தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

Spread the love

                         

                                         

                  அயனுடைய ஊர்திஅதன் அன்னத்து ஓர்அன்னமே

                  பயனுடைய கின்னரமும் அதிற்பிறந்த பறவையே.         [151]

[அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; கின்னரம்=பாடும்பறவை]

      பிரமனின் வாகனமாக இருக்கும் அன்னப்பறவைகூட இந்த ஆலமரத்தில் வாழும் அன்னங்களில் ஒன்றாகும். தேவருலகத்தில் இனிமையாக இசைபாடும் கின்னரம் என்னும் பறவையும் இந்த மரத்தில்தோன்றிய பறவையே ஆகும்.

=====================================================================================                 

                   பைந்நாகம் இருநான்கும் அதன்வேரில் பயில்வனவே

                  கைநாகம் இருநான்கும் அதன்வீழில் கட்டுபவே.          [152]

பைந்நாகம்=நச்சுப்பை உடைய பாம்பு; கைந்நாகம்=துதிக்கை உடைய யானை]

      நச்சுப்பை உடைய எட்டுத்திசை நாகங்களும் இந்த ஆலமரத்தின் வேரில் தங்குவன ஆகும்.  எட்டுத் திசையையும் காத்துவரும் எட்டு யானைகளும் இந்த ஆலமரத்தின் விழுதுகளில் கட்டுண்டு கிடப்பனவே ஆகும்.

====================================================================================

              அப்படியது ஒருகடவுள் ஆலின்கீழ் அமளியாய்

              எப்படியும் தனிதாங்கும் அரவரசை இயம்புவாம்.               [153]

[அமளி=இருக்கை; அரவரசன்=பாம்பரசன்; இயம்புவாம்=சொல்லுவோம்]

      அந்த ஆலமரத்தின் கீழ் தேவியின் இருக்கையாகத் தங்கி இருக்கும் பாம்புகளின் அரசனான நாகராசனின் பெருமையை இனி சொல்லுவோம்.

=====================================================================================

                   மாயிரும் பயோததித் தொகையென

                        வாள்விடும் திவாகரத் திரளென

                  ஆயிரம் பணாமிதப் பரவையது

                        ஆயிரம் சிகாமணிப் பிரபதையதே.                 [164]

[மாஇரும்=மிகப்பெரிய; பயோததி=பாற்கடல்; வாள்=ஒளி; திவாகரன்=சூரியன்; பணா=படம்; பரவை=கடல்; சிகை=உச்சி; பிரபை=ஒளி]

      மிகப் பெரிய ஆயிரம் பாற்கடல் போன்ற இந்த நாகராசனின் ஆயிரம் படங்களும் அந்த ஆயிரம் படங்களின் உச்சியில் இருக்கின்ற நாகமணிகள் ஆயிரமும் ஆயிரம் சூரியர்கள் உதித்தெழுந்தது போல ஒளிவீசித் திகழும்

=====================================================================================.                 

                  வேலை நின்றெழா உகக்கனலென

                        வேக நஞ்சறா மதிப்பிளவென

                  மாலையும் படா விழித்திரளது

                        வாய்தொறும் குவால் எயிற் றணியதே         [155]

[வேலை=கடல்; உகக்கனல்=ஊழித்தீ; பிளவு=துண்டு; படா=தூங்காத; குவல்=குவியல்; எயிறு=பல்]

      கடலின் நடுவில் தோன்றி எழும் ஊழித்தீ போலச் சீறுகின்ற இந்தப் பாம்பரசனின் ஆயிரம் வாய்களிலும், நஞ்சு நீங்காத பிறைநிலவின் இடையே இருக்கும் பிளவுபோல் இருக்கின்ற விழிப்பற்கள் உள்ளன. இந்தப் பாம்பின் கண்கள் இரவிலும் துயிலாத தன்மை உடையன. அவற்றின் வாய்களில் பற்கள் குவியல் குவியலாய் இருந்து அழகு செய்து கொண்டிருக்கும்.

==================================================================================

                   நேரியன் பதாகையில் புலிஎன 

                        நேரியன்தராதரப் புயம்என

                  மேருவும் பொறாவயப் பொறையது

                        மேருவின் பராரையில் பெரியதே.          [156]

[நேரியன்=சோழன்; பதாகை=கொடி; தராதரம்=மலை; புயம்=தோள்; பொறா=சுமக்கமுடியாத; வயம்=வலிமை; பொறை=கனம்; பராரை=அடிப்பாகம்]

      சோழ மன்னனின் கொடியில் இருக்கும் புலியைப் போலவும், சோழ மன்னனுடைய தோள்களைப் போலவும், சுமக்க முடியாத வலிமை உள்ளது அப்பாம்பு. அதன் உடல் பருமன் மேருமலையின் அடிப்பாகத்தின் அளவைவிடப் பெரியதாகும்.

=====================================================================================

                   திரண்டகலை கூடிநின்ற திங்கள்குடை

யாகநிழல் செய்ய முறையால்

இரண்டருகு வாடையொடு தென்றல்குளிர்

சாமரை இரட்டி வரவே.                     [157]

 [கலை=ஒளிக்கதிர்கள்; சாமரை இரட்டல்=சாமரம்வீசல்]

நன்கு திரண்டிருக்கும் சந்திரனின் ஒளிக்கதிர்களே தேவியின் திருவோலக்கத்தில் குடையாக நிழல் தந்துகொண்டிருக்கும். தென்றல் வாடை என்னும் இரண்டு காற்றுகளும் அங்கே சாமரமாக வீசிக் கொண்டிருக்கும்.

=====================================================================================                  குறிக்கும் இருபாலும்உள தீபம்என

வேறு சில கூற உளவோ!

எறிக்கும் மதியும் பருதியும் சுடர்

எடுப்பன இரண்ட ருகுமே.                 [158]

நன்கு ஒளிவீசி வரும் சூரியனும், நிலவுமே அங்கு தேவியின் இருபக்கங்களிலும், தீபங்களாக  ஒளி வீசுகின்றன என்றால் வேறு விளக்குகளைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது?

=====================================================================================                 

                   எளிதளித்தன சுரதருத் தொகை

                        இரவி புற்கிட எழிலியும்

                  தளிதளித்திரு தனு எடுத்தன

                        தகனம் அற்றது சுகனமே.                  [159]

[எளி=எளிதாக; சுரதரு=கற்பக மரம்; இரவி=சூரியன்; புற்கிட=தனிய; எழிலி=மேகம்; தனு=வில்; தகனம்=வெப்பம்; ககனம்=வானம்]

      அங்கே இருக்கும் கற்பக மரங்கள் சூரியனின் வெப்பம் குறைய எளிதாக நிழல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மேகமானது கிழக்கிலும் மேற்கிலும் மழைத்துளிகளைச் சிந்துவதால் வானவில் தோன்ற வானத்தில் வெப்பம் தணிந்தது.

=====================================================================================                 

                   வட்டம் ஒத்தன வண்ணம் ஒத்தன

                        மதுகை ஒத்தன வானில்வந்து

                  இட்ட விற்கள் இரண்டு தங்கள்

                        இரண்டு விற்களும் என்னவே.               [160]

[வட்டம்=உருவம்; மதுகை=வலிமை; தங்கள்=சங்கரன்,நாராயணன்]

      வானில் தோன்றிய இரு வானவில்களும் உருவத்தாலும், நிறத்தாலும், வலிமையிலும், சங்கரன் எனப்படும் சிவனின் கையில் இருக்கும், பினாகம் என்னும் வில்லையும், திருமாலின் கையில் இருக்கும் சாரங்கம் என்னும் வில்லையும் ஒத்திருந்தனவாம்.

Series Navigationபரகாலநாயகியின் பரிதவிப்புகட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்