டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 2

This entry is part 26 of 33 in the series 14 ஏப்ரல் 2013
நெடுங்கதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்.

பெண் பார்த்த படலம் முடிந்து இரண்டு நாளாகியும் வீட்டில் ஒரே மௌன போராட்டம் தான். ஏதோ கடமைக்கு சமைத்து வைத்துவிட்டு டைனிங் டேபிள் மீது “எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடவும்.”..என்று ஒரு பேப்பரில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்து விட்டு கோவிலுக்குப் போய் விடுவாள் சித்ரா.

ஏன்மா…? ஏன் பேசமாட்டேங்கறே?  கௌரி சத்தமாக அம்மாவின் முகத்தைத் திருப்பி நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்கிறாள். அவா வேண்டாம்னு சொல்லிட்டு போனதுக்கு உனக்கெதுக்கு என் மேல தேஷியம் ? இப்போப் புரிஞ்சு போச்சு நோக்கு என்னை சீக்கிரமா கல்யாணத்தைப் பண்ணி இந்தாத்துலேர்ந்து தொலைச்சுக் கட்டணும் ..அது ஒண்ணு தான் உன்னோட அம்பிஷன்..அப்படித்தானே? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ….நன்னா ரெண்டு பேருக்கும் தான்…சொல்றேன். “இனிமேல் இந்தாத்துல என்னைக் கேட்காமல் பெண் பார்க்கறேன் புண்ணாக்குப் பார்க்கறேன்னு..” யாரையாவது கூப்டேளானாத் தெரியும் சேதி. அப்பறம் யாருமே நம்மாத்துக்கு வராத மாதிரி பண்ணிடுவேனாக்கும்..அடுப்பில் போட்ட கடுகாக பட பட வென்று பொரிந்து தள்ளிவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொள்கிறாள் கௌரி.

சித்ரா வாயடைத்துப் போய் ஈஸ்வரனைப் பார்க்கிறாள்…”பிள்ளையார் பிடிக்கப் போயி குரங்கான கதையான்னா இருக்கு ” இவளோட கதை. யானை தன தலையில் தானே மண்ணை வாரி தூத்திக்குமாம்…அதே மாதிரி பேசிட்டுப் போறதைப் பாருங்கோ. இவ்ளோ படிக்க வெச்சதுக்கு வாய் மட்டும் தான் வளர்ந்திருக்கு.இந்தக் கத்து கத்தறா …இதுல நான் வேற பேசணுமாம்…..நானும் சொல்லிட்டேன்….இன்னிலேர்ந்து நான் மீண்டும் மௌன விரதம்.
அவளுக்காச்சு…நேக்காச்சு..யாருகிட்ட….என்கிட்டயேவா? சித்ராவின் அத்தனை ஆற்றாமையும் வார்த்தைகளில் வெடிக்கிறது.

ஈஸ்வரன், தன மனைவி சித்ராவைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு வெளியில் போகத் தயாராக ஷர்ட்டை மாட்டிக் கொண்டு கிளம்புகிறார்.

ஏன்னா…நீங்க எங்கே கம்பி நீட்டறேள்?  ஆண்களுக்குத் தான் உள்ளதா….ஆ…ஊ…ன்ன ஷர்ட்ட மாட்டிண்டு கிளம்ப..? நாங்க மட்டும் என்னவோ சாஸ்வதமா அடுக்களையை சாசனம் எழுதி வாங்கீண்டா மாதிரி எப்போப் பாரு உங்க வயித்தை எல்லாம் நான் கட்டீண்டு அழறேன்…..அதும் இந்த வேகாத்த வெய்யில்ல.! சித்ரா எரிந்து விழுகிறாள்.

பின்ன உன்னோட சேர்ந்து என்னையும் அடுக்களையில் வேகச் சொல்றியாக்கும்….நான் ரெடி…! நான் சமையல் செய்ய ஆரம்பிச்சா அவ்ளோதானாகும்..நேக்கு மவுசு கூடும்…ஆனா நீ தான் புவ்வாவுக்கு என்ன செய்வே? மாசா மாசம் யாராக்கும் படியளப்பா ..இதெல்லாமாக்கும் நீ சோதிக்கணும, கேட்டியோ. சும்மா வாய்க்கு வந்ததோ மாங்காய் புளிச்சதோன்னு பேசப்படாதுங்கிட்டியா…சொல்லிக் கொண்டே கேட்டைத் தாண்டி சென்று விட்டார்.மனசுக்குள் “எஸ்கேப்”.

அறையிலிருந்து அப்பா பேசுவதைக் கேட்டபடியே வெளியில் வந்த கௌரி “அம்மா, நோக்கு பாட்டியாத்துக்கு போகணுமானாப் போய்க்கோ….கொஞ்ச நாள் உங்கமாவாத்தில் போய் ஜாலியா இரேன்..யார் உன்னத் தடுக்கறா ? நான் எங்க கேண்டீன்ல பார்த்துக்கறேன்…இந்த அப்பாவுக்குத் தான் இருக்கவே இருக்கே….”கிருஷ்ண விலாஸ் ” இட்லியும் கொத்தமல்லி கொத்ஸும் …நீயும் கம்பிநீட்டு….கதவை நீட்டு..!

ஓ …அதாக்கும் தைரியம்…! நீ சொல்லாட்டாலும் நான் போகத் தான் போறேன். நான் இல்லாட்டாத் தான் உங்க ரெண்டு பேருக்கும் என்னோட அருமை புரியுமாக்கும். .உனக்குக் கார்த்தால டிரெஸ் பண்ணிக்கவே நேரம் பத்தாது. கார் வந்து வாசல்ல ஹாரன் அடிச்ச பிறகு தான் உன் உடம்புல சுறுசுறுப்பு வரும். நான் மட்டும் இல்லையானாத் தெரியும் சேதி…இப்போ நோக்கெதுக்கு என்னோட கவலை…? வாசல்ல ஹாரன் சத்தம் கேட்கிறது பாரேன்..உன்னோட ஆபீஸ் கார் வந்தாச்சு நீ போய்க்கோ. சித்ரா கௌரியைப் பார்த்து சொல்லிக் கொண்டே தனது  புடவையை ஓங்கி உதறி மடித்துக் வைக்கிறாள்.

கௌரி கிளம்பி காரில் ஏறியதும் கார் உறுமிக் கொண்டு கிளம்பியது.

இடி இடிச்சு நின்னாப்பல இருக்கு…! கிளம்பற வரைக்கும் ஒரே தடால் தடால் தான்…..என்று அலுத்துக் கொண்டே கதவைச் சார்த்தி விட்டு உள்ளே வந்தவளுக்கு ஆச்சரியமாக அழைப்பு மணி அடிக்கவும்…திகைப்புடன்…”இதோ வரேன்” என்று குரல் கொடுத்தபடியே வாசல் கதவைத் திறக்கிறாள் சித்ரா.

கதவருகில் பார்த்த முகங்கள்…! இரண்டு பெரும் சிரித்தபடியே பெட்டியோடு நிற்பதைக் கண்டு சட்டென்று நினைவுக்கு வராமல் திகைப்புடனும், குழப்பத்துடனும் “நீங்கள் யாராக்கும்?” என்று இழுக்கிறாள் சித்ரா.

போன வருஷமாக்கும் நாங்கள் இங்க வந்தோம்..உங்காத்து பொண் கௌரியைப் பொண் பார்க்க….ஓர்மையில்லையா ?  ….வயசாச்சோன்னோ….நம்மளக் கேட்டா மறதி வரது ..! நேக்கும் இப்படித் தான்….நேத்துப் பாத்தவாளையே ஓர்மையிருக்கறதில்லை  இதாக்கும் என்னோட ஒரே பிள்ளை  பிரசாத்….டெல்லிலேர்ந்தாக்கும் வரோம். என்றதும்….எங்கிருந்தோ ஒரு துடிப்பு சித்ராவை ஒட்டிக் கொண்டது.

ஓ …நீங்களா…நன்னாச்சு .வாங்கோ…வாங்கோ…..முகமெல்லாம் மின்னலடிக்க மனசில் திடீரென்று தீபாவளி வந்து போக வாயெல்லாம் சக்கரைப் பொங்கலாக…கண்கள் கார்த்திகையாக ஒளிர ஒரே நொடியில் பல பண்டிகைகள் செலவில்லாமலே கொண்டாடினாள் சித்ரா.!இவர்கள் போன வருஷம் பெண் பார்த்துட்டு  ஒரு  லட்சம் வரதட்சணை கேட்டவர்கள்.மனது மணி அடித்தது.

உட்காருங்கோ….உட்காருங்கோ…..முந்தாநாள் தான் உங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோமாக்கும் .
என்ற சித்ரா அவர்களை தடபுடலாக வரவேற்று “இந்த நேரம் பார்த்து அவர் கூட ஆத்துல் இல்லை…வெளில போயிருக்கார்…சித்த நாழியாச்சு..கௌரியும் ஆபீஸ் போயாச்சாக்கும்…நீங்க வருவேள் ன்னு கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்திருந்தால் நன்னாருந்திருக்கும்…இருங்கோ காப்பி கலந்து எடுத்துண்டு வரேன்.அவளது படபடப்பு மொத்தமும் பேசித் தீர்த்து மூச்சு வாங்கியது சித்ராவுக்கு.

ரொம்ப தாங்க்ஸ் மாமி….நாங்களும் யோசிக்கவேயில்லையாக்கும் …இவன் தான் பிரசாத் கண்டீஷனாச் சொன்னான்…”டௌரி எல்லாம் ஒண்ணும் வேண்டாம் கௌரி மட்டும் போதும் ” ன்னு பேசி முடியுங்கோன்னு..அதான்..உடனே மெனக்கெட்டு இதுக்காகவே கிளம்பி வந்தோம்.ஒரு வேளை கௌரிக்கு வேற இடம் தகையலைன்னா பார்க்கலாமே, இல்லையா? நீங்க கௌரி ஆபீஸ் போயிருக்காள்னு சொன்னதைக் கேட்டதும் தான் நேக்கு நிம்மதியாச்சு….அவளுக்கு இன்னும் வரன் தகையலைன்னு..தெரிஞ்சது …என்று பிரசாத்தின் அம்மா சொல்லி வாய் மூடவும்.

ஓ …பேஷா…பேஷா….நானும் நினைச்சுண்டு தான் இருந்தேன்…என்று சித்ரா  சொல்லிக் கொண்டிருக்கும் போது கௌரியின் அப்பா உள்ளே நுழைகிறார்.

இவர்களைப் பார்த்ததும், ஓ ….நீங்களா? டெல்லியிலேர்ந்து எப்போவாக்கும் இங்க எத்தினேள் ? உங்க புள்ளைக்கு கல்யாணம் நிச்சயமாயிடுத்தா? கல்யாணப் பத்திரிகை கொடுக்க எங்க வீடு தேடி வந்தேளாக்கும்? அதப் பாருங்கோ…இது வரைக்கும்…பெண்ண பார்த்துட்டுப் போறவா ஏதோக்
காரண த்தால அந்த வரன் தகையாமல் போனாலும் , அப்பறம் அவாத்துக்கு கல்யாணப் பத்திரிகையை கொண்டு வந்து தரும் உலகப் பெரிய மனசு உங்களுக்குத் தான் இருக்கு..!..அது புதுமையானது. பை த பை, எங்காத்து கௌரிக்கும் கல்யாணம் நிச்சயமாயிடுத்து தெரியுமோ? சித்ரா சொன்னாளோ …என்றவர்..நான் சொன்னா மாதிரியே எந்த வரதட்சிணையும் தராமல் நடக்கப் போற கல்யாணம் தான் இது…எங்களுக்கெல்லாம் பரம சந்தோஷம் ..என்றவர்…எங்கே உங்காத்து கல்யாணப் பத்திரிகை..
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வெச்சிருப்பார்னு சொல்வா….ஒருத்தர் பொணட்டாட்டியை இன்னொருத்தர் கல்யாணம் பண்ண முடியாதோன்னோ …..சொல்லிக் கொண்டே..சித்ரா…காப்பி ஆச்சா? எடுத்துண்டு வா…இவா சாப்ட்டுட்டுக் கிளம்பட்டும்..என்று குரல் கொடுக்கிறார்.

ஈஸ்வரன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ரா விக்கித்துப் போய், இவருக்கென்ன ஆச்சு? என்று எண்ணியவளாக  ஏதோ புரிந்தபடி  “அடப் பாவி மனுஷா …! இப்படியா ஆட்டத்தை அம்பேல் பண்ணுவேள்?” உங்களை ஊரென்ன சொல்றது….? நானே சொல்வேனாக்கும்…பெத்த பெண்ணோட சம்பாத்தியம் மட்டும் தான் ஒரே  குறி. அதான் வந்த வரனை நக்கலும் நையாண்டியும் கேலியும் கிண்டலும் பேசி ஓட ஓட விரட்டி விடறேள்….மனசுக்குள் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டே இதோ…! வந்தாச்சுன்னா  என்று சித்ரா குரல் கொடுக்கிறாள்.

அதற்குள் வந்தவர்கள் விஷயத்தை ஓரளவு கிரஹித்துக் கொண்டு நாங்களும் நினைச்சோம்…கெளரிக்கு  கல்யாணம் நிச்சயமாகி இருக்கலாம்ன்னு….என்று இழுத்தபடியே….. முகத்தில் அறைந்தாற்போல பேசிய ஈஸ்வரனின் வார்த்தைகளைக் கேட்டதும் அங்கு மேலும் உட்காரப் பிடிக்காமல்  இருவரும் சித்ராவிடம் கூட சொல்லிக் கொள்ளாமல்….எழுந்து சென்று விட்டனர்.

ஹாலுக்கு வந்த  சித்ரா அங்கு யாருமில்லாததைக் கண்டதும், ” நான் அப்பவே நினைச்சேன்…இப்படி மூஞ்சீல அறைஞ்சாப்பல பேசினா யாரு உட்கார்ந்து கேட்பா? அதான் போய்ட்டா…நேக்குத் தெரியும்..அதான் நான் காப்பியே போடலை…நேக்கு எங்கே மூஞ்சி இருக்கு அவாளப் பார்க்க? அதான் வெளிலயே வரலை..நீங்க தான் உங்களோட குத்தல் பேச்சுலயே வெளில தள்ளிட்டேளே …பேஷ்..பேஷ்…..ரொம்ப நன்னாருக்கு….இத…இத…இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.” என்று மூக்கு கோவைப் பழமாகச் சிவந்த சித்ரா “அப்பாவும் பெண்ணும் எக்கேடோ கெட்டுப் போங்கோ…பழம் நழுவிப் பாலில் விழறதேன்னு நான் நினைச்சு சந்தோஷப் பட்டேன்….நம்ம கௌரியை டௌரியே  வேண்டாம்
நம்ம கௌரி மட்டும் போறும்னு…அந்த பிரசாத் சொன்னதும் ஃபிளைட் பிடிச்சு டெல்லிலேர்ந்து வந்திருந்தாளாக்கும் . அவாகிட்ட உங்களுக்கென்ன ஈகோ வேண்டிக் கிடக்கு…பொய் சொல்லி அனுப்பியாச்சு…அதிர்ஷ்ட தேவதை வந்து நம்ம வாசல் கதைத் தட்டியது !  ..அதான் அடிச்சு விரட்ட நீங்க இருக்கேளே….போதும்..போதும்…..என்று சலித்துக் கொண்ட சித்ராவைப் பார்த்து  ஈஸ்வரன் பெருமையோடு சிரித்துக் கொள்கிறார்.

அடி போடி…நீ வேற…! இந்த ஒரு வருஷமா அவாளுக்கு வேற எந்தப் பொண்ணுமே கிடைச்சிருக்காது..அதான் சுவத்தில் எரிஞ்ச கீரையை வழிச்சுப் போடுங்கறாப்பல….  போன  மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடன்னு வந்து நிக்கறா. இதைப் போய் நீ பெரிசா எடுத்துண்டு எங்கிட்ட கச்சம் கட்டி நிக்கற. இந்தக் காலத்துல பிள்ளைகளுக்கு பொண்ணு கிடைப்பது தான் குதிரைக் கொம்பாக்கும். நோக்கு ஒரு விஷயம் தெரியுமோ? என்று பீடிகையோடும் நமுட்டுச் சிரிப்போடும் மனைவியின் முகத்தைப் பார்க்கிறார் ஈஸ்வரன்.

எண்டே குருவாயூரப்பா….இவரோட நேக்கு…..சொல்லுங்கோ என்னவாக்கும் விஷயம்?

நோக்கு கார்த்திக்கை ஓர்மையிருக்கோடி…? ரெண்டு நாள் முன்னாடி வந்தானே….!

ம்ம்ம் அதானே…அந்த வரன் தான் இல்லை ன்னு ஆயாச்சே…!

எவன் சொன்னான்..? நமக்குத் தெரிஞ்சது அவ்ளோ தான்.ஆனால்…கௌரி என்னமோ…இன்னைக்குக் கார்த்தால கூட அந்த கார்த்திக்கோடத் தான் சிரிச்சு சிரிச்சு பேசீண்டு இருந்தாளாக்கும்…நான் ஒட்டுக் கேட்டேன்….பெண் பார்த்துட்டு போனானே கார்த்திக் அவனே தான்.

அட…அப்படியா? இது எங்க கொண்டு போய் விடப் போறதோ..?

கண்டிப்பா டௌரி தராத கௌரி கல்யாணத்துல தான்….நேக்கு சந்தேகமே இல்லையாக்கும்..!

ஓ ..முடிவே பண்ணியச்சாக்கும் நீங்க…! அதனா…இன்னைக்கு கார்த்தால கௌரி அந்தக் கத்து கத்தினா…?

நீ கொஞ்சம் பேசாமல் இரு. இதை நான் சொன்னதா வெளில காட்டிக்காதே சரியா? எத்தனை நாள் இப்படிப் போறதுன்னு பார்ப்போம். இது தெரிஞ்சதாலத் தான் நான் அந்த டெல்லிப் பிள்ளை பிரசாத்தைக் கூட சாமர்த்தியமா அனுப்பிட்டேன்..நோக்கு அதாவது தெரியுமா ? ஈஸ்வரன் சொல்வதைக் கேட்ட சித்ரா..ஆச்சரியத்தில் வாய் பிளந்தபடியே நிற்கிறாள்.

அட…ஆமாம்னா….உங்க புத்தியே புத்தி…..உங்க சமத்து யாருக்கு வரும்…? நானும் இருக்கேனே…..மண்டூகமாட்டம் என்று தலையில் அடித்துக் கொள்கிறாள்.

அட சித்ரா நீ நன்னாயிட்டு அரசியலுக்குப் போகலாம் கேட்டியா? சூப்பரா கட்சி தாவறே…!

அதொண்ணாக்கும் இப்ப நேக்கு குறைச்சல்..?

பின்னே உன்ன மாதிரி பொம்மனாட்டி எல்லாரும் தான் இப்போ அரசியல்லே ஜெயலலிதா, குஷ்பு போல கொடி கட்டிப் பறக்கறா தெரியுமொன்னோ ?

அந்த இலட்சணத்தைத் தான் தெனம் பார்க்கறேனே டி வி ல…!என்னால வீட்டு அரசியலே சரியா நடத்தத் திராணி இல்லையாம்…இந்த லட்சணத்தில் நீங்களும் உங்கள் கிண்டலும் கேலியும்…ஆட்டை கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசீல…..சித்ரா சொல்லிக் கொண்டிருந்த பொது….டெலிபோன் மணி அலறி அவளை அரசியலுக்கு “வா..வா…” என்று  அழைத்தது.

ரிசீவரை எடுத்து ஹலோ…யாராக்கும்…உங்களுக்கு யாராக்கும் வேணம் ? என்ற சித்ராவின் கேள்விக்கு பதிலாக அடுத்த முனை கிசுகிசுத்தது.

.”நானாக்கும்….மாமி….கார்த்திக்கோட அம்மா கல்யாணி பேசறேன்…ஓர்மையுண்டோ…?

சித்ராவுக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்தது…கையோடு சேர்ந்து ரிசீவரும் கூடவே குரலும் நடுங்கியது.

(தொடரும்)

Series Navigationஆதாமும்- ஏவாளும்.அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    படிக்க சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை நடையிலும் டௌரி தராத கௌரி தொடர்கிறது. குறிப்பாக சித்ரா ஈஸ்வரன் உரையாடல் தத்ரூபமாகவும் சுவையாகவும் உள்ளது. கெளரியின் திருமணம் டெளரி இல்லாமல் நிச்சயம் நடைபெறுமா என்ற ஆவலைத் தூண்டி விட்டுள்ள தொடர் கதையின் கதாசிரியர் ஜெயஸ்ரீ சங்கருக்கு பாராட்டுகள்…டாக்டர் ஜி.ஜான்சன்

    1. Avatar
      ஜெயஸ்ரீ ஷங்கர் says:

      அன்பின் டாக்டர் ஜி ஜான்சன் அவர்களுக்கு,

      கதையைப் தொடர்ந்து படித்து கருத்து பகிர்ந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் ஜெயஸ்ரீ,

    நன்கு சுவையாகச் செல்கிறது…. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *