செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக… நாள்: 12-03-2016, சனிக்கிழமை

செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக…

நாள்: 12-03-2016, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, கமலா திரையரங்கம் அருகில், டயட் இன் உணவகத்தின் மூன்றாவது மாடியில்.

சிறப்பு அழைப்பாளர்: படத்தொகுப்பாளர் B. லெனின்

நண்பர்களே மறைந்த மாபெரும் திரை ஆளுமையான பி.கே. நாயர் அவர்களை பற்றிய மிக சிறந்த ஆவணப்படம் “செல்லுலாயிட் மேன்”. பி.கே. நாயர் அவர்களுக்கு சென்ற ஆண்டு தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கப்பட்டது நண்பர்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அதன் ஒரு பகுதியாக இந்த படம் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் திரையிடப்பட்டது. மறைந்த பி.கே. நாயரின் நினைவாக மீண்டும் இந்த ஆவணப்படத்தை சென்னையில் எதிர்வரும் சனிக்கிழமை தமிழ் ஸ்டுடியோ திரையிடவிருக்கிறது. தமிழ் ஸ்டுடியோவின் 71வது குறும்பட வட்டம் நிகழ்வு இந்த சனிக்கிழமை நடைபெறவிருந்தது. அந்த நிகழ்விலேயே இந்த ஆவணப்படமும் திரையிடப்படவிருக்கிறது.

சினிமாவை நேசிக்கும், ரசிக்கும், அதில் தொழில்முறையாக ஈடுபட்டிருக்கும் நண்பர்களை தாண்டி, நீங்கள் சினிமாவை பார்க்கும் சராசரி பார்வையாளனாக இருந்தால் கூட அவசியம் இந்த திரையிடலில் பங்கேற்க வேண்டும். காரணம் ஒரு தனிமனிதன் எப்படி இத்தனை பெரிய தேசத்தின் ஒட்டுமொத்த சினிமாவையும் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்தார் என்பதை நீங்கள் உணர வேண்டும். சினிமா என்பது வெறுமனே பொழுதுபோக்கு என்று ஏமாந்து போயிருக்கும் நம்மை போன்றவர்களுக்கு, சினிமாவின் உண்மை முகத்தை, அதன் தேவையை உணர்த்திய ஒரு மாபெரும் கலைஞனை அவனது மரணத்தில் கூட நாம் நினைத்துப் பார்க்காவிடில் காலம் நம்மை ஒருபோதும் மன்னிக்காது. தமிழ்நாட்டின் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய திரையுலகமே பி.கே. நாயரின் மறைவை அனுசரித்து, அவருக்கு மரியாதை செய்திருக்க வேண்டும். ஆனால் இங்கே படம் இயக்கம் பல இயக்குனர்களுக்கு பி.கே. நாயர் என்றால் யார் என்றே தெரியாது. ஆகசிறந்த ஒரு பழபெரும் இயக்குனரை பி.கே. நாயருக்கு விருது வழங்கும் விழாவிற்கு அழைத்திருந்தேன். பி.கே. நாயர் யார் என்றார் அடுத்த நொடியில் அதிர்ந்தேன். அதற்கடுத்து அவர் என்று விளக்கிய பிறகும், அவர் என்ன படம் எடுத்திருக்கிறார் அவருக்கு ஏன் விருது கொடுக்கிறீர்கள், படமெடுத்து நிறைய பேர் விருது வாங்காமல் இருக்கிறார்களே என்றார், இறுதியில் அவரை அந்த நிகழ்விற்கு அழைக்கும் எண்ணத்தையே கைவிட வேண்டியதாகிவிட்டது. தமிழ்நாட்டின் நிகழ்கால சந்ததிக்கு தங்கள் தாத்தாவின் பெயரே தெரியாது எனும்போது, இது போன்ற கலைஞர்களை மன்னிக்க கொலைஞர்களை என்ன செய்வது? நாம் நம்முடைய வேரை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறோம். தன்னலம் பாராமல் பொதுநலம் பேணும் மாமனிதர்களை ஒரு சமூகம் கொண்டாடவில்லை என்றால் அந்த சமூகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்றுதான் அர்த்தம் (இந்த மேற்கோளை ஏதாவது ஒரு அறிஞர் சொன்னார் என்றால், உடனே அதனை உச்சுக்கொட்டி சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும். ஆனால் நான்தான் மேற்சொன்ன மேற்கோளை உருவாக்கியிருக்கிறேன் என்றால் போடா வெண்ணெய் என்று இடது கையால் தள்ளிவிட்டு, தத்தம் கடமையை செவ்வனே செய்ய டாஸ்மாக் செல்லும் சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம்).

நண்பர்களே சனிக்கிழமை பெரும் திரளாக இந்த திரையிடலில் பங்கேற்று பி.கே.நாயர் எனும் மாபெரும் கலைஞனை ஒருமுறையாவது நினைவுக் கூர்ந்து அவருக்கு மரியாதை செய்யுங்கள். இல்லையேல் எவ்வித ஆவணங்களும் இல்லாமல், வரலாறு இல்லாத பெருத்த அவலத்தை உங்கள் சந்ததிகள் சந்திக்க நேரும். இந்த நிகழ்வில் ஒரு பெரும் பொக்கிஷத்தை படத்தொகுப்பாளர் லெனின் தமிழ் ஸ்டுடியோவிற்காக வழங்கவிருக்கிறார். வாருங்கள் கலைஞர்களை கொண்டாடுவோம்.

திரையிடலுக்கு அனுமதி இலவசம்.

Series Navigationஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 156 நாள் : 20-3-2016, ஞாயிறு காலை 9. 30 மணி