ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா

ஹெச்.ஜி.ரசூல்

ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா.. என்பது குறித்த உரையாடலை கவனிக்க நேர்ந்தது.பீர்முகமது அப்பாவின் பாடல்களைப் புரிந்து கொள்ளுதல் தொடர்பாக சகோதரர்கள் சாகிர் அலி,பஷீர்,சாஜித் அகமது, ஹாமீம்முஸ்தபா முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட நண்பர்களும் எதிர்தரப்பில் சகோதரர் கெளஸ்முகமது,அஸ்லம்,ஷறபு உள்ளிட்ட நண்பர்களும் விவாதம் புரிகின்றனர். இதில் எனது சார்பாக எனக்குத் தென்பட்ட சில கருதுகோள்களை முன்வைக்கிறேன்.

1) இறைவேதத்தின் சாரமான சூரத்துல் பாத்திஹாவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தமிழில் ஞானப்புகழ்ச்சியின் துஆஇரப்பாக நெஞ்சுருகச் சொல்லித்தந்தது சூபிஞானி பீர்முகமது அப்பா என்பதை யாராவது மறுக்கமுடியுமா..(அவூது பில்லாஹி எனத்துவங்கி பிறகுமத்திக்க யா அறுஹமற் றாகிமீன் எனமுடியும் 225 பாடல்களின் 2206 வரிகள்- இது உள்ளடக்க ஒத்திசைவு இணைகாணல் முறை மொழிபெயர்ப்பாகும்.)

2)இஸ்லாத்தின் அடிப்படைகளான அவ்வல் கலிமா ஷஹாதத்,99 இறைத்திருநாமங்கள் அஸ்மாவுல் ஹுஸ்னா,இஸ்முல் அக்ளம் பிஸ்மியின் தத்துவார்த்தவிளக்கம், தன்ஸுலாத் பிரபஞ்ச உருவாக்கம்,உயிரின்தோற்றம்,நபிமுகமது(ஸல்)வின்மாண்பு,ஆதம்நபி,நூஹூநபி,மூசாநபி,இபுராகீம்நபி,யூனூஸ்நபி,யூசுப்நபி,என நபிமார்களின் வரலாறு(பாடல்கள் 215 முதல் 225 முடிய) ஹதீஸ்மொழிகள்,என பல்வேறுவகைப்பட்ட இஸ்லாமிய மரபுகளை தமிழில் அற்புதமாக ஞானப்புகழ்ச்சியில் எடுத்துரைத்தது பீர்முகமது அப்பா என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா..

3)பீர்முகமது அப்பா எழுதிய பாடல்களின் எண்ணிக்கை பதினெண்ணாயிரம். இன்று நமக்கு கைவசம் கிடைக்கும் பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழாயிரத்தை எட்டும்.வெண்பா,விருத்தம் என பல்வகை பாவடிவில் ஏறத்தாழ நாற்பத்தி எட்டாயிரத்துக்கும் (48000) மேற்பட்ட வரிகளில் பீர்முகமது அப்பா ஞானக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.இதனை ஓரளவாவது கற்றுணராமல் இந்த 48000 வரிகளில் இரண்டுவரிகளை மட்டும் எடுத்து வைத்து பீர்முகமது அப்பாவை விமர்சிப்பது எந்தவகையில் நியாயம்..

4) எதிர்தரப்பு சகோதரர்கள் நீயே உனக்கு ஸுஜூது செய்தாய்,நீயே புவிக்குள் றசூலாக வந்தவன் என வரும் வரிகள் ஞானப்புகழ்ச்சியின் 118வது பாடலில் இடம்பெறுவதாகும். இதன் ஆழ்ந்த பொருளுணர வேண்டுமானால் ஆறாறுக்கப்பால் எனத்துவங்கும் காப்புப் பாடலிலிருந்து வாசித்து ஒவ்வொரு சொல்லாடல்களுக்கும் மெய்ப் பொருளுணர்ந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.எனவே விமர்சிக்கும் சகோதரர்கள் ஆறாறுக்கப்பால்,ஐபேரும் காணாமல்,முத்தோடு பவளம் பச்சை என வரும் தமிழ்சொற்றொடர்களின் வழியாக 117 பாடல்களுக்கும் பொருளுணர்ந்து 118 வது பாடலுக்கு வரும்போதுதான் அவ்வரிகளின் பொருள் விளங்கும்.வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு மனநிலைகளில் வாசித்துப்பாருங்கள்.இதுதான் வாசிப்பின் அரசியல்(politics of reading)அப்படியும் அவ்வரிகளின் பொருள் விளங்காமலோஅல்லது இஸ்லாமிய இறையியலுக்கு மாறுபட்டதாகவோ அவ்வரிகள் இருப்பதாக மீண்டும் நினைத்தால் சொல்லுங்கள். அதன் சூட்சுமப் பொருளை நீங்கள் விளக்கம் பெறலாம்.ஆனால் அதற்குமுன், முந்தைய 117 பாடல்களின் விளக்கங்களை ,அவற்றை நீங்கள் புரிந்து கொண்டவிதத்தை நீங்கள் சொல்லியாக வேண்டும்.

5)ஒற்றை வாசிப்பு முறைக்கு எதிரான பன்மைவாசிப்பை(multiplicity of meaning) உருவாக்கினால்தான்பீர்முகமதுஅப்பாபயன்படுத்தியிருக்கும் சக்தி,சிவன்,அங்கரன்,பஞ்சாட்சரம்,முகமாறு என அனைத்து யோக,பரிபாஷை சொற்களையும்,குறியீட்டு மொழிபற்றியும் ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முடியும்.இம்முறையியலை கையாண்டு பாருங்கள். பிடிபடவில்லையெனில் இதனையும் உரைமரபின் துணை கொண்டு நாம் அறிந்து கொள்வது மிக எளிதானது.

6) பீர்முகமது அப்பாவின் சில பாடல்களது பொருளை நெருங்க வேண்டுமானால் பழந்தமிழ் சங்க இலக்கியம், 2-ம் நூறாண்டில் துவங்கும் வள்ளுவம் போன்ற சமண பெளத்த இலக்கியம்,7ம் நூற்றாண்டிற்கு பிறகான சைவ, வைணவ இலக்கியங்கள் வழியாக பல்சமயச் சூழல்தன்மையோடு பயணம் செய்ய வேண்டும்.

அரபு சொல்வரலாறு( அலிப், பே, லாம், ஹே, சீன், நூன், போன்றவை)அரபுமொழிச்சொற்கள்(தவக்கல்,தறஜாத்து,லவ்ஹு,ஷபாஅத்,அக்ல்,யகீன்,போன்றவை)அரபு மொழிக் கட்டமைப்பு(அவ்வல் அஹதாக நின்றமரம்/கொத்தாயிரங்கனியே ஹூ/துலங்கு ஷஹாதத்து,அத்தஹியாத்தும் மிக்கோர் புகழ்நபி சலவாத்தும் போன்றவை) தமிழோடு இணைத்து வாசித்து புரிந்திருக்க வேண்டும்.

இந்தியதத்துவமரபின் அத்வைதம்,துவைதம்,விசிஷ்டாத்வைதம்,வேத மறுப்புத் தத்துவங்களான சாங்கியம்,சாருவாகம்,உலகாயதம்,ஆசீவகம்,சித்தர்மரபு வாசித்திருக்கவேண்டும்.இஸ்லாமிய சட்டவியல் ஷரீஅத்,ஆன்மீகவியல் தரீகத்,ஹகீகத்,மஹரிபத்,வஹ்த்துதுல் உஜூத்,வஹ்த்துல்ஷுஹுத்,உலூஹிய்யத்,ருபூபிய்யத் இவற்றின் துணையின்றி பீர்முகமது அப்பாவின் சில பாடல்களை எப்படி பொருள் கொள்வீர்கள்… இவை அல்லாத மிக எளிமையான தமிழிலும் மனிதகுலம் முழுமைக்கும் பிரார்த்தனைபுரிகிற

பீர் முகமது அப்பாவின் இறை நேயம் வழி வெளிப்படுகிற மானுட நேயம் என்பது கொடுமுடி. இது குறித்து பிறிதொருதடவை பேசலாம்.

7) நாம் தொழுகை என்று தமிழில் குறிப்பிடுவதை சமணமரபின் திருவள்ளுவர் தெய்வம்தொழாஅள் என்பதாகவே பயன்படுத்தினார்.சைவமரபில் இது அடி தொழுதலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமணர்களும், சைவர்களும் பயன்படுத்தியதால் முஸ்லிம்கள் தொழுகை என்ற சொல்லை பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமா என்ன..

8) பீர்முகமதுஅப்பா தனது பாடலில் தேவர்குலசிகாமணியே என்றொரு சொற்றொடரை பயன்படுத்துகிறார்.எனவே கள்ளர், மறவர் இனமான தேவர்சாதியின் தலைவராக மட்டும் அல்லாஹ்வை பீர்முகமது அப்பா கூறிவிட்டார் என்று கூறுவது சரியாகுமா..எனவே ஒரு பாடல்பிரதியை பொருள்கொள்ளும் போது சூழல்சார்ந்த அர்த்தம்(contextual meaning)பல்பொருள்சார்ந்த அர்த்தம்(multiple meaning) என்பவையும் முக்கியமானவை. கவனத்தில் கொள்வீர்களா..

9)இன்னும் நியாயமான முறையில் உரையாடலைத் தொடர்ந்தால் குரானிய மொழியாடல்களை பொருள் கொள்ளுதல் உட்பட இன்னும் நிறைய விஷயங்களையும்பேசலாம்.பீர்முகமது அப்பாவின் பாடல்களுக்கு வகாபிகளின் சித்தரிப்பு மட்டுமல்ல ,

இந்துத்துவவாதிகளும்,மேற்கத்திய அறிவுஜீவிகளும் குரானிய மொழியாடல்களை எதிர்மறையாகவும், ஆபத்தானதாகவும் சித்தரிக்கும் முறையியலுக்கு எதிராக எப்படிப்பட்ட வாசிப்பை நாம் நிகழ்த்தவேண்டும் என்பதையும் கூட பேசலாம்.இதற்கு ஒற்றை அதிகாரத்தை வலியுறுத்தும் வகாபிய வாசிப்புமுறை உதவாது

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை