செவல்குளம் செல்வராசு கவிதைகள்

செவல்குளம் செல்வராசு

1.   நேத்து  சாமக் கொடையில்       

ஊருக்கெல்லாம் குறி சொன்ன

சாமியாடிப் பெரியப்பாவை

காலையில் திட்டித் தீர்த்தாள்

பெரியம்மா.

“இருபத்தொரு நாள் எப்படித்தான்

இல்லாமக் கிடந்தானோ

விடிஞ்சதும் போயிட்டான்

பிராந்தி கடைக்கு

சாத்திரம் சொன்ன பல்லி

கழனிப் பானையில விழுந்துச்சாம்”

2.   புத்தக லயிப்பிலும்               

பேனா எடுக்க

எழுந்திரிக்காத சோம்பலிலும்

குறிக்காமல் விட்ட

ஒரு வார்த்தையை

திரும்பத் தேடுகிறேன்

கிடைக்கவேயில்லை 

பிணவறை பற்றிய

வார்த்தைதான் அது

என்ன வார்த்தை அது …?    

3.   தூங்காத பின்னிரவில்

மயானப் பயணம் பற்றி

பாதி எழுதிக் கொண்டிருக்கையில்

பதறி அடங்குகிறது மனம். 

எதிர் அலமாரியில்

இன்னும் படிக்கத் துவங்காத

புத்தக அடுக்குகளும்

மனக் கிடங்கில் கிடக்கும்

எழுத நினைத்திருப்பவைகளும் 

பழிப்பு காட்டிச் சிரிக்கின்றன

4.   வீட்டில் யாருமில்லா நள்ளிரவில்  

மரணம் பற்றிய கவிதைகளை

வாசித்துக் கொண்டிருக்கிறேன்

சமநிலை குலைத்த வரிகளில் சலனமற்று

பார்வையைத் திசை திருப்புகிறேன்

பெயர் தெரியாத பூச்சியொன்று

சுவரோரமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது

எங்கிருந்தோ வந்த பல்லியொன்று

நொடியில் கவ்விப் பிடித்ததில் 

சில நொடிகள் துடித்தடங்கியது உயிர்

மனதில் பயம் தொற்றிக்கொள்ள

உடல் சிலிர்க்கிறேன் 

காற்றில் படபடக்கிறது

திறந்து கிடக்கும் புத்தகத்தின் பக்கங்கள்…

Series Navigationவாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8நவீன செப்பேடு