சொல்லாமலே சொல்லப்பட்டால்

அமீதாம்மாள்

தொட்டிக் கடியில்
துளைகள் இல்லையேல்
துளசி அழுகும்

மிதப்பவைகள் ஒருநாள்
கரை ஒதுங்கும்

பூமிக்கு எதற்கு
பிடிமானம்?

உருவாக்கிய
மரத்தையே உருவாக்க
முடியுமென்று
விதைக்குத் தெரிவதில்லை

மலரப் போகும் நாளை
குறித்துக் கொண்டுதான்
பிறக்கிறது மொட்டு

ஆயுளுக்கும் தேவையான
பிசினோடுதான்
பிறக்கிறது சிலந்தி

வேர்கள்
தன் தேடலை
வெளியே சொல்வதில்லை

விஷப் பாம்புகள்
அழகானவை

ஏறவும் இறங்கவும்
தெரிந்தால் போதும்
மின்தூக்கிக்கு

ஆடு புலியாட்டமாய்
வாழ்க்கை
ஆடும் ஒருநாள்
புலியாகலாம்

அழகைச் சொல்வது
மட்டுமே
பூவின் வேலை

சொல்ல வந்தது
சொல்லாமலே
சொல்லப்பட்டால்
கவிதை

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்நாகரிகம்