந்தால் அப்புறம் செண்பகம்-வடிவேலு பிணக்கு தீருவதற்குப் பதிலாக உங்களுக்கும் வாசகருக்கும் பிணக்கு ஏற்பட்டு விடும். 

 

பிரபல பத்திரிகைகளில் எழுதுகிற சிறுபத்திரிகை எழுத்தாளர்கள், சிறுபத்திரிகைகளில் எழுதும் பிரபல பத்திரிகை எழுத்தாளர்கள் ஆகியோரின் சிறுகதைகளைப் படித்து விட்டு உங்கள் சிறுகதைகளை எழுதாதீர்கள். அப்படிச் சொன்ன பேச்சு கேட்காது படித்தே தீருவேன் என்பவர்களாக இருந்தால்  தயவு செய்து ஆங்கிலத்தில் உள்ள ஒரிஜினல் அமெரிக்கச் சிறுகதைகளைப் படிக்காதீர்கள். உங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு நெஞ்சு வலி வரச் சான்ஸ் இருக்கிறது. ஏனெனில் தமிழ் வேர்களை அந்த அமெரிக்கக் கதைகளில் காணலாம். உங்கள் மயக்கம் தெளிந்தால் அவை தமிழ் வேர்கள் அல்ல, உண்மையிலேயே அமெரிக்க வேரிலிருந்து தமிழகத்துக்கு வந்து பூத்த  செடிகள் என்றும் தெரிய வரும். 

 

சிறியதாக எழுதினால் சிறுகதை என்று மயங்காதீர்கள். சீர்கதை என்பதுதான் சிறுகதை என்று கால ஓட்டத்தில் மாறி விட்டது. சீரான கதையே சீர்கதை. அதாவது சிறுகதை. “அள்ள அள்ளக் குறையாதிருப்பதுதான் சிறப்பு” என்று பல மூதறிஞர்களும் பேரறிஞர்களும் சொல்லியிருக்கும் போது வடி கட்டி எழுதுவது முட்டாள்தனம். ஆமாம். வடிகட்டின முட்டாள்தனம். மரபை எதிர்த்து நாற்பத்திரண்டு பக்கங்களுக்கு (சில சமயம் அதிலும் டபுள் மடங்கு) எழுதும் ஜெயமோகனின் சிறுகதை வடிவம் உங்கள் லட்சியமாக  இல்லாவிட்டால் நீங்கள் சிறுகதை எழுத வரக் கூடாது.

 

நீங்கள் பெண் எழுத்தாளராக இருந்தால் உங்கள் சிறுகதைகளில் ஆண்களைக் கண்டபடி திட்டி எழுதக்கூடாது. ஏனென்றால் நீங்கள் அம்பையின் கதைகளைக்  காப்பியடித்து எழுதுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு எழும். உதாரணமாக உங்கள் சிறுகதைக்கு “மரக் காளை” என்று பெயர் வைக்கலாம். ஆண்மை தெறித்து விழும்படி.

 

 

 

Series Navigationசுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.