தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

 

 

                                   

                        பாச்சுடர் வளவ. துரையன்

 

 

செயிர்த்து உதரத்து எரிச்சுரர் பொற்சிகைக் கதுவச் சிரித்தே

உயிர்ப்பில் இணைக் குருக்களை இட்டு உருக்கித் தகர்த்து உரைத்தே.       476 

 

[செயிர்த்து=கோபித்து; உதரம்=வயிறு; சிகை=தலை முடி=உயிர்ப்பு=பெருமூச்சு; இணைக்குருக்கள்=வியாழன்,சுக்கிரன்]

 

தேவர்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்காததால் வயிற்றில் பசித்தீ பற்றி எரிந்து அது உச்சித் தலைமுடிக்கு மேலே தெரியக் கண்டு சிரித்த பூதப்படைகள் தேவர்களின் மூக்குத் துளைகள் வழி வந்த பெருமூச்சில் பொன் வெள்ளி என்னும் இரண்டு குருமார்களையும் போட்டு உருக்கித் தம் நகத்தால் மாற்றுரைத்துப் பார்ப்பார்கள்.

                    

           

             திறத்து அவுணக்கணத்து உருவச் செறித்து உகிரைப் பறித்தே

            புறத்திகிரிப் புக்க்குருதிப் புதுப்புனல் கொப்புளித்தே.               477

 

[திறம்=வகை; அவுண கணம்=அசுரர் கூட்டம்; உகிர்=நகம்; புறம்=அப்பால்; குருதி இரத்தம்]

 

பல வகையான அசுரர் கூட்டம் தம் உடம்பை நகங்களால் கிழித்து, இரத்தத்தைக் குடித்து சக்ரவாள மலைக்கப்பால் சென்று விழும்படிக்குக் கொப்பளித்தார்கள்.

 

               

      கொதித்து உவணக் கொழுப்பு அரிபொற்கொடிக்குமுறக் குமைத்தே

      கதித்த உரகக் கழுத்தின்முடிக் கவர்ப்பு அடையக் கழித்தே.              478

 

[கொதித்து=கோபித்து; உவணம்=கருடன்; கொழிப்பு=சினம்; அரி=திருமால்; குமுற=அலற; குமைத்து=குத்தி; கதித்து=விரைந்து; உரகம்=பாம்பு; கவர்ப்பு=பல் பிரிவான]

 

சினத்துடன் எழுந்து, திருமாலின் தேர்மீது பறந்த கொடியில் இருந்த கருடனின் செருக்கு அழிய, அதன் கழுத்தில் பல தலைகளோடு இருந்த பாம்பினை எடுத்துத் தூக்கி எறிந்தன.

            

      கலத்தமிர்தப் பரப்படையக்கடவுள் படையில் கவிழ்த்து ஏழ்

      பிலத்துருவப் பிளப்படியைப் பிடித்து திரப்பிதிர்த்தே.                    479

 

[ஏழ்பிலம்=ஏழு பாதாள லோகங்கள்; அவை=அள்ளல், இரௌரவம், கும்பீபாகம்,. கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி; பிதிர்த்தல்=உதிர்த்தல்]

 

ஏழு பாதாளலோகங்களையும் பிரிக்கும் சுவர்களைத் தகர்த்துப் பொடிப் பொடியாகச் செய்து, கருடன் முன்னர் கொண்டுபோய் மறைத்து வைத்திருந்த அமிர்தக் கலசங்களைக் குடித்துக் காலியாக்கின.

                

      அரக்கர் உரத்து அரத்தம் மடுத்து அழுக்கை எயிற்று அரைத்தே

      புரக்ககனப் பொருப்பர்களைப் பொடித்து எரிகண் பொரித்தே.             480

 

[உரம்=மார்பு; அரத்தம்=இரத்தம்; மடுத்து=குடித்து; அழுக்கு=சதை; எயிறு=பல்]

 

அரக்கர்களின் மார்பைப் பிளந்து, இரத்தம் குடித்து, உடல்களைப் பற்களால் மென்று தின்று, ஆகாயத்தில் உள்ள கந்தர்வர்களை எரித்துப் பொடிப்பொடியாகக் கண் நெருப்பால் சுட்டனர்.

                  

      கனத்தகளக் கொளுத்தில்அறக் களிற்றணியைக் கடித்தே

      இனத்த குறைப்பிறக்கம் எயிற்று எதிர்ப்ப வயிற்றடுத்தே.              481  

     

[களம்=கழுத்து; கொளு=குரல்வளை; குறை=தண்டு; பிறக்கம்=குவியல்]

 

பெரிய யானைகளின் குரல்வளை அறுபட அவற்றின் கழுத்தைக் கடித்துத் துண்டான சதைக் குவியல்களைப் பல்லில் இட்டுக் கடித்து வயிற்றுள் செலுத்தினர்.

           

அழித்த மதிக்கதிர் குளிர்இட்டு அருக்கர் உருப்பு அவித்தே

விழித்த வெயில் ப்ரபைக் கனலைப் பனிப்ப்ரபையிட்டு அவித்தே.          482 

 

[மதி=சந்திரன்; கதிர்=கிரணம்; அருக்கர்=சூரியர்; உருப்பு=வெப்பம்; ப்ரபை=ஒளி; அவித்து=அணைத்து]

 

சந்திரனின் குளிர்ச்சிதரும் ஒளிக்கிரணங்களை அணைத்துக் குளிரச் செய்தனர். சந்திரனின் ஒளியால் சூரியனின் வெப்பமும் குறையச்  செய்தனர்.

               

       தகட்டுமுடிப் பசுக்கள் வசுக்களைத் தழுவிச் சமைத்தே

      பகட்டின் ஒடித்து உருத்திரரைத் திருக்கை முடம்படுத்தே.        483

 

[சமைத்து=ஆற்றல் அடங்கச் செய்து; பகடு=காளை மாடு; முடம்படுத்தி முடமாக்கி; எட்டு வசுக்கள்=அனலன், அனிலன், ஆபச்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தூசன், பிரபாசன்]

 

பொன் தகடு போர்த்திய பசுக்களைப் போன்று உள்ள அட்டவசுக்களைத் தழுவி அவர்தம் ஆற்றல் அடங்கச் செய்து, உருத்திரர்கள் ஏறிவந்த காளைகளின் கால்களை ஒடித்துக் கைகளை செயலிழக்கச் செய்தனர்.

             

      தடுத்தகுலப் பொருப்பை முடித்தடத்து உடையத் தகர்த்தே

      உடுத்தொடை அற்று அழைத்து நிலத்து உழைப்ப உதைத்து உகைத்தே.  484

 

[பொருப்பு=மலை; மிடி=சிகரம்; உடு=நட்சத்திரம்; எட்டுமலைகள்=இமையம், கயிலை, நிடதம், மந்தரம், ஏமகூடம், கந்தமாதனம், நீலகிரி]

 

தடுக்கும் எட்டு மலைத்தொடர்களின் சிகரங்கள் உடைந்து சிதறுமாறு அவற்றை உதைத்துத் தள்ளினர். நடசத்திரக் கூட்டங்கள் வானில் இருந்து பூமியில் விழுந்து சிதறுமாறு உதைத்துத் தள்ளினர்.

                   

      குனித்தகளத் தளக்குதிரைக் குளப்படியைக் குறைத்தே

      பனிப்பகையைப் பனிச்சுடர் விட்டெறிப்பன பறித்தே.                   485

 

[குனித்த=வளைந்த; களம்=கழுத்து; தளம்=நடையின் கதி; குளம்படி=கால் பனிப்பகை=சூரியன்]

 

வளைந்த கழுத்துடைய தாள லயம் தவறாமல் அடிஎடுத்து வைக்கும் குதிரைகளின் கால்களை வெட்டிப் பன்னிரு சூரியர்களின் சந்திரன்போல் ஒளிவிடும் பற்களை உதிர்த்தனர்.

            

      சுமப்பன திக்கயத்துடன் அத்திசைச் சுரரைத் துணித்தே

      தமப்பன அடிக் கழுத்தடையத் தனிப்பகழித் தறித்தே.                  486

 

[திக்கயங்கள்=திசை யானைகள்; சுரர்=தேவர்; தமப்பன்=தகப்பன்; பகழி=அம்பு; தறித்தல்=அழித்தல்]

 

இப்பூமியை எட்டுத்திக்கிலிருந்தும் சுமந்துகொண்டு காக்கும் திசையானைகளையும், எட்டுத் திக்குப் பாலகர்களான தேவர்களையும், வெட்டிக்கொன்றனர். படைக்கும் தொழிலைச்செய்வதால் தகப்பன் எனக் கருதத்தக்க பிரமனின்        தலைகளையும் அறுத்துத் தள்ளினர்.

                        

             நிழற்கடவுள் சுடர்த்தொகையைத் திரைத்து நிலத்து அரைத்தே

            தழற்கடவுள் தடக்கைகளைத் தறித்து மழுப்பொறித்தே.          487

 

[சுடர்=கதிர்; திரைத்து=கொண்டு; அரைத்தல்=தேய்த்தல்; தழல்=நெருப்பு; தறித்தல்=வெட்டுதல்]

 

நிழல் தரும் கடவுளான சந்திரனின் கதிர்களைப் பிடித்துப் பூமியில் போட்டுத் தேய்த்தனர். நெருப்புக் கடவுளான அக்னிதேவனின் பெரிய கைகளை வெட்டி அவன் உடலில் சூடு போட்டனர்.

           

            இனத்து அமரர்க்கு இறைக்குயிலைப் பிடித்து இறகைப் பறித்தே

            பனத்தியை விட்டு அசட்டு வசிட்டனைப் பசுவைப்பறித்தே.        488

 

[இறை=தலைவன்; பறித்து=எடுத்து; பனத்தி=பார்ப்பனப்பெண்; பசு=காமதேனு]

 

திசைக்காவலர்களை அழித்ததைக் கண்ட தேவர் தலைவன் இந்திரன், குயிலாக மாறிப் பறந்து போனான். வீரபத்திரர் படைகள் அக்குயிலைப் பிடித்து, அதன் சிறகை ஒடித்து எறிந்தனர். அருந்ததியோடு இருந்த வசிட்ட முனிவரை விட்டுவிட்டு அவரின் தெய்வப்பசுவைப் பிடித்துக் கொண்டு சென்றனர்.

      அகத்தியனைத் தமிழ்ப்பொதிகையில் குகைப் புகவிட்டு அடைத்தே

      இகத்திஎனப் புலத்தியனைத் துடிக்க அடித்து இழுத்தே.                 489

 

[இகத்தி=இடத்தை விட்டுப் போய்விடுக; துடிக்க=வருந்த; புலத்தியன்=பிரமனின் மானசபுத்திரன்]

 

அகத்தியரை ஒரு குகையில் புகவிட்டு அடைத்தனர். புலத்தியனை இவன் அரக்கர்களின் மூதாதை என்று  அவனைத் துடிதுடிக்க அடித்து இழுத்து சென்றனர்.

 

                      

     

      இகல் தருமற்கு எடுத்தகொடி தடுத்து இறைவர்க்கு அடுத்தே

      பகல்சுடரின் பகற்கு இருகண் பரப்பிருளைப் படுத்தே.               490  

 

[இகல்=வலிமை; பகல்=பன்னிரு சூரியர்களில் ஒருவன்]

 

வலிமை உடைய எமதருமனின் எருமைக்கொடியைக் கைப்பற்றி, வீரபத்திரரின் இடபக் கொடிக்குச் சம்மாக இருக்கச் செய்து பன்னிரு சூரியர்களில் ஒருவனான பகன் என்பானின் இரு கண்களையும் பிடுங்கி எறிந்தனர்.

                     

      சலத்தரசைக் கயிற்றில் இணைத் தடக்கைகளைத் தலைத்தே      

      கலக்கல முத்துஉகப்ப அடல்கடல் சுறவைக் கடித்தே.                491

 

[தடம்=பெரிய; தளைத்து=கட்டி; கலக்கலம்=கலம் கலமாக; அடல்=வலிமை]

 

சலத்தரசன் வருணனைக் கயிற்றால் கட்டிப் போட்டு, கடலில் உள்ள வலிமை மிக்க சுறாமீன்களைப் பிடித்துக் கடித்தனர். அவற்றின் வயிற்றில் இருந்து கலம் கலமாக முத்துகளை உதிரச் செய்தனர்.

       

     

       அடுத்த குலப்பொருப்பை இரும்புலக்கை பிடித்து அடித்தே

      எடுத்தன கற்பகப் பொழில்கள் கடைக்கனல் இட்டுளித்தே.             492 

 

[குலப்பொருப்பு=மலைத்தொடர்; பொழில்=சோலை; கடை=கடைக்கண்]

 

மலைத்தொடரில் கயிலமலை, இமயமலை இரண்டையும் விட்டுவிட்டு மற்றவற்றை இரும்பு உலக்கை கொண்டு உடைத்து எறிந்தனர்.தேவலோகத்தின் கற்பகச் சோலைகளைத் தங்கள் கண்களின் நெருப்பால் சுட்டு எரித்தனர்.

       

       குலப்பரவைப் பரப்பு அடையக் கடைக்கனலில் குடித்தே

      சிலப்பரசைத் திருப்பரசுக் களிற்சிதையத் துடைத்தே.                   493

 

[குலப்பரப்பு=எழுகடல்கள்; பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு ஆகியன. பரசுக்கள்=மழுவாயுதங்கள்; சிதைய=கெட]

 

ஏழு கடல்களையும் குடித்து வறளச் செய்தனர். மேருமலை புனிதமானது என்பதால் அதைத் தம் மழுப்படை மழுங்கத் துடைத்துச் சுத்தப்படுத்தினார்கள்.

                      

             வேவின் உள்வயின் வேவது ஈதெனப்

            பாவகன் தகர் சுடாது பற்றியே.                                 494

 

[வேவின்=வேவதனால்; வேவது=வேகட்டும்; பாவகன்=அக்னி; தகர்=ஆட்டுக்கடா]

 

அக்னிதேவனின் ஆட்டுக்கடாவைப் பிடித்தனர். இதை அக்னி சுடமாட்டான் என்று தம் வயிற்றில் வேகட்டும் என்று தின்றனர்.

               

             ஏழு மானையும் ரவி இழக்கவும்

            வாழும் மானையும் மதிஇழக்கவே.                      495

 

[மான்=குதிரை; ரவி=சூரியன்]

 

சூரியன் தேரில் பூட்டி உள்ள ஏழு குதிரைகளையும் கொன்று, சூரியனைக் குதிரைகள் இழந்தவனாகச் செய்தனர். சந்திரனிடம் உள்ள மானாகியக் களங்கத்தையும் அவனிடம் இல்லாமல் போகச் செய்தனர்.

                           

            செம் பொடிப்புரத் திக்கயங்களைக்

            கொம் பொடித்தடிக் குருகு துற்றியே.                     496

 

[செம்பொடி=செந்தூரப்பொடி; புரம்=தலை; கொம்பு=தந்தம்; குருகு=மூளைச்சதை; துற்றல்=உண்ணல்]

 

செந்தூரப் பொட்டிட்ட நெற்றியை உடைய திசையானைகளின் தந்தக் கொம்புகளை உடைத்து அதன் அடிப்பகுதியான மத்தகத்தின் கொழுப்பைப் படைகள் உண்டன.

              

            

             தருமன் ஒளியோடு இவுளியைத் தகர்த்து

            எருமையோர் ஓரோ புகழ்கெடுத்துமே.                       497

 

[தருமன்=எமன்; இவுளி=குதிரை; ஓரோ புகழ்=ஒப்பற்ற புகழ்]

 

எமதருமன்  வாகனாமாகிய எருமைக் கடா முகம் கொண்ட பூதர்களை அழித்து அவன் புகழைக் கெடச் செய்தனர்.

                ] 

 

            வருதி என்று பேய் ஊர்த்தி வௌவியே

            நிருதி தன்னையே நிலைநிறுத்தியே.                        498  

 

[நிருதி= தென்மேற்குத் திசையின் காவலன்; ஊர்தி=வாகனம்; வௌவி=கவர்ந்து]

 

தென்மேற்குத்திசையின் காவலனான நிருதியை அவனுடைய வாகனமான பேயைக் கவர்ந்துகொண்டு, அவனை நடந்து வா என்று பேய்க்கணங்கள் கட்டளையிட்டனர்.

                                       

                   இருள் கடற்கடைக் கனலில் இட்டெடா

                  வருணன் வாகனங் களை மடக்கியே                    499

 

[இருள்=கருமை; கடைக்கனலில்=ஊழிப்பெரு நெருப்பில்; வருணன் வாகனம்=சுறாமீன்]

 

கடலரசனான வருணனின் வாகனமான சுறா மீன்களைப் பிடித்து. ஊழிக்காலத்தில் கருங்கடலில் எழும் நெருப்பில் சுட்டு எடுத்துத் தின்றன சில பூதங்கள்.

                   

                   ஆர்வம் ஆளும் நாரணர் அநேகர்தம்

                  மார்பம் ஆளும் மாநௌவி வவ்வியே.                   500

 

[மார்பம்=திருமார்பு; நௌவி=மான், இலக்குமி]

 

தம் விருப்பத்தின் காரணமாகப் பல வடிவங்கள் எடுக்கும் திருமாலின் மார்பில் வீற்றிருந்து அருள் செய்யும் இலக்குமியை அவரிடமிருந்து பிரித்தனர்.

 

Series Navigationஅவன் வாங்கி வந்த சாபம் !