தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

         

                                          வளவ. துரையன்

கார்கிழித்து அமர்நாடு கண்டுஉடன்

பார்கிழித்து உரகர் பூமி பற்றியே.   [361]

 

[கார்=மேகம்; அமரர்=தேவர்; உரகர்=நாகர்]

 

மேகத்தைக் கிழித்துக் கொண்டு பூதப் படைகள் தேவர் உலகம் சென்றன. அதன் பின் பூமியைப் பிளந்துகொண்டு பாதாள உலகம் சென்று நாகர் உலகையும் விழுங்கின.

=====================================================================================குடத்தெடுத்து நல்அமுது கொண்டவர்

படத்தெடுத்த சூடிகை பறித்துமே.   [362]

 

[படம்=பாம்பின் படம்; சூடிகை= தலையில் சூடி உள்ள நாக மணி; பறித்தல்=எடுத்தெறிதல்]

 

தேவர் உலகில் இருந்து கருடன் குடத்தில் கொண்டுவந்த அமுதம் உண்ட நாகர்களின் படங்களில் உள்ள நாக மணிகளைப் பிடுங்கி எறிந்தன.

கடித்தும் என்றுநகர் நஞ்சு கருதியோ

குடித்தும் என்றுஅமிழ்து கொண்டு போயுமே. [363]

 

அப்பொழுது நாகர்கள் சிலரைக் கடித்தனர். அதனால் தம் உடலில் நஞ்சு பாய்ந்திருக்குமோ என்றெண்ணி அமுதத்தை எடுத்துக் கொண்டுபோய்த் தாங்களும் குடித்தனர்.

 

எழாதவாறும் எழுந்த சுராசுரர்

விழாதவாறும் விசும்புற வீசியே. [364]

 

[சுராசுரர்=சுரர்+அசுரர்= தேவர்கள், அசுரர்கள்; விசும்பு=ஆகாயம்]

 

கீழே விழுந்தவர்கள் மீண்டும் மேலே எழவேண்டிய அவசியம் இல்லாமல், மேலே இருக்கின்ற தேவர்களும் அசுரர்களும் கீழே விழாது இருக்கவும் அவர்களை எடுத்துப் பூதப்ப்டைகள் வானமெங்கும் வீசின.

பேர்த்துநின்ற வயிற்றின் பெருவெளி

தூர்த்துநின்ற விசும்பெதிர் தோன்றவே. [365]

 

[பேர்த்து=ஒன்றுமின்றி; பெருவெளி பரந்த இடம்; தூர்த்து=நிரப்பி]

 

ஒன்றுமே இல்லாமல் கிடந்த தம் வயிற்றின் பரந்த இடம் காலியாக இல்லாமல் வானில் வீசி எறிந்த தேவர்களைத் தின்று தீர்த்தன பூதப்படைகள்.

வருதரைக் குன்றுவாழும் குழிவழி

நிருதரைப் புகநூக்கி நிரப்பியே. [366]

 

[நிருதர்=அசுரர்;  நூக்கி=தள்ளி]

மலைகள் எல்லாம் இறகுபெற்றுப் பறந்து சென்று தங்கிய இடங்களில் எல்லாம் குழிகள் உண்டாகி இருந்தன. பூதப்படைகள் அசுரர்களின் பிணங்களைத் தூக்கி அப்பள்ளங்களில் போட்டு மூடின.

==================================================================================

ஓதமும் பொருப்பும் மண்ணும்

      விண்ணும் மற்றும் உள்ளஎப்

பூதமும்திரி சூலம் இட்டு

      உடன் கலந்து போதவே.           [367]

 

[ஓதம்=கடல்; பொருப்பு=மலை; பூதம்=உயிர்]

கடலில், வானில், மண்ணில், மற்றும் உலகில் எங்கெங்கும் உள்ள எல்லா உயிர்க் கூட்டங்களையும், அந்தப் பூதங்கள் தங்கள் திரிசூலத்தால் குத்திக் கொண்டு போயின.

வெம்மையே புரிந்த பேர்

   அலாயு தத்தர் வெள்ளையோர்

தம்மையே உரித்த மைத்த

   சட்டை மெய்தயங்கவே.        [368]

 

[வெம்மை=வலிமை; அலாயுதம்=கலப்பை; மெய்=உடல்]

 

வலிமை பெற்றுப் போர் புரிந்த வெள்ளை நிறத் தேவர்கள் கலப்பை என்னும் ஆயுதத்தை ஏந்தி நின்றனர். பூதப்படைகள் அவர்களின் தோல்களை உரித்தெடுத்து வெண்ணிறச் சட்டைகளாகத் தம் உடலின் மீது போர்த்திக் கொண்டன.

தூற்றெ ழுந்தபேய் நிரை

         துளங்கு தம்உடம்பு விட்டு

அற்றெ ழுந்த தோல் முழுச்

        சளம்பம் மீத லம்பவே. [369]

 

[துற்று=உணவு; துளங்கு=மெலிவு; சலம்பம்=சட்டை; அலம்ப=கிழிபட]

 

உணவின்றி வாடிக் கிடந்த பேய்களுக்கு இப்பொழுது பெரிய விருந்தே கிடைக்கப்போவதால் அவற்றின் உடம்பின் மீது போர்த்திய சட்டை கிழியும்படி உடல் பருத்தது.

மலைப் பிடித்த சிங்க ஏறு

      உடன் பிணைத்து வாரிநீர்

அலைப் பிடித்த மீளஏறு

      பெய்த காது அலைப்பவே.         [370]

 

[ஏறு=விலங்குகளில் ஆண்; வாரி=கடல்; அலைப்ப=அசைய]

 

மலைகளில் திரிந்து கொண்டிருந்த சிங்கங்களைப் பூதப்படைகள் பிடித்தன. அலைவீசும் கடலில் திரியும் சுறாமீன்களையும் பிடித்தன. அவற்ரைத் தம் காதுகளில்  குண்டலங்களாக அணிந்தன. 

 

Series Navigationமகாசிவராத்திரியும் மயானகாண்டமும் – அனுபவப் பகிர்வுஅயலாள் தர்மினி கவிதைகள் – வாசிப்பு அனுபவம்:  அவதானிப்பின் ஊடாக உணர்வுகளை புரிந்துகொள்ளல்….!