ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….

author
1 minute, 8 seconds Read
This entry is part 10 of 16 in the series 20 செப்டம்பர் 2020


 அழகியசிங்கர்




    ஜானகிராமனின் மரப்பசு என்ற புதினத்தை எடுத்துப் படித்தேன்.  1978ல் புத்தகத்தை வாங்கியிருந்தபோது  ஒரு முறை படித்திருந்தேன்.  இப்போது படிக்கும்போது அன்று என்ன படித்தோம் என்று சுத்தமாக ஞாபகமில்லாமலிருந்தது.  ஜானகிராமன் கதைகள் எல்லாம் பிராமண சமுதாயத்தை ஒட்டி நடக்கிறது.  அந்த சமுதாயத்தில் நடக்கும் அபத்தங்களைக் கிண்டல் பண்ணுவதுபோல் ஜானகிராமன் படம் பிடித்திருக்கிறார்.

    இந்தக் கதையிலும் அம்மணி என்ற கதாபாத்திரம் மூலம் அதை வெளிப்படுத்துகிறார்.  வாழ்க்கை நடைமுறையில் உள்ள போலியான சம்பவங்களைப் பார்த்து அம்மிணிக்கு சிரிப்பு சிரிப்பாக வரும்.  எல்லார் முன்னிலும் அவள் சிரித்துவிடுவாள்.  சாவு வீட்டிற்குப் போனால் அழுவதற்குப் பதில் சிரிப்பாள்.  அங்குப் போலியாக நாடகமாடுவதைப் பார்த்துத்தான் அப்படிச் சிரிக்கிறாள். அவளுடைய இந்தச் செய்கையைப் பார்த்து அவள் அம்மா, ‘எனக்குன்னு வந்து பொறந்தியேம்மா,’ என்கிறாள் அவள் அம்மா.

    அந்தக் காலத்தில் பால்ய விவாகம் பிராமண சமுதாயத்தில் நடக்கும்.  பையன் இறந்துவிட்டால், பெண்ணை மொட்டை அடித்து வெள்ளைப் புடவையைக் கட்டி விடுவார்கள்.  இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்து விடுகிறாள்.  கண்டு சாஸ்திரி என்கிற பண்ணை வைத்திருக்கும் வீட்டில் உள்ள அவர் பெண்ணிற்கு நடக்கிறது.  பெரிய அதிர்ச்சி அம்மணிக்கு.  அவள் பெரிதும் மதித்திருந்த கண்டு சாஸ்திரி மீது வெறுப்படைகிறாள் அம்மணி.அந்தக் குடும்பத்தில் எந்த சகவாசமும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நினைக்கிறாள்.  அவள் அப்பா கண்டு சாஸ்திரி பண்ணையிடம்தான் காரியதரிசியாகப் பணிபுரிகிறார்.

    அன்னவாசல் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் வகுப்பு இல்லை என்பதால், கும்பகோணத்தில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு மேலே படிக்க வருகிறாள்.  கண்டு மாமா பெண்ணிற்கு ஏற்பட்ட நிகழ்ச்சியிலிருந்து அம்மணிக்கு யாரையும் திருமணம் செய்துகொள்ளப் பிடிக்கவில்லை.  கழுத்தில் தாலி சரடோடு சுற்றப் பிடிக்கவில்லை. 

    சென்னையிலிருந்து கல்லூரி படிக்கச் சென்னை வந்து விடுகிறாள் அம்மிணி.  தன் பெரியப்பா பெண் திருமணத்திற்கு கோபாலி கச்சேரியை ஏற்பாடு செய்கிறாள். கோபாலி பாடுவதில் கெட்டிக்காரர்.  பல இடங்களில் அவர் புகழ் பரவியிருந்தது.  ஆனால் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்.  கோபாலிக்கு அம்மிணியைப் பிடித்து விடுகிறது. அவள் அவருடைய பெண் பையனை விட இரண்டு வயது சின்னவள்.   இதை அம்மிணி யின் மார்பில் முகம் புதைத்தபடி கோபாலி சொல்கிறார்.

    அம்மணி எப்படி வாழ விரும்புகிறாள்.  அவளுக்கு எல்லோரையும் பார்த்தாலும் கை குலுக்க வேண்டும் போல் தோன்றுகிறது.  அல்லது தழுவிக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.  ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இதைச் செய்ய விரும்புகிறாள்.  கோபாலி ஒரு தனி இடத்தில் அவளை குடி வைக்கிறார்.

.  அவளுக்கு உதவி செய்ய பச்சையப்பன் என்ற வேலைக்காரனை கோபாலி ஏற்பாடு செய்கிறார்.  அம்மணிக்கு எந்தக் குறிக்கோளும் இல்லை. எம் எ படிக்கிறாள்.  இசையைப் கோபாலியுடன் கற்றுக்கொள்கிறாள்.  நடனம் கற்றுக் கொள்கிறாள்.  இதையெல்லாம் கோபாலியின் ஏற்பாட்டில் செய்கிறாள்.  கோபாலி தினமும் அவளைப் பார்க்க வருவார்.  பாட்டு சொல்லித் தருவார்.  இருவரும் குடிப்பார்கள். கட்டிப் புரள்வார்கள்.  அம்மணி கொஞ்சங்கூட மனம் கோணாதபடி நடந்து கொள்கிறார்.  அம்மிணி இந்த மாதிரி வாழ்க்கையை விரும்புகிறாளா?  அவளிடம் கேட்டால் அது குறித்து அவள் தெளிவாகப் பதில் சொல்வதில்லை.

    பெரியம்மாவும், பெரியப்பாவும் தனித்தனியாக அவளைப் பார்க்க வருகிறார்கள்.  அவர்களுக்கு ஒழுக்கக் கேடாக அவள் வாழும் முறையைப் பார்க்கும்போது ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.  பெரியப்பா அவளைக் கண்டபடி திட்டி அடித்தே விடுகிறார்.  தற்செயலாக கோபாலி அவர் இருக்கும்போது வந்து விடுகிறார்.  கோபாலியையும் ஆத்திரத்துடன் அடிக்கிறார்.  “ஏன்டா என் பெண்யை அவுசாரியாக மாற்றப் பார்க்கிறாயா?” என்று கத்துகிறார். 

    திரும்பவும் அவருடன் வரச்சொல்லி அம்மணியைக் கூப்பிடுகிறார்.  அம்மிணி வர விரும்பவில்லை.  “நீ எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போ.  நீ என் பெண்ணே இல்லை.  தலை மூழ்கிவிடுகிறேன்..” என்று கோபத்துடன் போய்விடுகிறார்.

    இந்த நாவல் முழுக்க முழுக்க பேச்சுதான்.  தி ஜானகிராமன் மார்க்சியத்தைக் கிண்டல் செய்கிறார்.  எந்த அர்த்தமும் இல்லை வாழ்க்கைக்கு என்ற தத்துவத்தைக் கொண்டு வருகிறார்.  எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் சபலப்படும் கோபாலி.  எது குறித்தும் கவலைப்படாத அம்மணி.  நாளைய வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது என்று கூட கவலைப்பட மாட்டாள். அம்மிணிக்கு வேண்டியது அன்பு மட்டும்தான். 

    அம்மிணி நாட்டியமாடி பிரபலமாகி விடுகிறாள்.  கோபாலிதான் பிரபலப்படுத்துகிறார். எல்லோரும் அம்மிணியைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.  இங்கே ஜானகிராமன் இப்படி எழுதுகிறார் :’என்னைச் (அம்மணியை) சுற்றிச் சுற்றி வந்தார்கள்.  கோபாலியோடு வந்து கொண்டிருந்தவர்கள் கோபாலி இல்லாமல் தாமாக வந்தார்கள்.  சில சமயம் தனியாக வந்தார்கள்.  கிழவர்கள் வருவார்கள் – நடு வயதுகள் வரும், சிறிசுகள் வரும்,’

    ஒரு பெண்பிள்ளை, தாராளமாக நடமாட இடம் உள்ள வீட்டில் தனியாக இருந்தால் ஒரு வருடத்திற்குள் நூற்றுக் கிழவி கண்டதைக் கண்டு விடலாம்- கேட்பதையெல்லாம் கேட்கலாம், நினைப்பதையெல்லாம் நினைக்கலாம் – உணர்வதையெல்லாம் உணரலாம்- என்கிறார் ஜானகிராமன்.

    கோபாலி அம்மணியைக் கண்காணிக்க நினைக்கிறார்.  பட்டாபி என்ற அவருடைய உறவினர் பையனை கல்லூரியில் படிக்கிற பையனை அவளுக்குத் துணையாக இருக்க வைக்கிறார். அவன் அவளுடன் இருந்து கல்லூரியில் படிக்கிறான்.  அவனுக்குப் பாட்டு மீது ஆர்வமில்லை. 

    பத்திரிகையில் விமர்சனம் எழுதுகிற சுந்தரம் என்கிறவர் அம்மணியைப் பார்க்க அடிக்கடி வருவார்.  வயதானவர் ஆனால் சபலமானவர்.  ஒரு முறை அம்மணியைக் கட்டி அணைத்துவிடுகிறார்.  அமமணி அறுவறுப்படைகிறாள்.  ‘எனக்கு இதெல்லாம் பிடிக்காது’  என்கிறாள் அம்மணி.  ஒரு கிழமே போதும் (கோபாலியை நினைத்துச் சொல்கிறாளா?) என்கிறாள்.  ஒரு ஓரமாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த பட்டாபி இந்தக் காட்சியைப் பார்த்து விடுகிறான்.  சுந்தரத்தை அப்படியே தூக்கிக் கொண்டு போய் வீட்டின் வெளியே விட்டுவிடுகிறான்.

    அம்மணி அவன் செய்கையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள்.  அவனுடன் அவளுக்கு நெருக்கம் அதிகமாகிறது. 

    இந்த இடத்தில் ஜானகிராமன் பட்டாபி மூலம் ஒன்றைச் சொல்கிறார்:  ‘சோஷலா இருந்தா உண்டிப் பொட்டி மாதிரி பொன்னமான்னு நினைக்கிறா சில பேர்.”

அப்படின்னா என்ன என்று கேட்கிறாள் அம்மணி.  பட்டாபி விவரிக்கிறான்.  “பொன்னம்மான்னு ஒருத்தி இருந்தாளா, மேலத் தெருவிலே, ஆமடையான போனப்பறம் நாதியில்லாம போயிட்டாளாம்.  பிள்ளை குட்டி இல்லை.  உறவும் ஜனமும் இல்லை. சாப்பிடணுமே.  எல்லோரையும் உறவாக்கினுட்டாளாம். புருஷா, காசைப் போட்டுட்டு…”

    பட்டாபியுடன் உறவு நெருக்கமாகிவிடுகிறது.  கல்யாணத்திற்கு எதிரி அம்மணி.  கல்யாணம் செய்து கொண்டவர்களைக் கிண்டல் செய்கிறாள்.  அவளுக்கு உதவி செய்கிற பச்சையப்பன் திருமணம் செய்துகொள்கிறான். அதையும் கிண்டல் செய்கிறாள்.  மரகதம் என்கிற பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.  அவ அட்டைக் கருப்பு. அம்மணிக்குப் புரியவில்லை.

    கோபாலியோடு வெளி மாநிலங்களுக்குத் துணையாகக் கச்சேரிக்குப் போகிறாள் அம்மணி.   அங்குப் போனபோதுதான் அவள் உடம்பில் மாற்றம் ஏற்படுகிறது.  முதன் முறையாக அதை நினைத்துப் பயப்படுகிறாள்.  சிரித்துக்கொண்டே இருப்பவள் வாய் விட்டு அழுகிறாள்.   பட்டாபிக்கு மனம் திறந்து கடிதம் எழுதுகிறாள். 

    இந்த இடத்தில் ஜானகிராமன் இதை இன்னும் விவரிக்காமல் குறிப்பாக மட்டும் விளக்கிக் கொண்டு போகிறார். சென்னை வந்தவுடன் கோபாலி பட்டாபியின் இடத்தை மாற்றிவிடுகிறார்.  அம்மணிக்கு அதிர்ச்சி.  அவளைப் பார்க்க விடாமல் செய்து விடுகிறார்.

    பச்சையப்பனையும் அவன் மனைவியையும் தன்னுடன் வைத்துக்கொள்கிறாள் அம்மணி.   அம்மணிக்கு நாடு நாடாகச் சுற்றும் வழக்கம்.  பச்சையப்பனையும் மரகதத்தையும் வைத்துவிட்டு அவள் போய்விடுவாள்.  திரும்பவும் வரும்போது வீடு சுத்தமாக இருக்கும். நாலாவது தடவையாக வெளிநாடு சுற்றுகிறாள்.  இந்த முறை வெறுமனே சுற்றிப் பார்க்கப் போகி0றாள்.  பிக்காடியா சதுக்கத்தில் அம்மணியும் அவள் தோழி சுபலாவும் ‘இரவு ராணிகள்’ மாதிரி நடந்துகொண்டு இரண்டு இளைஞர்களை அழைத்துப் போகிறார்கள்.  அப்போதெல்லாம் அம்மணிக்கு மரகதம் ஞாபகம் வருகிறது.  ப்ரூஸ் என்ற சிப்பாயைச் சந்திக்கிறாள். அவனுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றுகிறாள். 

    ப்ரூஸ் அம்மணியைப் பார்த்துச் சொல்கிறான் : நீ முந்நூறு பேரோடு படுத்துக்கொண்டிருக்கலாம், மூவாயிரம் பேரை முத்தமிட்டிருக்கலாம்  ஆனால் நீ மிக மிகத் தூய்மையான மனுஷி.

        ப்ரூஸ÷ற்கு அம்மிணியை விட்டுப் பிரியவே மனமில்லை.  வீட்டிற்கு வந்தபோது மரகதமும், பச்சையப்பனும் இல்லை.  கோபாலி மாத்திரம் இருந்தார்.  ஏன் அவர்கள் இருவரும் இல்லை என்று கேட்கிறாள் அம்மணி.  மரகதத்திடம் கோபாலி செய்த சேஷ்டையினால் அவர்கள் இருவரும் அங்கிருந்து போய்விட்டார்கள்.

    ப்ரூஸ் அம்மணிக்குக் கடிதம் எழுதுகிறான் : இளமை போன பிறகு; உடம்பு இரண்டாம் பொருளாக, மூன்றாம் பொருளாக, கண்ணாடியில் பார்க்க விரும்பாத பொருளாக, ஆகும் வயதில், என்ன ஆகும்? உன்னை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்கிறான் அம்மணியிடம்.

    நடுத்தெருவில் பசு செத்துக் கிடக்கிறது.  அதை யாரும் கவனிக்கவில்லை. யாராவது அதைத் தூக்கினால்தான் உண்டு.  செத்துப்போன பசு அப்போது நினைக்கிறது.- நான் ஏன் மரப்பசவாக இல்லை.  பாலும் கொடுத்திருக்க வேண்டாம் – இப்படி நடுத்தெருவில் செத்திருக்க வேண்டாம்.

    எல்லாவற்றையும் விட்டுவிட்டு கோபாலியிடமிருந்து வந்துவிடலாமென்று நினைக்கிறாள்.  இப்போது அவளுடைய நண்பர்கள் மரகதம், பச்சையப்பன், பட்டாபி ப்ரூஸ்தான்.  பலவற்றைக்  கேள்வி கேட்கிற நாவல் இது.  

    நிச்சயமாக ஒருவர் படிக்க வேண்டும்.  1978ல் நான்  மீனாட்சி புத்தக நிலையம் மதுரையிலிருந்து இந்த நாவலை வாங்கினேன்.
       
    
    
    
    
    
    

Series Navigationபத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடுசெப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *