டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8

This entry is part 24 of 29 in the series 23 ஜூன் 2013
நெடுங்கதை
 
 
 
கௌரி காலைவாரி விட்டதால் வந்த ஏமாற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தாள் கல்யாணி. “ஏன்னா, நீங்க முடிஞ்சா இன்னைக்கு மட்டும் உங்க ஆபீஸுக்கு லீவு போடுங்கோ .முதல் வேலையா   கார்த்தியோட ஜாதகத்தை கையிலே எடுத்துண்டு கல்யாண மாலை கம்யூனிட்டி மீட் ஆனந்தா கல்யாண மண்டபத்துல நடக்கறதாம் ….நியூஸ் பேப்பர்ல இன்று வந்த விளம்பரம் பார்த்தேன் .அப்பாவா…லட்சணமா அந்த வேலையை உடனடியா பாருங்கோ…இல்லையானா  விஷயம் நம்ம கைமீறி  போயிடுமாக்கும்…வர வர கார்த்தியோட  மூஞ்சியும் போக்கும் சரியில்லை. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு. ஒண்ணு  கெடக்க ஒண்ணு  நடந்து வைக்கப் போறது. இந்த நேரம் பார்த்து நீங்க  லாப்டாப்பை தோளில் மாட்டிண்டு ஊர் ஊரா வேலை வேலைன்னு டூர் போயிண்டு இருந்தால்…அவ்ளோ தான். என்னாலத் தான் இதெல்லாம் சமாளிக்க முடியலைன்னு ஆயாச்சு.  நீங்களாவது இதை கவனியுங்கோ.இந்த வாரம் பதிஞ்ச வரனை அடுத்த மாசம் “சன் டிவி- கல்யாண மாலை நிகழ்ச்சில கூட அறிமுகம் பண்ணுவாளாம். என்ன சொல்றேள்? இதை விட்டால் நேக்கு.வேற வழியே தெரியலையாக்கும் என்று அங்கலாய்த்தாள் கல்யாணி.
உன்னை  மாதிரி இருக்கப்பட்டவாளத்தான் வேதாளம் முருங்கை  மரம் ஏறிச்சுன்னு சொல்வாளோ.. என்னவோ…..! எனக்கு இந்த வாரம் பூரா ஆபீஸ்ல ரொம்ப டைட் வொர்க்காக்கும்…தெரியுமா? ஐம்பது  லட்சம் சேல்ஸ் டார்கெட் காமிக்கணும். சாதாரணமில்லை. நீ சும்மா இதுக்கெல்லாம் என்னைத் தொல்லை பண்ணாதே. என்னால கார்த்திக்குக்கு கூடப் பொண் பார்த்துட முடியும்..அது ரொம்ப ஈஸியாக்கும்…ஆனால் உனக்குத் தலையாட்டுற மாட்டுப் பொண்ணா தேடறது தான் ரொம்ப கஷ்டம். அது தான் என்னால ஆகாத்த காரியம்
ஹாங் ….மறந்தே போயிட்டேன் ….அதான் இன்னும் ரெண்டு நாளில் மதுரை கிளம்பறோமே ….லாவண்யா கல்யாணத்துக்கு…அங்க ஏதாவது பொண்ணு  உன் கண்ணில் சிக்கும். கண்டிப்பா சிக்கும்.அதுவரைக்கும் என்னைக் கொஞ்சம் பிடுங்கி எடுக்காதே. எவன் தருவான் இந்த ஹெவி சீசன்ல எனக்கு லீவு…?  என்னைக் கல்யாண புரோக்கர் ஆக்கிப் பார்க்கணும்னு வேற நோக்கு ஒரு ஆசையா? நன்னாருக்குப் போ….கல்யாணி, இந்த விளையாட்டுக்கு நான் வரலை….என்று நழுவினார் கார்த்திக்கின் அப்பா.
அட ஆமாம்னா ..  நல்ல பொண்ணா கல்யாணத்துல பார்த்துக்கலாம் எதுக்கு இப்போ வீணா கல்யாண மாலைல ஒரு பதிவுச் செலவு….நீங்கள் தான் ஐடியா மன்னர்.உங்க ஒருத்தராலத் தான் உங்க கம்பெனியே ஓஹோன்னு நடக்கறதுன்னு நினைக்கிறேன்….உங்கள நேக்குத் தெரியாதா? நல்ல வேளை ….ஒருவழியா அந்த கௌரி கிட்ட இருந்து தப்பினோம்….எனக்கு இப்பவாவது புத்தி வந்ததே….அந்த மாமியே அந்த பொண்ணு கிட்ட மாட்டிண்டு தவியாய்த் தவிக்கறா….அவளுக்கு இந்த ஜென்மத்தில் மாங்கல்ய யோகமே அமையாது… நான் சொல்றேன்.என்று கௌரியின் மீதான தனது வெறுப்பை சாபமாக்கினாள் கல்யாணி.
உனக்கு வேண்டாம்னா விட்டுட்டுப் போயேன்…பெரிசா ரிஷி பத்தினியாட்டமா சாபம் தராதே…ஏதோ சின்னப் பொண்ணு….வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கற  வயசும் அனுபவமும் போதாது அவளுக்கு…..நம்ம கார்த்திக் மட்டும் என்னவாம்?….சரியான எடுப்பார் கைபிள்ளை…நீ சொன்னா உனக்கும் தலையாட்டுவான்…நான் சொன்னால் எனக்கும் தலையாட்டுவான்….நடுப்பற வேற யாராவது நுழைந்தால் அவாளுக்கும் தலையாட்டுவான் தெரியாதா?  சமயத்துல பெரியவா நாமளே அவனால தடுமாறறோம் இல்லையா? அதனால, இதெல்லாம் விட்டுத் தொலை…..அவாவாளுக்கு விதிச்சது தான்  கிடைக்கும்.
ம்கும்……திடீர்னு பெரிய ஞானியாயிட்டேளாக்கும் …பேச்செல்லாம் பந்தல் போட்டு வாழை மரம் கட்டறது என்று களுக்கென சிரித்தாள் கல்யாணி.
அது சரி….முதலில்  மதுரைக்கு கிளம்ப கல்யாணத்துக்கு ஏத்தா மாதிரி எனக்கும் டிரெஸ்ஸை எடுத்து வைச்சுடேன் கல்யாணி….என்றதும்,
இந்தாங்கோ பெட்டி…..எனக்கு இன்னைக்கு தலைக்கு மேல டூட்டி இருக்காக்கும்…நானே..தலைக்கு ‘டை’ அடிச்சுக்கணும்… என்று பெட்டியைப்  பொத்தென்று அவர் முன்  வாய் பிளந்து சிரித்தது விஐபி பெட்டி.
சரியாப் போச்சுப்  போ…என்றபடியே….இந்தப் பெட்டி சமாச்சாரத்தை சாயந்தரம் நானே வந்து கவனிச்சுகறேன்….என்றபடி “கார்த்தி…டேய் கார்த்தி மதுரைக்கு போக உன்னோட பெட்டில என்னோட ரெண்டு பட்டு வேஷ்டியை மட்டும் திணிச்சுக்கோடா ” என்றபடி  அங்கிருந்து மெல்ல நழுவினார் அவர்.
கார்த்தி தன்னுடைய டிராவல் பாக்கை எடுத்ததும் உள்ளிருந்து தொப்பென்று விழுந்தது லேடீஸ் ஹாண்ட்பாக்….! அதைக் குனிந்து கையிலெடுத்தவன் அதிர்ச்சியோடு அச்சச்சோ இது கௌரியோட ஹாண்ட்பாக் இல்லையோ …? அன்னிக்கு கடைசியா ‘சாண்ட் ஃபீல்ட்’ போயிட்டு வரும்போது நான் தான் அவசரத்தில் என்னுடைய டிராவல் பாகில் வைத்தேன். கொடுக்க மறந்துட்டேனே…யோசித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணி அங்கு வந்தவள், அவன் கையிலிருந்த ஹாண்ட்பாகை பார்த்தவள் கண்கள் விரிய..டேய் கார்த்தி, என்னடா இது…அழகான ஹாண்ட்பாக்…எனக்காடா…இது ? என்றவள் அவன் கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கியவள்….நல்ல வேளை.. ஊருக்குப் போக நல்லதா ஒரு ஹாண்ட்பாக் வாங்கணும்னு நினைச்சேன். நீ சமத்து…அமமாக்கோசரம் வாங்கி வெச்சிருக்கியே என்றபடி திறந்து பார்க்கிறாள். பொத்தென்று எதுவோ கீழே விழுந்து அங்கிருந்த டேபிளின் அடியில் சென்று மறைகிறது.
மா…அது கௌரியோட ஹாண்ட்பாகாக்கும் என்று சொல்ல வந்தவன் பல்லைக் கடித்துக் கொண்டு….வாய் வரைக்கும் வந்த வார்த்தையை அப்படியே முழுங்கியபடி….ம்ம்…ம்ம்ம்.. நீயே வெச்சிக்கோ.உனக்குத் தான் என்று சொல்லிவிட்டு கீழே விழுந்ததை தேடி எடுக்கிறான். ஓ ….இது கௌரியோட டேட்டா கார்டாச்சே…என்று சத்தமில்லாமல் அதை தன்  ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொள்கிறான்.
ஹாண்ட்பாக்கை எடுத்துக் கொண்டு நழுவிய கல்யாணி அதைத் துழாவிப் பார்க்கையில் அவளது கையோடு நான்காக  மடிக்கப்பட்ட கடிதம் கூடவே டெல்லி ரிடர்ன்
ஃப்ளைட் டிக்கெட்  ஒன்றும் சிக்கியது…..அதை எடுத்து கடிதத்தை  படித்து விட்டு….”கல்யாணி லட்டு தின்ன ஆசையா? ” என்று கண்கள் மின்ன இது ஒண்ணே போதுமே….என்றபடி டேய் கார்த்தி…கார்த்தி…. கார்த்தி ..கௌரிக்கு வந்த லெட்டெர் இந்தக் கைப்பையில் எப்படி? கூடவே ஏரோப்ளேன் டிக்கட்  வேற. இந்தாத்துல எனக்குத் தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் நடக்கறதோ…என்றவளாக.  இந்தா நீயே படிச்சுப் பார்த்துக்கோ அந்த கௌரியோட யோக்கியதையை..எவனோ டெல்லி பிரசாத்தாம்….அவ அப்பாவுக்கு எழுதி இருக்கான். அதுவும் எப்போ..? நாம அவளைப் போயி பொண் பார்த்ததுக்கு அப்பறமா…? அந்த பிரசாத் அவளை லவ்வு பண்றானாம்….லவ்வு.  ஏற்கனவே முற்போக்குவாதியாம்…..அந்தத் தைரியத்தில் இன்னும் என்னவெல்லாம் கண்றாவியோ? இந்தா நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ என்றவள்….நான் உனக்கு ரொம்ப சீரியஸா மதுரைல ஒரு பொண்ணைப் பார்த்து கால்கட்டு போட்டுடப் போறேன்… நீ  தயாரா இரு…இப்பவே சொல்லிட்டேன்..என்று கோபத்தில்  சீறிவிட்டுப் போகிறாள்.
அச்சச்சோ…..டெல்லி ரிடர்ன் டிக்கெட் கூட இதில்……ச்சே….என்ன முட்டாள்த்தனம்…என்று தலையில்  தட்டிக் கொண்டவன்,  டிக்கெட் இல்லாமல் டெல்லியில் என்ன கஷ்டப் படறாளோ….பாவம் கௌரி…. என்ன லெட்டர் இது என்று எண்ணிக்கொண்டே  கடிதத்தைப் படித்த கார்த்திக், இதைப் பத்தி சொல்லணும்னு தான் அன்னிக்கு ‘சாண்ட் ஃபீல்ட்’ க்கு அந்த லெட்டரையும் எடுத்துண்டு வந்திருப்பாளோ …வேற ஏதேதோ பேசிவிட்டு சொல்ல மறந்து போயிருக்கும். பாவம் அவ அப்பா போன துக்கம், அம்மாவோட மன வேதனை….இதில் வேலை பளு…அன்னிக்குப் பார்த்து நான் வேற அவசரப்பட்டு….போச்சு எல்லாம் தப்புத் தப்பா….என்று நினைத்துக் கொண்டவன்..கௌரிக்கு ஒரு போன் பண்ணிப் பார்க்கலாம் என்று கைபேசியில் அழைக்க அது கௌரி அவுட் ஆஃப்  ரீச்சில் இருப்பதாய் சொல்லியது. ஆமாம்…கௌரி இப்போ நீ எனக்கு அவுட் ஆஃப்  ரீச் தான்…எனக்குத் தெரிஞ்சதைத் தான் இதுவும் சொல்றது….என்று உதட்டை பிதுக்கியபடி கைபேசியை மூடிவிட்டு மூட் அவுட் ஆனான் கார்த்திக்.
கல்யாணிக்கு இரண்டு நாள் போனதே தெரியவில்லை. தம்பி பெண் லாவண்யா கல்யாணத்தில் எப்படியாவது தன் மகன்  கார்த்திக்குக்கு நல்ல பெண் அமைய வேண்டுமே என்று  மானசீகமாக ஒரே எண்ணத்துடன்  பிரயாணம் செய்தாள்.நல்லவேளையா அந்தக் கடிதம் என் கையில் சிக்கியது துருப்பு சீட்டு மாதிரி அது ஒண்ணே  போதும்…இனி என்னிக்கும் அந்த கௌரி இந்த வீட்டு வாசல்படி மிதிக்க முடியாது என்று நிம்மதியாக பெருமூச்சு விட்டுக் கொண்டாள். மதுரை நெருங்க நெருங்க  மனசு ரெக்கை  கட்டிக் கொண்டது.
மதுரையில் கால் வைத்ததும் மல்லிகைப் பூ வாசனை வந்து காலைக் கட்டிக் கொண்டது. அந்த மண்ணுக்கே ஒரு தனி வாசனையோடு அவர்களைச் சுமந்த கார் மிகப் பிரம்மாண்டமான “தி நார்த் கேட்” முன்பு கொண்டு சென்று நிறுத்தி மூச்சு வாங்கியது. காரை விட்டு இறங்கியதும் மதுரைத் தென்றல் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தழுவியது..
அவர்களை வரவேற்றவர்களின் மத்தியில் ஜீவாவைக் கண்ட கார்த்திக்,ஆச்சரியத்துடன்   ஹேய் …நீ…நீங்க ஜீவா.. தானே?  நீங்க இங்க…உங்களை நான் இங்கே எதிர்பார்க்கவே இல்லை….ஹௌ நைஸ் …..என்றவன்…’ப்ரைட் என் மாமா பொண்ணு தான்’.என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான்.
ஓ… எனக்கும் சர்ப்ரைஸ் தான் எனிவே…  நைஸ் மீட்டிங் யூ கார்த்திக் …என்று கை குலுக்கிய  ஜீவா…..நாங்க இவா ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்லிக் கொண்டே அவனது  தோளில் கை போட்டபடி …அப்பறம் தலைவா…லைப் எப்டி போயிட்டிருக்கு?  என்று சிரித்தபடியே கேட்டு கொண்டே இவர்களது அறைக்குள் அவர்களை விட்டு விட்டு…நாம அப்புறம் சந்திக்கலாம்….இதோ நானும் இந்த பக்கத்து அறையில் தான் இருக்கேன்…என்று தற்காலிகமாக விடை  பெறுகிறான் ஜீவா.
கூல்…..ஜஸ்ட் ரெப்ஃரெஷ் பண்ணிண்டு வரேன் என்ற கார்த்திக் அம்மா அப்பாவுக்கு ஜீவாவை அறிமுகம் செய்து விட்டு அறைக் கதவைத் தாழ் போட்டுக் கொள்கிறான்.
அந்த கௌரியோட ஆபீஸ்ல வேலை பார்க்கும் ஜீவா….என்று கேள்விப் பட்டதுமே …கல்யாணிக்குத் தூக்கி வாரிப் போட்டது.காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாதோ? என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள் உடனே கார்த்திக்கிடம் “டேய் கார்த்தி…இவன் கிட்ட நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே  இரு…ரொம்பப் பேச்சு வார்த்தை வெச்சுக்காத….பார்த்தால் மூஞ்சியே சரியில்லை இப்பவே சொல்லிட்டேன் என்று அபாயசங்கு ஊதியவளாக , சரி..சரி..கிளம்புங்கோ …கல்யாண மண்டபத்துக்கு போய்  எல்லாரையும் பார்த்து பேசிவிட்டு அப்படியே ஜானவாசம் முடிச்சுட்டு சாப்பிட்டு வரலாம் என்று அவசரப்பட்டாள்  கல்யாணி.
ஆரம்பிச்சுட்டியா….நீயும் அப்பாவுமா முதலில் கிளம்பிப் போங்கோ…நான் பின்னாடியே வரேன் என்ற கார்த்தி சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே கிளம்பி நேராக ஜீவாவின் அறைக் கதவை தட்டுகிறான்..கல்யாணியின் அபாய சங்கு அவனைப் பொருத்த வரையில் செவிடன் காதுக்கு ஊதியது போலானது.
அலங்காரம் செய்யப் பட்ட அந்த எழிலான திருமண மண்டபம் முழுதும்….”காசு…பணம்…துட்டு….மனி ….மனி ….” என்று செல்வாக்கை தண்டோரா போட்டது.
கல்யாணி பிரமிப்பு நீங்காதவளாக “என்னன்னா…..எவ்ளோ கிராண்டா கல்யாணம் பண்றான் என் தம்பி….மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப கொடுத்து வெச்சவர்…..எத்தனை வித விதமா கார்கள் வந்து நிக்கறது பார்த்தேளா? ரொம்ப ஹை கிளாஸ் மனுஷா…அங்க  பாருங்கோ…இங்க பாருங்கோ..ஜானவாசத்துக்கு காரை எவ்வளவு அழகா அலங்காரம் பண்ணியிருக்கா என்று மூக்கின் மேல் விரலை வைத்து உற்சாகமானவள்  “ஏன்னா…இங்கே கண்டிப்பா நம்ம கார்த்திக்கு நம்மள விடப் பெரிய பணக்காரப்  பெண் கிடைப்பாள்ன்னு என் மனசாட்சி சொல்றது நீங்க வேணாப் பார்த்துண்டே இருங்கோ…நான் சொல்றது நிஜம்னு என்று பேராசை கண்களில் பளபளக்க சொல்கிறாள் கல்யாணி.
உன் நெனப்பு பொழப்பைக்  கெடுக்காம இருந்தால் சரி…கொஞ்சம் அமைதியாத் தான் இரேன் கல்யாணி நீ நினைக்கறது எல்லாம் நடக்கும் என்று கல்யாணியை அமைதி படுத்தினார் அவர்.
கல்யாண மண்டபத்தில் தனது தம்பி அவர் மனைவி மணப்பெண்  லாவண்யா என்று அனைவரிடமும் குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்தாள் கல்யாணி. உள்ளுக்குள் அக்கக்கூ என்று உள்மனசு  கூவி அழுது  கொண்டிருந்தது.
அமெரிக்கா சம்பந்தம் என்று அவ்வபோது அங்கு வந்து நின்ற பெண்களின் அழகும், நளினமும் உருளையில் ஊர்ந்து  செல்லும்  பெட்டிகளும் அவளுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. அன்பைக் கடந்து வந்த அசூயை அவள் கண்களில் தெரிந்து விடாமல் கவனமானாள் கல்யாணி.
வா…வா…..தலைவா…..என்று கார்த்திக்கை வரவேற்ற ஜீவா, என்ன கார்த்தி….நம்ம மேடம் வரலையா? என்று உரிமையோடு கேட்கிறான் ஜீவா.
உடனே என்ன பேசுவதென்று புரியாமல் தயங்கிய கார்த்தி , ஏதாவது பேச வேண்டுமே என்று , அந்த டெல்லி ப்ராஜெக்ட் உங்களுக்கு ஐ மீன்…உங்க கம்பெனிக்குத் தான் கிடைத்ததா? அதான்….என்று கொக்கி போட்டுக் கேட்கிறான் கார்த்திக்.
ஜீவாவின் மனசுக்குள் ஓடும் சந்தேகத்துடன்…..”அப்போ கௌரி  நம்மைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை ” என்ற நிம்மதியில்……” ம்ஹும் இல்லை தலைவா…எங்களுக்குக் அந்த ப்ராஜெக்ட் கிடைக்கலை….கௌரி மேடம் சொல்லலையா? என்று கேட்டுக்  கொண்டே,  வாங்க கார்த்திக் மாப்பிள்ளையை உங்களுக்கு அறிமுகப் படுத்தறேன் இங்க தான் பிரின்ஸ் சூட்ல இருக்கார் என்று  லிப்ட்க்குள் நுழைந்து நான்காவது தளம் அழுத்தவும் ,….லிஃப்ட் மேலே ஏறுகிறது.
வாட்……! டெல்லி ப்ராஜெக்ட் கிடைக்கலைன்னா  ..கௌரிக்கு டெல்லியில் .. என்ன வேலை.? என்கிட்டே ஏன் காரணம் இல்லாமல் கௌரி  பொய் சொல்லணும் ? போயிட்டு ஒரே நாளில் வந்துடுவேன்னு சொல்லிட்டு ரெண்டு நாளாகியும் இன்னும் வரலையே ….ஃபோன் செய்தாலும் அவுட் ஆஃப்  ரீச் தான் கிடைக்குது.ஒரு மெயில் கூட இல்லை….அப்டியே அப்ஸ்கான்டெட்…அப்போ….அம்மா சொல்றதெல்லாம்….என்று கார்த்திக்கின் மனசுக்குள் கேள்விகள் மேலே மேலே ஏறுகிறது. எங்கிருந்தோ அவனுக்குள் எழுந்த ஆத்திரம் சந்தேகத்தை துணைக்கு அழைத்தது.
நான்காவது தளத்தில் ‘பிரின்ஸ் சூட்’ கதவை லேசாகத் தொட்டதும் திறந்து கொண்டு அழகிய பாடலோடு வரவேற்றது அந்த பெரிய அறை .சுவரில் மாட்டிய  எல்.ஈ டி திரையில்   ஏதோ ஆங்கிலப் படம் ஓடிக் கொண்டிருக்க அதில் சான்ட்ரா புல்லக் ‘டக் டக் ‘ கென்று நடந்து கொண்டிருந்தாள். டேபிளில் திறந்து கிடந்த இணையத்தோடு    இணைந்த லாப்டாப் எதையோ மெல்ல மெல்ல திரையிறக்கிக் கொண்டிருந்தது.
மாப்பிள்ளை பாத்ரூமுக்குள் இருப்பதன் அடையாளமாக அங்கிருந்து வந்த தண்ணீர் சத்தம்……அதைத் தொடர்ந்து கைபேசியில் “பிலீவ் மீ ப்ளீஸ் ஐ கான்ட் லிவ் விதௌட் யூ ஹனி  ” என்று கத்தும் சத்தம் விட்டு விட்டுக்  கேட்டது.
இங்கிருந்து நாம போயிடலாமே… என்று கிளம்பிய கார்த்திகைத் தடுத்த ஜீவா…”நோ…நோ….ஹி இஸ் நைஸ்….நோ பிராப்ஸ் மச்சி…இரு…என்றவன்…ஹேய்..ஹேய்…என்று அதிர்ந்தவனாக லாப்டாப்பின் அருகே சென்று….அதை அப்படியே லபக்கென்று கையில் எடுத்துக் கொண்டு “கார்த்தி….ஹி இஸ்  எ ஃப்ராட் ரா மச்சி…” என்று ஒரே நோடியில் மாப்பிள்ளையை  தலை கீழாக மாற்றிச் சொன்னதோடு, கடுமையான குரலில்   மவனே……நீ இன்னிக்கு  ஃபினிஷ் ரா.. என்று வக்கிரமாகச் சிரித்தபடியே கார்த்திக்கின் கையைப் பிடித்து இழுத்தபடியே வெளியேறுகிறான் ஜீவா.
நடப்பது என்னவென்று அறியாத கார்த்திக் பின்னாடியே ஓடியபடி,என்னாச்சு ஜீவா…? வாட்ஸ் ராங் வித் ஹிம்…..? என்கிட்டே சொல்லுரா மச்சி….வெளிய கொண்டு போகாதே….நாமளே பேசி முடிச்சுக்கலாம்….டோன்ட் மேக் இட் ஹ்யூஜ்.  ப்ளீஸ் லிசென்…லாவண்யாஸ் லைஃப்ரா…என்று தாழ்ந்த குரலில் கேட்கிறான்.
புல் ஷிட்…! எப்டிரா கார்த்தி…..? எப்டி? இந்த ஸ்க்ரீன்ல பாரு… இவன் தான் அவன்…கிரீஷ் …! ஏற்கனவே ஒரு வெள்ளக்காரியோட…. கூடவே ஒரு குழந்தை..! நம்ம தமிழ்நாட்டுப் பொண்ணுன்னா இவனுக்கு அவ்ளோ இளக்காரமா ? காதுல காலிஃப்ளவர் வைக்கிறான் …காலிப்பய ..! அனேகமா இப்போ ஃபோன்ல கூட அவ கூடத்தான் பேசிட்டு இருக்கான். அங்க ஒருத்திய கல்யாணம் பண்ணியாச்சு….அப்பறம் எதுக்குடா இங்க ஒரு கல்யாணம்?  மவனே…..வைக்கிறேண்டா ஒனக்கு இன்னைக்கு வேட்டு.. என்று கருவியவனாக  நீ ஒண்ணும் பேசாத கார்த்தி …எல்லாம் அங்கிள்…அதான்   லாவண்யாவோட டாட்  பார்த்துப்பாரு. இந்தக் கல்யாணத்துக்காக எவ்ளோ கஷ்டப் பட்டிருப்போம்..இதனால் எத்தனை  பேரோட.நேரம்,பணம் உழைப்பு…வீணாப் போச்சு..! இதெல்லாத்தையும் விட லாவண்யாவை நினைச்சுப் பாரேன்….அவங்க கனவு எல்லாம் போச்சு….பொழுது விடிஞ்சாக் கல்யாணம்…எவ்ளோ தைரியம்…..ராஸ்கல்….அவனைப்  பார்த்தால் அவ்ளோ நல்லவன்னாத் தெரிவான் மச்சி…..என்றவன் அவசரமாக பைக்கை  ஓங்கி மிதித்து ஸ்டார்ட் செய்து ம்ம்ம்..ஏறி உட்காருங்க கார்த்தி என்றவன்  கல்யாண மண்டபம் வாசலில் சென்று நிறுத்தினான். நடக்க போவதற்கு சாட்சியான லாப்டாப்பை மடியில் ஏந்தியபடியே கார்த்திக். அவன் மனசு மட்டும் திக் திக் திக் திக் கென்று பட படத்தது .
ஜீவா சொன்ன விஷயம் லாப்டாப் மூலம் வெட்ட வெளிச்சமானதும் கல்யாண மண்டபத்தில் விஷயம் காட்டுத் தீ போலப் பரவ , ஜானவாசம் நின்று போனது. நேரம் செல்லச் செல்ல அந்த இரவிலும் “பொழுது விடிஞ்சாக் கல்யாணம்” இப்போ கதை இப்படிப் போறதே..என்ற ஏமாற்றங்களும், கோபங்களும், ஆற்றாமையும், அழுகையும், துடிப்பும், வார்த்தை வாள்களாக வீசப்பட ஒரு போர்களமாய் உருவெடுத்த கல்யாண மண்டபம் அங்கே முடிவுக்கு வரும் வழியாக அமெரிக்கப் பெட்டிகள் ஒவ்வொன்றாக கனத்த இதயத்தோடும் ஏமாற்றத்தோடும் காருக்குள் ஏற்றப்பட அடுத்த சில மணி நேரங்களில் மயான அமைதி கண்டது அந்த மண்டபம்.
விடிய விடிய அங்கிருந்த பெண் வீட்டாருக்கு தாங்கள் பெரிய கண்டத்தில் இருந்து தப்பியதாக பேசி நிம்மதி பெருமூச்சு விட்டபடி , அடுத்தது என்ன? என்று ஆலோசனை
செய்ய, அத்தனை பேரின் கண்களும் மனசும் கார்த்தியை பார்த்து குறி வைத்தது.
பேசாம இந்த கார்த்தியை நம்ம லாவண்யாவுக்கு இதே முஹுர்த்தத்தில் வைத்து கல்யாணம் பண்ணிடலாம். வேற எதுவும் யாரும் பேச வேண்டாம்…என்று கல்யாணியின் தம்பி சொன்னதும் கல்யாணிக்கு தான் குற்றாலத்தில் குளிப்பது போலிருந்தது. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்து இந்தா வரங்கள் வாங்கிக்கோ என்று சொல்லி அள்ளி அள்ளித் தந்தது போலிருந்தது. ஏன்னா நான் அப்போவே சொன்னேனே கேட்டேளா…? என்று கண்களாலேயே கேட்டுக் கொண்டாள் இங்கிதம் தெரிந்தவளாகக் கல்யாணி.
இல்லை….நான் மாட்டேன்….என்று நழுவியவனை ஜீவா தடுத்து நிறுத்தி, உன்னை விட்டால் இப்ப லாவண்யாவுக்கு பொருத்தமா யாருமே இல்ல மச்சி…மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே. நீங்க கௌரி மேடம் தான் உங்க ஆளுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா நிச்சயம் ஏமாந்து போவீங்க…..அவங்களப் பத்தி அவங்க  கூடவே இருந்து வேலை பார்க்குற எனக்குத் தான் தெரியும். ஷீ இஸ் நாட் அட் ஆல்  வொர்த்…!நான் எந்த நல்ல பொண்ணுக்கும்  கெடுதல் செய்யணும்னு கனவுலயும் நினைக்க மாட்டேன். என்னை நம்புங்க கார்த்தி. இப்போ வந்திருக்குற இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடாதீங்க…பாருங்க உங்க அம்மா அப்பா முகத்தில் இருக்குற நிம்மதியை.என்றவன் ஜீவாவின் கையைப் பிடித்துக் கொள்கிறான்.
நோ….ஜீவா…உங்களுக்கு ஒரு விஷயமும் தெரியாது…கௌரியைப் பற்றி நீங்க எதுவும் எனக்கு சொல்ல வேண்டாம்,..ஐ கான்ட் மேரி லாவண்யா..தட்ஸ் ஆல் ..என்னால முடியாது நான் இப்பவே ஊருக்குக் கிளம்பறேன் ஐ கான்ட் டாலரேட் திஸ் எனிமோர் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான் கார்த்திக்.
இதைக் கேட்டதும் நான்கு புறமிருந்தும் ஏதேதோ பேசிக் கொண்டு வந்த சொந்தங்கள் கண்ணீர் முனையில் கார்த்தியைக் கடத்திச் சென்று மிரட்டி உருட்டி ஒரு மூலையில் கொண்டு சென்று நிறுத்தி அவனது வாழ்கையையே உருவியது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல கார்த்திக் அவர்களின் கலங்கிய கண்களின்   கண்ணீரில் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தான்.
புதிதாகக் கிளம்பிய இந்தப் புயலுக்குள் கார்த்தி கிழிந்த காகிதமாகப் பறந்து கொண்டிருந்தான். அவன் மனசுக்குள் இப்போது கௌரியின் நினைவுகள் அடியில் சென்று  மறைந்து கொண்டது.
லாவண்யாவின் கலங்கிய மனம் கார்த்திக்கின் சம்மதத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து மெல்ல “அத்தை, அவருக்கு முழு சம்மதம் தானே? என்று தயங்கித் தயங்கி கேட்டுத் தலை குனிந்து கொண்டு தனது சம்மதத்தையும் சொல்லிக் கொண்டாள். இந்த நேரத்தில் எப்படியாவது தனக்கு இந்த முஹுர்த்தத்தில் கல்யாணம் நடந்து விட வேண்டும் என்ற சுயநலமான சிந்தனையாலும் பிடிவாதத்தாலும்  லாவண்யாவுக்கு கௌரியின் நினைவே வரவில்லை.
கார்த்தியின் அப்பா மெல்ல கல்யாணியைப் பார்த்து……இந்தக் காலத்துல சொந்தத்தில் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாதுன்னு ஒண்ணு இருக்கே.அதைப் பத்தி கூட நீங்கள்லாம் கொஞ்சம் யோசித்தால் தேவலை நாளைக்கு அவாளுக்கு ஒரு கஷ்டம்னா அது நமக்கும் சேர்த்துத் தானே? என்று கேள்விக் குறியை நீட்ட.
நீங்க சொல்றது எல்லாம் சரி தான். நானும் ஏத்துக்கறேன். ஆனால் இந்த விஷயத்தில் உண்மைன்னு ஒண்ணு  இருக்கோன்னோ…இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்கோ என் அம்மா என்னைப் பெத்துப்  போட்டுட்டு செத்துப் போயிட்டாளாம்..அதுக்கப்பறமா அப்பா ரெண்டாவதா கல்யாணம் பண்ணீண்டாராம். அந்தச் சித்தியோட பையன் தான் இந்தத் தம்பி. இதெல்லாம் எத்தனையோ வருஷங்கள் முன்னாடி நடந்து முடிஞ்ச கதை. இதெல்லாம் உங்களண்ட சொல்லி என்னாகப் போறதுன்னு நினைச்சேன். அதுக்கு இப்போ சொல்ல வேளை வந்திருக்கு.இதனால லாவண்யாவுக்கோ நம்ம கார்த்திக்கோ ஒண்ணும் ஆகாது. நாம தைரியமா கல்யாணம் பண்ணலாம் என்று சாமாதானம் சொல்லிக் கொள்கிறாள்.
கல்யாணி…நீ என்ன சொல்ல வரேன்னு புரியறது. இதுவும் தப்புன்னு நான் தர்க்கம் பண்ணினா நீ விடவா போறே?  எல்லாம் குருவாயூரப்பன் பார்த்துப்பான். உன் இஷ்டப் படியே  செய். உன் ஆசை நிறைவேறுதே அதுல நேக்கும் சந்தோஷம் தான்…எதுக்கும் கார்த்திக்கிட்ட நான் தனியா கொஞ்சம் பேசிப் பார்க்கவா? என்று கேட்கிறார்.
வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைச்ச கதையாய் நீங்க இப்போ அவன்கிட்ட எதையும் பேசி காரியத்தைக் கெடுக்காதேங்கோ. அவன் சம்மதம் எல்லாம் நாங்க வாங்கியாச்சு. நாளைக்கு மணைல நம்ம கார்த்தி தான் மாப்பிள்ளை….நம்ம லாவண்யா தான் நம்ம ஆத்துக்கு நாட்டுப்பொண்ணு.
அப்போ…நீ கேட்ட வரதட்சணை….அது…இதுவெல்லாம்...?
ஆத்துக்கு அவள் ஒரே பொண்ணாக்கும் …நாம ஒண்ணுமே கேட்க வேண்டாம். நாம சொந்தத்துக்குள்ள சொந்தமாக்கும். அது போதாதா நமக்கு…என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள் கல்யாணி. ராத்திரி எப்போது விடியும் என்று மனசு காத்துக் கொண்டிருந்தது…அவளுக்கு.
கார்த்திக் மட்டும் மெளனமாக தவித்தாலும் கல்யாணம் நின்று போன ஒரு பெண்ணுக்கு தன்னால் வாழ்வு தர முடிந்ததை நினைத்து அந்தத் தவிப்பில் இருந்து மீண்டு கொண்டிருந்தான். இந்த விஷயத்தை கெளரியிடம் சொன்னால் அவளும் புரிந்து கொள்வாள் என்றும் தன் மனசாட்சியைத் தேற்றிக் கொண்டான் .ஜீவா கொடுத்த ஊக்கம் அதற்கு பெருமளவுக்கு உதவி செய்தது.
காலைப் பொழுது  மெல்ல மெல்ல இரவோடு சேர்த்து நடந்த அத்தனை சோகத்தையும் தடம் தெரியாமல் கலைத்தது. கல்யாண மண்டபம் களை கட்ட ஆரம்பித்தது.
கணீரென்ற நாதஸ்வர ஓசை அனைவரையும் எழுப்பியது. வரவேற்பில் மாப்பிள்ளையின் பெயர் மாற்றம் அனைவரையும் வரவற்றது.
“இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற பாடல் நாதஸ்வரத்தில் இசைத்து அனைவரின் மனசையும் சரி கட்டியது.
சுபயோக நாளில் சுபமுஹூர்த்த நேரத்தில் சுற்றம் சூழ்ந்து ஆசி வழங்க சூழ்நிலைக் கைதியாகி கார்த்திக் லாவண்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டு அவளை மனைவியாக்கிக் கொண்டான்.
(தொடரும்).
Series Navigationஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது“செங்கடல்”
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *