ஜோக்கர்

Spread the love

 

0

மனநிலை பிறழ்ந்த மன்னர் மன்னனின் போராட்ட குணத்தால் தேசிய ஊழல் அம்பலமாகும் ஆவணம்.

பாப்பிரபட்டி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் ஆலையில் வேலைக்கு இருக்கும் மன்னர் மன்னனுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த மல்லிகாவை திருமணம் செய்ய ஆசை. மல்லிகாவின் ஒரே நிபந்தனை வீட்டில் கழிப்பறை இருக்க வேண்டும் என்பது தான். அதன் முயற்சியில் ஈடுபடும் மன்னர்மன்னனின் காதலை புரிந்து கொண்டு அவனைத் திருமணம் செய்து கொண்டு, அவன் பிள்ளையை சுமக்கும் கட்டத்தில் ஊழல் அரசியலால் சரியாகக் கட்டப்படாத கழிப்பறை இடிந்து மல்லிகா மேல் விழ, அவள் தாவர நிலைக்கு போகிறாள். கருவிலேயே பிள்ளையும் இறக்கிறது. அதனால் மனநிலை பிறழ்ந்த மன்னர் மன்னன் தன்னை ஜனாதிபதி என்று நினைத்துக் கொண்டு, ஒத்த கருத்துடைய பெரியவர் பூஞ்சோலை, இளம் விதவை இசையுடன் நடத்தும் போராட்டங்கள் அரசின் ஊழல் ராஜ்ஜியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. மன்னர் மன்னனின் போராட்டத்தின் கதி என்ன என்பதை ரணமான படமாய் தந்திருக்கீறார்  ராஜு முருகன்.

கோட்டு சூட்டுடன் மன்னர் மன்னனாக குரு சோமசுந்தரம் விறைப்பாக நடந்து வரும் காட்சி முதல் அவர் மேல் நமக்கு கரிசனம் பொங்குகிறது. டி வி எஸ் 50ல் ஒரு கோவில் குடையை வெயிலுக்கு பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அவர் வலம் வரும் காட்சியும், நூதனமான, சில சமயம் கிறுக்குத்தனமான செய்கைகளாலும் அவர் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் காட்சிகளும் அழுத்தமான பதிவை நம் மனங்களில் ஏற்றுகின்றன. இசையாக காயத்திரி கிருஷ்ணா, ஒப்பனை இல்லாத முகத்துடன் இயல்பான நடிப்புடன் வாழ்ந்திருக்கீறார். மல்லிகா பாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் யதார்த்த படிமம். பூஞ்சோலையாக மு.ராமசாமி வெளூத்துக் கட்டுகிறார்.

செழியனின் கேமரா பயணிக்கும் ஆரம்பக்காட்சியிலேயே பாப்பிரப்பட்டி கிராமத்தில் நாமும் இருக்கிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. மொத்த படத்தின் காட்சிகளும் தூரிகையில் வரைந்த ஓவியங்களாக வெளிப்பட்டிருப்பது செழியனின் திறமைக்கு சான்று.

ஷான் ரோல்டனின் இசை எங்கேயும் கதையை விட்டு நகரவேயில்லை. கிராம மெட்டுகளில் அவர் இசைத்திருக்கும் இழைகள் பட்டு சரிகை கம்பிகள். “ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினே “ பாடல், படம் முடிந்த வெகுநேரம் மனதில் தங்குவதே அவரது இசைக்கான வெற்றி.

ராஜு முருகன் அழுத்தமான கதையைப் பின்னி, தெளிவான நீரோட்டமாக திரைக்கதையை அமைத்து, துருத்தாத சொல்லாடல்களால கவர்கிறார். நையாண்டி இயல்பாக வெளிவந்திருக்கீறது படம் நெடுக!

“ நீங்க ஒண்ணும் சகாயம் பண்ண வேண்டாம்! சகாயம் மாதிரி நடந்துக்கிட்டாலே போதும்”

ஒரு கழிப்பறையின் நிதி ஒதுக்கிடு, ஊழல் அரசியலால் பங்கு போடப்பட்டு அதனால் ஒரு உயிர் பலி வரை போகிறது என்பது நெஞ்சில் அறையும் உண்மை.

இதை எந்த வித சமரசமின்றி தைரியமாகச் சொன்ன ராஜு முருகனுக்கு நிச்சயம் விருது கொடுக்கப்பட வேண்டும்.

0

வீடு கட்டறமோ இல்லையோ முதலில் கழிப்பறை கட்ட வேண்டும் கணவர்களே!

 

Series Navigationபூகோளச் சூடேற்றும் தீவிர வாயு கார்பன் டையாக்சைடு மாற்றப்படும் இயக்கத்தில் மின்சக்தியும் உற்பத்திகற்பனையும் விளையாட்டும் – செந்தில் பாலாவின் ‘இங்கா’-