டாக்டர் அப்துல் கலாம் 87

தேவாலயம் திருக்கோயில்
மசூதிகளிலெல்லாம்
அமைதிப்புறாவாய் அமர்ந்தவர்

மரக்கலம் வாழ்க்கையில்
விண்கலம் கண்டவர்

மீன்பிடி ஊரில்
மின்னலைப் பிடித்தவர்

இரை கேட்கும் வயதில்
இறக்கைகள் கேட்டவர்

யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்ற
பூங்குன்றனாரைப்
பூவுலகிற்குச் சொன்னவர்

கோடிக் குழந்தைகளைக்
கூர் தீட்டியவர்

நூறு கோடி மக்கள்
இதயவீடு தந்தும்
காலடியில் வாழ்ந்தவர்

வறியோருக்காக
வாரித் தந்தவர்

பகை, சோம்பலுக்கு
அர்த்தம் அறியாதவர்

விண்ணின் உச்சியை
விண்கலத்தால் தேடியவர்

வல்லரசு வரிசையில்
இந்தியாவை இணைத்தவர்

இளையர்களுக்குள் கிடக்கும்
இமயத்தைச் சொன்னவர்

மண்வாழ மக்கள்வாழ
மரங்கள் நட்டவர்

உள்ளங்களைத் தூர்வாரி
அறிவுநீர் தந்தவர்

என்றெல்லாம்

விட்டுச் சென்ற இவர் புகழை
விண்கலங்கள் விண்ணில் எழுத
அள்ளிக் கொண்டன
நட்சத்திரங்கள்

ஒவ்வொரு இந்தியனுக்கும்
‘போஸ்டல் கோட்’
டாக்டர் அப்துல்கலாம்

அமீதாம்மாள்

Series Navigationமருத்துவக் கட்டுரை ரூபெல்லா ( RUBELLA )அறுவடை