ஜெயகாந்தன் என்றொரு மனிதர்

This entry is part 2 of 33 in the series 12 ஜூன் 2011

(ஆனந்த் முருகானந்தம் தொகுத்து, எனிஇந்தியன் பதிப்பகம் வெளியிட்ட “அமெரிக்காவில் ஜெயகாந்தன்” நூலில் வெளியான கட்டுரை. திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.)

2000-ஆம் வருடத்தய ஜெயகாந்தனின் அமெரிக்க வருகைக்கு முன்னர் தன் நண்பரின் மகனாகவே என்னை அவர் அறிவார். தனக்கு மீசை அரும்பும் பருவத்தில் தன் பதினேழு வயதில் அவரைத் தேடிச் சென்று சேர்ந்து கொண்ட குப்பனின் மகன். ஜெயகாந்தனை நன்கறிந்த நால்வரில் ஒருவராகச் சொல்லப்படுகிறவரின் மகன். அந்த நண்பரின் மகனுக்கு அவர் பெயர் வைத்திருக்கிறார். நண்பரின் மகன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் வாழ்த்துகள் என்று பாராட்டிக் கையெழுத்திட்டிருக்கிறார். அந்த நண்பரின் மகன் திருமண விஷயத்தில் முடிவெடுப்பதற்கு நண்பருக்கு வழிகாட்டியிருக்கிறார். நண்பர் மகனின் திருமணத்தில் சிறப்புரையாற்றியிருக்கிறார். நண்பரின் பேரனை மடியில் வைத்துக் கொஞ்சியிருக்கிறார். இப்படி நண்பர் குடும்பத்துடன் ஜெயகாந்தன் பாராட்டிய நல்லுறவு நண்பரின் பொருட்டானது.

அமெரிக்காவில் ஜெயகாந்தனைச் சந்தித்துப் பழகுவதற்கு முன்னர் நானும் அவரை நான் என் தந்தையின் குருவாகவே அறிவேன். அவர் புத்தகங்களைப் பதின்ம வயதில் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்ததுகூட தந்தையின் குருவாகிற அளவுக்கு அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதை அறிகிற குறுகுறுப்புடன்தான். ஒருமுறை எங்கள் ஊரில் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசுவதற்கு முன்னர், எங்கள் ஊர்க் குழந்தைகள் சார்பாக – என் தந்தையார் அப்படிச் செய்யச் சொல்லிக் கொடுத்து – அவருக்கு மாலையிட்டிருக்கிறேன். அடிக்கடி என் தந்தையார் அவருடன் சுற்றுப்பயணம் செய்யக் கிளம்பி விடுவார். என் தாயாருக்கு என் தந்தையார் இப்படிக் குழந்தைகளையும் அவரையும் விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர்ப் பயணங்களில் அலைவது குறித்த வருத்தம் அவ்வப்போது உண்டாகும். அதேபோல என் பெரிய பாட்டனார் – என் தந்தையாரின் பெரியப்பா – ஒரு தமிழ் வித்வான். குழந்தைகள் இல்லாதவர். என் தந்தையை, என்னை என்று பலரை வளர்த்தவர். அவருக்கும் என் தந்தையாருக்கும் அரசியல், சமூக, இலக்கியக் கருத்துகளில் நிறைய வேறுபாடுகள். அவர் பெயர் கந்தசாமி. என் தந்தையார் அவர் பேச்சைக் கேட்காமல் ஜெயகாந்தன் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்வதைப்பற்றி  என் பெரிய தாத்தா, “அவர் ஜெய கந்தன். நான் வெறும் கந்தன்” என்று வேடிக்கையாகச் சொல்வார். ஆனால், என் தாயாரும் பெரிய தாத்தாவும் ஜெயகாந்தன் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவருக்குக் காட்டிய மரியாதையும், அன்பும், உபசரணையும் சிறுவனான எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஜெயகாந்தன் எங்கள் ஊருக்கு வரும்போது என் தந்தையார் சுழன்று சுழன்று ஏற்பாடுகளைச் செய்வார். விருந்தோம்புவார். ஜெயகாந்தனும் அவர் நண்பர்களும் எங்கள் வீட்டுக்கு வந்தபோது ஒருமுறை எங்கள் வீட்டுப் புழக்கடையில் கழிவறைக்குச் சில அடிகள் மட்டுமே தள்ளியிருந்த மாட்டுக் கொட்டகையில் மண்தரையின்மீது பாய்விரித்து உட்கார்ந்து மிகவும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் காரை பெயர்ந்துபோயும், தரை விரிசல் கண்டு அந்த விரிசலைத் தார் ஊற்றி அடைத்தும் வைத்திருக்கிற தட்டுமுட்டு சாமான்கள் நிறைந்த மொட்டை மாடியில் பேசியபடி இரவைக் கழிப்பார்கள். அல்லது என் தந்தையார் அவர் வேலை செய்த கிராமங்களுக்கோ அருகில் உள்ள மலைகளுக்கோ அவர்களை அழைத்துச் சென்றுவிடுவார். ஜெயகாந்தன் நண்பர்களுக்காக செய்துகொண்ட அனுசரணைகள் எனக்குள் ஆச்சரியமுண்டாக்கியுள்ளன. சென்னைக்கு ஜெயகாந்தன் திரும்புகிற இரவொன்றில் எங்கள் வீட்டில் இரவு உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது. ஜெயகாந்தனும் நண்பர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என் தந்தையார் அவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார். என் தந்தையாரைப் பார்த்துச் சாப்பிடவில்லையா என்று கேட்டார் ஜெயகாந்தன். “நான் சாப்பிடுகிறேன் ஜேகே. நீங்கள் சாப்பிடுங்கள்” என்றார் என் தந்தையார். “அப்புறமா நீ எங்கே சாப்பிடப் போகிறாய். இந்தாச் சாப்பிடு” என்று தன் இலையிலிருந்த சாப்பாட்டைப் பிசைந்து எடுத்து என் தந்தையாருக்கு ஜெயகாந்தன் கனிவுடன் ஊட்டிய காட்சி நினைவில் இருக்கிறது. இந்திராகாந்தியின் படுகொலையைக் கண்டித்து எங்கள் ஊரில் நடைபெற்றக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசிய அற்புதமான பேச்சு ஞாபகத்திலிருக்கிறது. அதேபோல அவர் தமிழகத் தலைவராகப் பொறுப்பு வகித்த இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசிய சம்மேளனத்தின் கூட்டமொன்றில் எங்கள் ஊரில் அவர் பேசிய பேச்சு நினைவில் இருக்கிறது. இப்படி ஜெயகாந்தனைப் பற்றிய என் சிறுவயது நினைவுகள் மிகவும் சொற்பமானவை. அப்போது அவரைப் பார்க்கும்போதெல்லாம் மிகவும் எளிமையானவராகவும், அன்பானவராகவும், இனிமையானவராகவும் தெரிகிறாரே. இவரைப் பார்த்து ஏன் எல்லாரும் பயப்படுகிறார்கள், கோபக்காரர் என்று சொல்கிறார்கள் என்று தோன்றியிருக்கிறது. ஆனாலும் அவரை நெருங்கிப் பழகுவதில் தயக்கமும், பயமும் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. தந்தையின் நண்பர்களிடம் இருக்கிற ஒரு தலைமுறை இடைவெளியும் இருக்குமென்ற எண்ணமும் இருந்தது.
ஆனால், ஜெயகாந்தன் என்ற பெயருக்கு உள்ளே இடையறாது அன்பும் பெருந்தன்மையும் பிரவகிக்கிற ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது; குழந்தையின் உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் வாழ்வின் ஒளிவீசுகிற ஒரு சுடர் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது; புதுமையிலும் மேதாவிலாசத்திலும் மேன்மக்கள் மரபிலும் கிளைத்த சிந்தனைகள் கிளைபரப்பிக் கொண்டே இருக்கின்றன; பேசாத நேரங்களிலும் எழுதாத நேரங்களிலும்கூட பெரிதினும் பெரிது தேடித் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிற ஓர் ஆன்மீக தரிசனம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது; எதைப் பற்றிய வருத்தமும் கவலையும் தன்னை அண்டவிடாத முதிர்ச்சியும் சித்தியும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது; விமர்சனங்களுக்கோ அடுத்தவர் கருத்துகளுக்கோ கவலைப்படாமல் நினைத்ததைச் சொல்லுகிற, நினைத்தமாதிரி வாழ்கிற தவவலிமை கைகூடியிருக்கிறது; அச்சத்தையும் பேடிமையையும் சுயநலத்தையும் பொறாமையையும் பொசுக்குகிற சீலங்கள் கனல்விட்டுக் கொண்டேயிருக்கின்றன என்பதையெல்லாம் அவரின் அமெரிக்கப் பயணத்தின்போது உடனிருந்து பார்த்து அறிந்து கொண்டேன். அதுமட்டுமா, தந்தையின் நண்பராக இருந்தவர், தனயனின் நண்பராகவும் ஆன கதை அது. தலைமுறைகளைத் தாண்டிய எழுத்தாளர் அவர் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தேன். தலைமுறை இடைவெளிகள் தன்னைத் தீண்டவிடாத மனிதரும்கூட என்று நான் உணர்ந்த தருணங்களின் தொகுப்பு அது.

ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை நான் அதற்குமுன்னரே நன்கறிந்திருக்கிறேன். ஜெயகாந்தன் என்ற மாமனிதரை நான் நன்கறிந்ததும் நண்பராக்கிக் கொண்டதும் அவருடைய அமெரிக்கப் பயணத்தில்தான்.ஜூன் 25, 2000 அன்று ஜெயகாந்தன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்தபோது அவரை விமான நிலையத்தில் வரவேற்றதிலிருந்து, ஆகஸ்ட் 16, 2000 அன்று ஜெயகாந்தன் இந்தியா திரும்பியபோது விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி வைத்ததுவரை ஜெயகாந்தனுடன் கழித்த பல பொழுதுகள் இறைவன் எனக்குக் கொடுத்த வரம். “என்ன தவம் செய்தனை” என்று நினைத்து எனக்குள் நான் பூரிக்கிற அளவு என் வாழ்வில் முக்கியமானவை. அவர் நியூஜெர்ஸியில் தங்கியிருந்த நாட்களிலெல்லாம் மாலையிலிருந்து பின்னிரவுவரை அவருடன் நேரம் செலவழித்திருக்கிறேன். அவர் பேசுவதை மனம் கிறங்கக் கேட்கிற அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அவருக்கு இருநாட்கள் நியூயார்க் நகரையும், சுதந்திரத் தேவிச் சிலையையும் சுட்டிக் காட்டுகிற வாய்ப்புப் பெற்றிருக்கிறேன். நியூயார்க் மெட்ரோபாலிடன் மியூசியம் ஆ·ப் ஆர்ட்டில் அரைநாளைக்கு மேல் செலவழித்து ஒவ்வொரு ஓவியத்தின்/சிற்பத்தின் முன்னும் நின்று நின்று அவர் பார்த்தது நினைவுக்கு வருகிறது. சுதந்திர தேவிச் சிலையைப் பார்த்துவிட்டு வந்து நடைபாதையில் கைவண்டியில் விற்கப்படுகிற ஹாட் டாக் (hot dog – வேறெதற்கும் பயன்படாத, மீதமாகிய, இறைச்சியை அரைத்துச் செய்யப்பட்டது) வாங்கிச் சாப்பிட்டோம். அவருக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று தயங்கியபோது, “மிகவும் நன்றாக இருக்கிறது” என்று அவர் ரசித்துச் சாப்பிட்டது மனதில் நிற்கிறது. முருகானந்தத்துடனும் அவருடனும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றுவந்து, ஐக்கியநாடுகளுக்கு வெளியே பலநாடுகளின் கொடிகளும் பறக்கிற கொடிக்கம்பங்களின் கீழே அமர்ந்து, சாலையில் மதிய உணவைச் சாப்பிட்ட காட்சி நேற்றுபோல இருக்கிறது.

வில்லனோவா பல்கலைக்கழகத்திலும், நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்திலும், அவர் பேசிய பேச்சுகளும் கேள்விகளுக்குப் பதிலளித்த பொறுமையும் புத்திசாலித்தனமும் இன்னமும் வியக்க வைக்கின்றன. என் வீட்டிற்குச் சாப்பிட வந்த இரவொன்றில், அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் அவருடைய ‘வேறு இடம் தேடிப் போவாளோ’ உள்ளிட்ட சில திரைப்படப் பாடல்களை அவருக்காக இசைப்பேழையில் ஓடவிட்டேன். அவருக்குப் பிடித்தமாதிரியான அசைவ உணவுகளும் பக்கார்டி ரம்மும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் விட அப்போது மூன்றரை வயதிருந்த என் மகனுடன் பேசுவதிலும் விளையாடுவதிலுமே மகிழ்ந்திருப்பதிலுமே அவர் பெருநேரத்தைச் செலவிட்டார். நண்பரின் குழந்தையாக என்னைப் பார்த்தும் நடத்தியும் வந்த ஜெயகாந்தனைக் குழந்தையாக நான் பார்த்த அற்புதமான சிலமணி நேரங்கள் அவை. “சிவகுமாரின் புத்திரரையும்கூட நான் பரிச்சயம் கொண்டவன்” என்று இது நடந்து ஐந்தரை ஆண்டுகளுக்கு அப்புறம் என் புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் இதை ஞாபகம் வைத்து எழுதிய அவரின் நினைவுத்திறனையும் நுண்ணுணர்வையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அமெரிக்காவில் வாழ்கிற இந்த நீண்ட ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து வருகிற பலவிதமான கலைஞர்கள், எழுத்தாளர்கள், பிரமுகர்கள் ஆகியோரைச் சந்திக்கிற வாய்ப்பு எனக்கு அவ்வப்போது கிடைத்தே வருகிறது. அவற்றில் ஜெயகாந்தன் என்ற மனிதரிடம் நான் கண்ட, கற்றுக் கொண்ட சில சிறப்புக் குணாதிசயங்களை மட்டுமாவது இங்கே சொல்லுவது முக்கியமானது.

1. அமெரிக்காவில் இருந்த நாட்களில் அவர் எதையும் இதுவேண்டும் என்று கேட்டதேயில்லை. முருகானந்தத்தின் துணைவியார் “என்ன சமைக்கலாம் ஜே.கே.” என்று கேட்டலோ, இது செய்யலாமா அது செய்யலாமா என்று கேட்டாலோ, எது என்றாலும் சரி என்பார். அல்லது உங்களுக்கு எது சுலபமோ அது என்பார். அல்லது, எல்லாரும் என்ன சாப்பிடுகிறார்களோ அதைச் சாப்பிடலாம் என்பார். ஜெயகாந்தன் இந்தக் குணநலம் எனக்கு முன்னரே தெரியும் என்றாலும், அமெரிக்காவில் பலருக்கும் இது ஆச்சரியமாக இருந்தது. பாட்டுக் கச்சேரி முடிந்தபின் பதினோரு மணிக்கு அப்புறமான இரவில் “சிக்கன் வேண்டும்” என்று கேட்ட பாடகரைப் பார்த்தவர்கள் இங்கிருக்கிறோம்.

2. அவர் இருந்த நாட்களில் ஒருநாள்கூட தன் சக எழுத்தாளர்கள்/கலைஞர்கள் ஆகியோரைப் பற்றிய புரளியோ, குற்றச்சாட்டோ, கிசுகிசுவோ பேசியதேயில்லை. எந்த எழுத்தாளரைப் பற்றியும் யார் கேட்டாலும் பலநேரங்களில் கருத்து சொல்ல மாட்டார் அல்லது அவர்கள் எழுத்தைப் பற்றிய தன்னுடைய சுருக்கமான கருத்துடன் நிறுத்திக் கொள்வார். ஒருமுறை வெளியே சென்றுவிட்டுக் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சு. சமுத்திரம் ஜெயகாந்தனைப் பற்றிச் செய்திருந்த விமர்சனம் ஒன்றைப் பற்றிச் சொல்லிவிட்டுச், சு.சமுத்திரத்தைப் பற்றி அவருடைய பல செயற்பாடுகளைச் சொல்லி நான் விமர்சித்தேன். நான் முடிக்குமுன்னே ஜெயகாந்தன் குறுக்கிட்டுச் சொன்னார். “யாரைப் பற்றியும் நல்லது இருந்தால் பேசலாம். மோசமானவற்றை நாம் ஏன் பேச வேண்டும்.” ஜெயகாந்தனின் பெருந்தன்மைக்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

3. எதிர்க் கருத்துள்ளவர்களை அவர் என்றும் எதிரியாக நினைத்ததே இல்லை. நண்பர் துகாராம் திராவிட இயக்கம் குறித்த தன் கருத்துகளைச் சொல்லி ஜெயகாந்தனுடன் விவாதித்தபோது, ஜெயகாந்தன் அவற்றைப் பொறுமையாகக் கேட்ட விதமும், பதில் சொல்வதில் காட்டிய நாகரீகமும் பண்பாடும் மிகவும் உயர்ந்த தளத்தில் இருந்தன.

4. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  அதிகபட்ச மரியாதையும் சலுகைகளும் கொடுக்கிறவர் அவர். அவர்களிடம் அவர் மனம் கோணுவதே இல்லை. அவர்கள் பார்வையில் அவர்கள் பிரச்னைகளையும், உலகையும் பார்க்க முயன்றவர் அவர். முருகானந்தத்தின் துணைவியார் என்னைவிட வயதில் மூத்தவர். ஆதலால் நான் அவரைப் பெயர் சொல்லி அழைக்காமல், அவர் மகனின் பெயர் மோகன் என்பதால், “மோகன் அம்மா” என்று அழைப்பேன். அதைக் கண்ட ஜெயகாந்தன் தானும் அவரை தன்னைவிட மோகன் அம்மா என்று அழைக்க ஆரம்பித்தார். தனக்குப் பிடித்த விஷயங்களை யாரிடமிருந்தும் எடுத்துக் கொள்ள அவர் தயங்கியதே இல்லை.

5. அவர் எழுதிய பல படைப்புகளை எழுத நேர்ந்த சூழல்களையும் நாட்களையும் அப்போது உடனிருந்த நண்பர்களையும் அவர் நினைவுபடுத்திப் பேசியதை உடனிருந்து கேட்கிற அரிய வாய்ப்பு கிடைத்தது. பல நேரங்களில் அந்தப் படைப்பைப் பற்றி நண்பர்கள் ஏதும் கேட்க உரையாடல் இப்படி புதிய தகவல்களுடனும் பரிமாணங்களுடனும் விரியும். ஜெயகாந்தன் பேசும்போது மற்றவர்கள் இடையில் பேசினால், அவர் சிந்தனைப் போக்கு தடைபட்டு அவர் பேசுவதை நிறுத்திவிடுவார். அப்புறம் அவர் திரும்பப் பேசுவாரா என்பது அவருடைய உள்ளவெழுச்சியைப் பொருத்தது. ஆதலால், அவர் பேசும்போது அவரையறிந்த நண்பர்கள் யாரும் குறுக்கிட மாட்டார்கள். ஆனால், ஆர்வக் கோளாறில் என்னைப் போன்றோர் அவர் பேச்சுக்கிடையே கேட்ட பல கேள்விகளால் தடைப்படாது தனிப்பட்ட உரையாடல்களில் இந்தப் பயணத்தில் ஜெயகாந்தன் பேசியது எங்களுக்கெல்லாம் கிடைத்த அதிர்ஷ்டமேயாகும். நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் அவர் உரையாற்றிய அன்று இரவு இரண்டு மணிக்குமேல் வரை, முருகானந்தம் அவர்கள் இல்லத்தில், முருகானந்தம், ராஜாராம், துகாராம், இன்னும் சில நண்பர்கள், என்னுடைய குடும்பங்கள் சுற்றியமர்ந்து கேட்டுக் கொண்டிருக்க அவர் பேசிய பேச்சுகளும், மேற்கோள் காட்டிய இலக்கியங்களும், பாடல்களும் கொடுத்த இலக்கிய அனுபவம் மாதிரி ஒன்றை நான் அதுவரை கண்டதில்லை. அன்று இரவு தூங்கும்போது என் நண்பரின் மனைவி தாரைதாரையாகக் கண்ணீர் விட்டாராம். நண்பர் ஏன் என்று கேட்டபோது, “இப்படிப் பேசுகிற ஒரு மேதையின் பேச்சை மறுபடியும் எப்போது கேட்கப் போகிறோம்” என்றாராம்.

6. அவர் சென்ற சில ஊர்களில் திட்டமிட்டபடி அவரைச் சில இடங்களுக்குக் கூட்டிச் சென்று காட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, அவரை அழைத்துச் சென்றவர்கள் அதுபற்றி வருந்தினாலும், அது பெரிய விஷயமில்லை என்று அவர்கள் மனம் வருந்தாமல் அவர் பேசியதை நண்பர்கள் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். டென்னிஸியில் தங்கியிருந்தபோது Smokey Mountains சென்று பார்க்கிற திட்டமிருந்தது. நேரமில்லாததால் கடைசியில் போக இயலவில்லை. அதுகுறித்து அங்கிருந்த நண்பர் வருந்தினாராம். அப்போது அவர் வீட்டிற்கு வெளியே நின்றபடி ஜெயகாந்தன் புகைபிடித்துக் கொண்டிருந்தாராம். தூரத்தில் அவர்கள் செல்லவிருந்த மலைத்தொடர் கண்ணுக்குத் தென்பட, அதைக்காட்டி, “Here is smoke, there is mountain. We have seen Smokey Mountain. Dont worry about it” என்று ஜெயகாந்தன் அவருக்கு நகைச்சுவையாக ஆறுதல் சொன்னதை அந்த நண்பர் என்னிடம் சொன்னார்.

இப்படியாக… ஜெயகாந்தனுக்குள் உறைகிற மேன்மக்கள் மரபொன்றின் தொடர்ச்சியை அவரின் அமெரிக்க விஜயம் முழுதும் தரிசிக்கிற அனுபவம் எனக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்துக் கொண்டேயிருந்தது. அவர் எழுத்துகளுக்கு இணையான ஏன் அவர் எழுத்துகள் காட்டும் உன்னதங்களை மீறிய உன்னதங்களின் உறைவிடம் அவர் என்பதை நான் உட்படப் பலர் உணர்ந்த பயணம் அது.இங்கிருந்து இந்தியா சென்றபின் ஜெயகாந்தன் அவரைச் சந்தித்தபின் என் தந்தையார் என்னிடம் பேசும்போது சொன்னார்: “ஜெ.கே. அமெரிக்கா வந்துவிட்டு வந்தபின் என்னைவிட நீதான் அவருக்கு நெருக்கம். உன்னைப் பற்றி நான் பெருமைப்படுவதைவிட அவர் அதிகம் பெருமைப்படுவதாக என்னிடம் சொன்னார்.” இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தாலும், வாழ்நாள் முழுவதும் ஜெயகாந்தனுக்கு அணுக்கமாக இருக்கிற என் தந்தையாரைவிட நான் அவருக்கு நெருக்கம் ஆகிவிட முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் – “ஜெயகாந்தன் என் நண்பரும்கூட” என்று இனி என் வாழ்நாள் முழுவதும் நான் சொல்லிக் கொள்வதை அவரின் அமெரிக்கப் பயணமே சாத்தியமாக்கியது. நான் மட்டுமா அப்படிச் சொல்லிக் கொள்ள முடியும். தன் மூன்றரை வயது நிகழ்வுகள் நினைவில் இருந்தால், என் மகனும் கூட அப்படிச் சொல்லிக் கொள்ள முடியும் அல்லவா.
இப்படி ஒரு குடும்பத்தில் தந்தைக்கும், மகனுக்கும், மகனின் மகனுக்கும் நண்பரான எழுத்தாளர் எனக்குத் தெரிந்து ஜெயகாந்தன் மட்டும்தானே. அதுவே அவர் அமெரிக்க விஜயத்தின் தனிச்சிறப்புமென்று நான் என்னளவில் நினைக்கிறேன்.

(நன்றி: அமெரிக்காவில் ஜெயகாந்தன் – தொகுப்பு: ஆனந்த் முருகானந்தம், எனி இந்தியன் பதிப்பக வெளியீடு.)

 

Series Navigationஇந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்காட்சி மயக்கம்
author

பி கே சிவகுமார்

Similar Posts

Comments

  1. Avatar
    ஜெயமோகன் says:

    நல்ல கட்டுரை. இப்போது டொரொண்டோவில் இருக்கிறேன். இத்தனை தூரத்தில் இருக்கையில் திடீரென பெரிசை பார்த்து நாளாயிற்று என்ற ஏக்கத்தை உருவாக்கிய கட்டுர. சென்றதுமே முடிந்தால் 26 அன்றே பார்த்துவிடவேண்டும்.
    ஜெ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *