சில நேரத்தில் சில நினைவுகள்

This entry is part 1 of 10 in the series 22 நவம்பர் 2020

அமெரிக்காவில் 2020 இல்  நடந்து முடிந்த தேர்தலை  மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்?

அமெரிக்க மக்களில் அதிகமானவர்கள் இறை நம்பிக்கைகொண்டவர்கள்.  டொனால்ட்   ட்ரம்ப்பும் சரி ஜோசப் பைடனும் சரி  பைபிளில் தங்களது உறுதியை எடுத்துக் கொள்பவர்கள் . அதிலும் பைடன் ஒரு ஐரிஸ் கத்தோலிக்கர் .  தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்றால் மக்களும் அவ்வழியே .  இல்லையா ?

ஆபிரகாமிய மதங்களது தொடக்கப்புள்ளியான  ஆபிரகாம்,  கடவுள் சொன்னதற்காகத்  தனது மகனைப் பலியிடத் துணிந்தவர்.  யூதர்கள் கடவுளின்  நேரடியான கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.  இருபகுதியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கவேண்டியவர்கள் (God’s covenant relationship with Israel required faithfulness on both parts) அதன் வழி வந்த  வம்சத்தில் வந்தாலும்  நாசரது யேசு அயலவர்களையும்  நேசி என்றார் .

அயலவர்கள் என்பது பக்கத்து வீடல்ல.

அக்காலத்தில் யூதர்களல்லாத மற்றவர்கள்,  முக்கியமாக ஜெருசலத்தில்  கிரேக்கர்கள் ஏராளமாக  இருந்தார்கள் . இது எப்படி எனக்குத் தெரியுமெனக் கேட்டால்,   இரண்டு சான்றுகள் சொல்லமுடியும் . முதலாவது மத்தியூவினால் எழுதப்பட்ட புதிய வேதாகமம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இரண்டாவது கிரேக்கர்களை  ஜென்ரீயல் என அழைத்தார்கள் . ஆரம்பத்தில் யூதர்களில் ஒரு  மதப்பிரிவாக இருந்த  கிறிஸ்தவம் பின்பு  கிரேக்கர்கள், எகிப்தியர்,  சிரியர்,  ஆர்மேனியர் எனப் பரந்து சென்றது.

அமெரிக்காவின் தேர்தலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?

பழைய வேதாகமத்தில் இரு அரசர்கள் வருகிறார்கள் அதில்  பாபிலோனை ஆண்ட நெபுச்சன்னியர் (Nebuchadnezzar 597BC) ஜெருசலேமை அழித்து அங்குள்ள யூதர்களை பாபிலோனுக்கு அடிமையாகக் கொண்டு சென்றான். யூதர்கள் ஆண்டவனுக்கு அடிபணியாது ,  முக்கியமாக உருவ வழிபாடு மற்றைய தெய்வங்களை  வணங்குதல் போன்ற  பத்துக் கட்டளைக்கு விரோதமான விடயங்களைச் செய்தார்கள்.

இதைப் பொறுக்காத ஆண்டவனால் நெபுச்சன்னியர்  அனுப்பப்பட்டு,   இஸ்ரேலியரை தண்டித்ததாக   தீர்க்கதரிசி ஜெருமையா சொல்கிறார்.  தண்டனைக்கு உட்பட்ட இஸ்ரேலியர்கள்  கிட்டத்தட்ட 60 வருடங்கள் பாபிலோனியர்களிடம் சிறைப்பட்டு  கடவுளிடம் மன்றாடியதால் விடுதலை பெறுகிறார்கள் என்கிறார்.

எப்படி?

பாரசீகத்தை ஆண்ட சைரஸ்  (Cyrus 538 BC) பாபிலோனியாவைத் தாக்கி இஸ்ரேலியர்களை விடுவிப்பதுடன்,   அவர்களுக்கு மதவழிபாடு செய்யும் உரிமையையும்  அளிக்கிறார் . சைரஸ் தற்போதைய அரசியலில் பல மதத்தவருக்கும் வழிபாட்டுச்  சுதந்திரம் கொடுப்பதுபோல் அக்காலத்தில் மத கலாச்சாரத்திற்கு அனுமதியளித்ததால்,  யூதர்கள் தங்களது முக்கிய தீர்க்கதரிசியில் ஒருவராக சைரஸ்ஸை  கொண்டாடுகிறார்கள். ( சைரஸ் மட்டுமே,  யூதர் அல்லாத தீர்க்கதரிசியாகக் கொண்டாடப்படுகிறார்)

நெபுச்சன்னியர் ஜெருசலேமை தாக்கி அழித்துச் சிறைபிடித்ததற்கு இறைவனே காரணம்,  அதாவது தான்தோன்றித்தனமாக இருந்த இஸ்ரேலியர்கள் மீது தண்டனையாக அது நடந்தது . அதாவது இஸ்ரேலியர்கள் பாபிலோனிய மன்னனால் தண்டிக்கப்பட்டார்கள். ஆண்டவனின் விருப்பமில்லாது கடவுளின் குழந்தைகளுக்கு  எதுவும் நடந்திராது  என்பதை நாமும் ஜெருமையா போல் நம்பவேண்டும்.

இதன்பின் 60 வருடங்கள் பின்பாக பாரசீக  பேரரசின் மன்னன் சைரஸ் வந்து இஸ்ரேலியர்களை விடுவிப்பதோடு அவர்களை தங்களது மத வழிபாட்டை நடத்துவதற்கும் உதவுகிறான். அதாவது நவீன பல் கலாச்சாரத்தின் தந்தை என நாம் கூட  சைரஸைக் கொண்டாடலாம் .

2016 இல் இருந்து  அமெரிக்கா ஒரு இனவாதியான, மற்றைய மதங்களை வெறுக்கும் , ஒருவரால்  நான்கு வருடங்கள்   ஆளப்பட்டது…?     அதுவும் இறைவனது செயலே.

2020 இல்  அந்த மக்கள் திருந்தி,  மீண்டும் இறைவனிடம் மன்றாடி  தங்களுக்கு புதிய ஒரு அரசனை அனுப்பும்படி வேண்டுகிறார்கள் .  சைரஸ்போல் பல்கலாச்சாரத்தை ஏற்றுப் பெண்களை மதிப்பதும் மட்டுமல்லாது ,  பல பெண்களைத் தனது நிர்வாகத்தில் நியமித்து   அரசை நடத்த முன்வந்துள்ள  ஜோ பைடன் ஆண்டவனால் அனுப்பப்படுகிறான்.  அக்கால 60 வருடங்கள் 15 தடவைகளால் குறைக்கப்படுகிறது.

இறை நம்பிக்கை  ஒரு நம்பிக்கைதான்.  வழிகாட்டுகிறது .

எப்படி?

வேதாகமத்தில் தொற்று நோய்களை அனுப்பி இஸ்ரேலியர்களை  எகிப்திய (மன்னன்)  ஃபரோ விடமிருந்து காப்பாற்றியது  நினைவுள்ளதா?

அப்படியான விவிலிய அதிசயம் அடிக்கடி நடக்காது . ஆனால் 2020 இல் நடந்திருக்கிறது.

—0—

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *