சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்

author
0 minutes, 8 seconds Read
This entry is part 11 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழ் மறைந்த ஜெர்மன் எழுத்தாளர் W.G. ஸீபால்ட் என்பாரைச் சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இதழை https://solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம்.

இந்த இதழில் காணக் கூடிய விஷயங்களின் பட்டியல் இது:

பிரதிபலிக்கும் வளையங்கள்-ஸீபால்டின் ‘The Rings of Saturn’ குறித்து சில எண்ணங்கள்  – நம்பி

ஸீபால்ட் எழுதிய த ரிங்க்ஸ் ஆஃப் ஸாடர்ன் என்ற நாவலைப் பற்றி நம்பி எழுதியுள்ள ஆழத் தோய்ந்த கட்டுரை. இதை வருணித்து உங்கள் நேரத்தைத் தின்பதை விட, அங்கேயே நீங்கள் பயணித்து அந்த வளையங்களின் அபாரமான உருவமைப்பிலும், அறிவுத் திறனிலும் திளைத்திருக்க உந்துவது மேல் என்று நினைக்கிறோம். நம்பி அவர்களின் பல பத்தாண்டுப் படிப்பும் இந்த ஒரே கட்டுரையிலேயே வெளிப்பட்டு மிளிர்கிறது என்பதையும் நீங்கள் உடனே காண்பீர்கள்.

ஸீபால்டை வாசித்தல் அல்லது தொடர்படுத்தல்களின் கிறுகிறுப்பு – நம்பி

விருந்துகளில் மையத்தில் வீற்றிருக்கும் உணவைக் கலத்தில் படைக்குமுன் ஒரு முன் சுட்டியாகச் சில பதார்த்தங்களைப் பரிமாறுவார்கள். இங்கிலிஷில் அதை அப்பிடைஸர் என்று சொல்வார்கள், கேட்டிருப்பீர்கள். பிரதிபலிக்கும் வளையங்கள் கட்டுரை அப்படிப் பசியைத் தூண்டும், அது தூண்டும் ஆர்வத்தை ஆற்றும் வகைக் கட்டுரை இது. மையத்து விருந்தாக, கிறுகிறுப்பூட்டுமளவு விரிவும், ஆழமும் கொண்ட கட்டுரை. நெடிய கட்டுரை என்பதால் ஆற அமர்ந்து படியுங்கள். உண்மையான விருந்தாகும்.

வேடன் – டிம் பார்க்ஸ்

சுருங்கச் சொல்லி நெடுகப் புரிய வைக்கும் கட்டுரை. இதை மொழி பெயர்த்தவர்கள், நம்பி கிருஷ்ணனும், அ.சதானந்தனும். ஸீபால்டின் ஒரு நூலான வெர்டிகோ என்பதைச் சுற்றிப் பின்னப்பட்ட பட்டு நூலால் ஆன வலை இது. சிக்குவதும் பெருமகிழ்ச்சி என்பதை நாம் இதில் காணலாம்.

டபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு – ஜேம்ஸ் அட்லஸ்

ஸீபால்டின் நடையை விவரங்களோடு ஆராய்கிறார். உறுதியற்ற கதைப் பொருளும், நனவிலியின் ஏற்ற இறக்கங்களோடும், பயணக் கட்டுரையா, புனைவா என்று வகைப்படுத்த முடியாத தன்மையும் கொண்ட அவரது உரைநடையின் செறிவு எப்படி நம்மை உள்ளிழுத்துப் பிடித்து வைத்துக் கொள்கிறது என்று யோசிக்கிறார். நம்பிகிருஷ்ணனும் அ.சதானந்தனும் இதை மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளரின் ஆதர்சங்கள், விவரணைகள் மீது கூர்ந்தநோக்குடன் – ஹரீஷ்

 ஸீபால்டின் அ ப்ளேஸ் இன் த கண்ட்ரி என்ற கட்டுரைத் தொகுப்பு நூலை ஜான் வில்லியம்ஸ், சீராய்வு செய்திருக்கிறார். ஹரீஷ் மொழி பெயர்த்திருக்கிறார்.

ஆவி வேட்டைக்காரர் – எலியனார் வாக்டெல்

ஸீபால்டோடு நடந்த ஒரு நெடிய நேர்காணலை மொழி பெயர்த்தவர் பஞ்சநதம். இந்த நேர்காணல் பெருமளவும் தி எமிக்ரண்ட்ஸ் என்கிற நாவலைச் சுற்றி வருகிறது. சிறுதுளி நீரில் நெடும்பனையைக் காண்பது போல இந்த ஒரு பேட்டியில் ஸீபால்டின் உலகைக் கைப்பற்றியுள்ளார் எலியனார்.

பறக்கும் தட்டுக்கள் – ஸீபால்ட் கவிதைகள்  – வேணுகோபால் தயாநிதி

ஸீபால்டின் மூன்று கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார். 

எனக்கு நினைவுள்ளது– ஸீபால்டின் ஒரு கவிதை. மொழிபெயர்ப்பு- சிறில்

ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து – பாஸ்டன் பாலா

ஸீபால்டின் நூலான ஆஸ்டர்லிட்ஸ் என்பது பற்றி பாஸ்டன் பாலா சில இதழ்கள் முன்னரே எழுதிய கட்டுரையின் மீள் பதிப்பு. நீரில் மீன் வாழ்வது போல நேரத்தில் நாம் வாழ்கிறோம் என்று கவனிக்கும் பாலா, காலக் கடப்பை ஸீபால்ட் எப்படி எல்லாம் கவனிக்கிறார் என்று நமக்கு எடுத்துக் காட்டுகிறார். கூடவே இலக்கியப் பெருவெளியில் எத்தனை முயல் குழிகளுக்குள் நம்மை ஈர்க்கிறார் ஸீபால்ட் என்றும் இலேசான எச்சரிக்கையை நமக்கு வழங்குகிறார்.

இதழின் அடுத்த பகுதிக்கு நகர்வோம்.

யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள் – கடலூர் வாசு   

சுமார் 40 ஆண்டுகளாக சுவாசிப்பு நலன் காக்கும் மருத்துவராகப் பணியாற்றிய அனுபவஸ்தர், யோகாப்பியாசங்கள் நமக்கு என்ன தருகின்றன, முறை தவறி இயங்கினால் அவற்றில் நமக்குக் கிட்டக் கூடிய சில பாதகங்கள் என்ன என்று விளக்குகிறார்.

வெளிச்சமும் வெயிலும் – சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம் –  

சிவா கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகளின் தொகுப்பு இந்த வருடத் துவக்கத்தில் சென்னையில் வெளியானது. அந்தத் தொகுப்பை சீர்தூக்குகிறார் ஜனா.கே.

சக்கடா–  நாஞ்சில் நாடனின் மற்றுமொரு வார்த்தை வேட்டைக் கட்டுரை

டேடா மதம்! – ரவிநடராஜன்

இன்று உலகளாவி விஸ்வரூபமெடுத்திருக்கும் ஒரு தொழில் நுட்பத் துறையைப் பகுத்து அறியும் கட்டுரை.

சிறிய, சிறப்பான அம்சங்கள்– ரோஸ்மேரி ஹில்

பல நூறாண்டுகள் தாண்டி வந்து இன்னமும் நம்மை வியக்க வைக்கும் மூதறிஞராக டார்வின் இருக்கிறார். அவர் தன் வாழ்நாளில் எழுதிய பல்லாயிரக்கணக்கான கடிதங்களை புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். அவற்றில் முக்கியமான ஒரு வருடத்தில் அவர் எழுதிய கடிதங்களைத் தொகுத்த ஒரு நூலைச் சீர்தூக்குகிறார் ரோஸ்மேரி ஹில். தமிழாக்கம் மைத்ரேயன்.

இதழைப் படித்த பின் உங்களுக்கு எழக் கூடிய கருத்துகளை அறிய பதிப்புக் குழுவினர் ஆவல் கொண்டவர்கள். அந்தந்தப் பதிப்பின் கீழேயே உங்கள் கருத்தைப் பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சலை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

பதிப்புக் குழு, சொல்வனம் இணையப் பத்திரிகை.

Series Navigationசொல்ல வல்லாயோ….10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *