சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

 

சேயோன் யாழ்வேந்தன்

1.

 

கூடடைந்த காகங்களின்

கறுப்பினைப் பெற்றுக்கொண்ட

இரவு

கூடு விட்டுச் செல்லும் கொக்குகளின்

வெண்மையைப் பெற்றுக்கொள்ளும்

விடியலில்

 

 

2.

 

எந்தக் கட்சி?

 

பட்டப் பகலில்

இருட்டுக் கடையை

கண்டுபிடிப்பது

கடினமாக இருந்தது.

‘நீ வேற

எல்லாக் கடையிலேயும்

அதே அல்வாதான்’ என்றான்

நெல்லைக்காரன்

 

3.

 

ரணம் பெயர்க்க

 

பெண் குழந்தை பிறந்தால்

உன் நிறைவேறாத

காதலுக்குச் சொந்தக்காரியின்

பெயரை வைப்பதென்னவோ

நியாயந்தான்

 

ஆனால்

ஆண்குழந்தை பிறந்தால்

பெயர் வைக்கும் உரிமையை

மனைவிக்குக் கொடுத்துவிடு

பின் பெயர்க்காரணம் கேட்காதே.

Series Navigationஎனது கதைகளின் கதை – 1.எங்கள் வாத்தியார்யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)