தக்கயாகப் பரணி  [தொடர்ச்சி]

This entry is part 8 of 19 in the series 3 அக்டோபர் 2021

 

                                             வளவ. துரையன்

 

குளிப்பார் இலர்அஞ்சாது இது;கொண்டு ஓதிமுடிக்கண்

           தெளிப்பார் கலைமகள் பார்மகள் திருஎன்பவர் இவரே.           320                    

[ஓதி=கூந்தல்; தெளிப்பார்=உலர்த்துவார்; பார்மகள்=புவிமகள்; திரு=இலக்குமி]

 

இப்பொய்கையில் அஞ்சாமல் குளிப்பவர் எவரும் இல்லை. நீ பொய்கையில் நீராடி எழுந்தால், உன் ஈரக் கூந்தலை உலர்த்தி முடிக்க்க் கலைமகளும், நிலமகளும், இலக்குமியும் காத்திருப்பார்கள்.

              அலம்வந்தன வேதங்கள் அரற்றத் திருமலையே

              வலம் வந்தனள் மழுவார்திரு நெடுமங்கல மகளே.        [321]

 

[அலம்=முழக்கம்; அரற்ற=ஒலிக்க]

வேதங்கள் எல்லாம் முழக்கமிட மழுப்படையை ஏந்திய சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட மங்கல1ச் செல்வியான உமையம்மை அம்மலையை வலமாக வந்து திருக்கையிலையை அடைந்தாள்.

                     என்றென்று வணங்கி வணங்கிவிடாது

                         எல்லாரும் இரப்ப இரப்ப அதற்கு

                    ஒன்றும்தணி வின்றி விரைந்து பிரான்

                         உறைகோநகர் புக்கனள் ஒண்ணுதலே.         [322]

 

[இரப்ப=வேண்ட; தணிதல்=குறைதல்; உறை=இருக்கும்; ஒண்நுதல்=ஒளி பொருந்திய நெற்றி]

அங்கிருக்கும் பணிப்பெண்கள் எல்லாரும் துதித்து வணங்கித் தொழுது வேண்ட அவற்றைப் பொருட்படுத்தாமல் தம் சினம் தணியாமல் சிவபெருமான் உறையும் கோயிலை உமையம்மை அடைந்தாள்.

                 புக்கு பெருமான்அடி சேவடியில்

                      பொன்மாமலர் கொண்டு புனைந்து பொலம்

                  செக்கர் சடையான் எதிர்நின்று அருளிச்

                       செய்தாள் அடையத்தமர் செய்தனவே.               [323]

 

புக்கு=புகுந்து; பொலம்=பொன்; செக்கர்=சிவப்பு; தமர்=சுற்றம்]

சிவபெருமானின் சன்னதியை அடைந்த தேவி, அவர் திருவடியில், பொன்மலர்களைத் தூவித் துதித்து, சிவப்பான வானம் போல் சிவந்த பொன் நிறச்சடை முடியை உடைய அவர் முன் நின்றுதம் சுற்றத்தால் தாம் அடைந்த அவமரியாதைகளை எல்லாம் கூறினார்.

                  ”தாய்தந்தை எனத்தடை செய்வள் இனித்

                        தானே” எனவேள்வி தகர்ப்பதன்மேல்

                  நாதன் திருஉள்ளம் எடுத்திலன் மற்றும்

                        அதுகண்டு முனிந்தனள் நாயகியே.                324

 

[தகர்த்தல்=அழித்தல்; திருவுள்ளம்=மனம்; எடுத்திலன்=முடிவெடுக்காமல்]

 

“இவர்கள் என் தாய்தந்தையர்; எனவே இவர்களை மன்னித்துவிடுங்கள்” எனத் தேவி தடை செய்வார் என்றெண்ணி வேள்வியை அழிக்கும் முடிவை எடுக்காமல் பெருமான் பேசாதிருந்தார். அது கண்டு தேவி மேலும் சினம் கொண்டாள்.

 

               வேல்எடுத்திலர் அம்பு தொட்டிலர்

                    முயலகன் பெருவெரிந் மிசைக்

                கால்எடுத்திலர் அகிலமும்சுடு

                     கைஎடுத்திலர் ஐயரே.                          [325]

[வெரிந்=முதுகு; மிசை=மேல்=ஐயர்=பெருமான்]

“நான் பட்ட அவமானத்தை எடுத்துச் சொல்லியும், இவர் வேலைத் தூக்கவில்லை, வில் வளைத்து அம்பைத் தொடுக்கவில்லை. முயலகன் முதுகில் வைத்துள்ள காலையையும் தூக்கவில்லை. எல்லா உலகங்களையும் அழிக்கவல்ல நெருப்பை ஏந்தியுள்ள கையைக் கூட இவர், தக்கனை நோக்கி வீச எடுக்கவில்லை”

                  விழித்த தில்லை நுதல் திருக்கண்

                        மிடற்றில் ஆலமும் மேல் எழக்

                  கொழித்த தில்லை இருந்தவா இது!

                        என்று நாயகி கூசியே.                       [326]

 

[நுதல்=நெற்றி; மிடறு=கழுத்து; ஆலம்=நஞ்சு; கொழித்தல்=வெளிப்படல்; கூசி=வருந்தி]

முன்பு திரிபுரத்தை, மன்மதனை எரிக்கத் திறந்த நெற்றிக்கண் இப்பொழுது திறக்கவில்லை. கழுத்தில் உள்ள நஞ்சும் மேலெழுந்து வந்து தெறிக்கவில்லை. ஏன் இப்படி இருக்கிறார் என்று தேவி வருந்தினார்.

                  கரந்த பாகமும் நின்ற பாகமும்

                       வேறுகொண்டு அமை காதலாள்

                  புரந்த பாகமும் அவற்கு விட்டுஇம

                         யம்புகத் தனிபோகவே.                        [327]

 

இதற்குப் பிறகு தாம் இவரோடு ஒன்றிக் கலந்திருத்தல் தகாது எனத் தேவியானவர் எண்ணினார். சிவபெருமானின் வலதுபக்கம் மறைந்தவாறும், இடதுபக்கம் வெளித் தெரிந்தவாறும் காட்சியளிக்கும் தேவி தம் சக்தி அம்சத்தை அவரிடமிருந்து பிரித்துக் கொண்டு இமயமலைக்குத் தனியே சென்றார்.

                   விட்ட பாகம் வலிந்து கண்டனர்

                          வேறு கண்டிலர் மெய்ப்படப்

                   பட்டபாகம் இரண்டும் அங்குஅவர்

                            இல்லை அன்று படாதவே.                   [328]

 

[மெய்=உடம்பு; பட்டபாகம்=இரு கூறுகள்]

 

தம்மிடமிருந்து சக்தியின் சாந்த பாகம் பிரிந்து போனதைப் பெருமான் உணர்ந்தார். இப்பொழுது அவர் வேறானவராகி விட்டார். ருத்ரமூர்த்தியாக மாறினார். இரு கூறான உடலில் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போனது.

                   இந்தனாடவி முன் சிவக்க

                          எரிந்த தொத்தது இருண்டதண்

                   சந்தனாடவி வேறு பட்டது

                          தம்மலைக் குளிர்ச்சாரலே.                [329]

 

இந்தனாடவி=காடுகள்; அடவி=சோலை; தம்மலை=கயிலாய மலை]

இதனால் கயிலாய மலைக் காடுகள் எரிந்தன. சிவந்து கரிந்தன. குளிர்ச்சியான சந்தன மரக்காடுகள் தம் நிலை வேறுபட்டன. கயிலாய மலைச் சாரலிலும் வெப்பம் வந்து சேர்ந்தது.

              பைத்த பூணும் உயிர்ப்பு அழன்றன;

                       பண்டை உண்டியும் அவ்வழிக்

              கைத்தது ஊழியில் ஆடும் மஞ்சன

                      மும்கி ளர்ந்து கனன்றதே.                           [330]

 

[பைத்த=படம் உடைய; பூண்=ஆபரணம்; உயிர்ப்பு=மூச்சு; அழன்றன=சீறின; உண்டி=உண்ட நஞ்சு; கைத்தல்=கசத்தல்; மஞ்சனம்=முழுக்கு; கிளர்ந்து=அதிகரித்து; கனன்றது=எரிந்தது]

ஆபரணங்களாக எம்பெருமானின் திருமேனியில் திகழ்ந்த படமுடைய நாகங்கள் எல்லாம் சீறின; முன்பு பாற்கடலிலிருந்து உண்ட நஞ்சும் கசந்து வெளிவர முயன்றது. ஊழிக்காலம் வரையில் அவர் கையில் இருக்கவேண்டிய நெருப்பு மேலும் அதிகரித்து எரிந்தது.

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்புரிதல்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *