தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 7 of 12 in the series 24 மே 2020

                       

                                                  

                   தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன்,

                  விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே.      [91]

[அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; மெய்=உடம்பு]

      இப்பாடல் சக்தி வழிபாட்டினரைப் பற்றிக் கூறுகின்றது. அவர்கள் தத்தம் தலைகளைத் தாங்களே அரிந்து கொண்டு, ஆனால் தம் உயிரை விட்டு விடாது, அத்தலைமுன் தங்கள் உடலின் மூலாக்கினியை மேலெழச் செய்து, யோகாக்கினியான விளக்கை ஏற்றுவர்.

=====================================================================================

                  அகவனசம் முகவனசம் அவைமலர அரிவார்

                  நகவனச மலர்குவிய வலம்வருவர் தாமே.            [92]

[அகம்=மனம்; வனசம்=தாமரை; குவிய= கூப்பி  வணங்க]

      தங்கள் தலையைத் தாங்களே அரிந்து கொண்ட போதும் அவர்கள் சிறிதும் அதைப்பற்றிய வலியோ, வருத்தமோ கொள்ளமாட்டார். அவர்கள் தங்கள் உள்ளத் தாமரையும், முகத்தாமரையும் மலர, நகங்களொடு கூடிய  கைகளாகிய தாமரை மலர்கள் கூப்பி வணங்கியபடித் திருக்கோயிலை வணங்கி வலம் வருவர்.

=====================================================================================  

                 கொக்கொழுங்குபட ஓடிமுகில் கூடி அனையார்

                 அக்கொழுங்குபடு கஞ்சுகம் அலம்ப உளரே.               [93]

[கஞ்சுகம்=சட்டை; அலம்ப=ஒலிக்க]

      கொக்குகள் கூட்டம் வானத்தில் வரிசையாகப் பறந்து செல்ல, அவற்றின் மேலே கரிய மேகம் படர்ந்திருப்பது போல, சங்கு மணிமாலைகள் மேல் தம் கரிய சட்டைகளைப் போர்த்திக்கொண்டு ஒலி எழுப்பி முழக்கி ஒரு சிலர் வழிபடுவர்.

=====================================================================================

                   இந்தி ராதியரும் எக்கமல யோனிகளுமே

                  சந்தி ராதியரும் அத்தலைவி சாதகர்களே.                 [94]

[கமலயோனி=தாமரை மலரிலிருந்து பிறந்த பிரமன்; சாதகர்=உபாசிப்பவர்கள்]

      இந்திரன் முதலான தேவர்களும், திக்குப்பாலகர்களும், தாமரை மலரில் பிறந்து வீற்றிருக்கும் பிரம்மாக்களும், சந்திரன் சூரியன் முதலான தேவர்களும், தேவி துர்க்கையின் திருவடியைப் பணிந்து அத்தேவியை உபாசிப்பவர்களே ஆவார்.

=====================================================================================                      

                  அடையாள முளரித் தலைவிஆதி மடவார்

                  உடையாள் திருஅகம் படியில்லோ கினிகளே          [95]

[முளரி=தேவி; ஆதி=முதலான; மடவார்=பெண்கள்; திருஅகம்படி=திருக்கோயில் உள்ளிடம்; யோகினி=பணிப்பெண்கள்]

      தாமரை மலரையே தனக்கு அடையாளமாகக் கொண்ட தேவி, மற்றும் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள், முதலான தேவியர் எல்லாருமே, துர்க்கையின் திருக்கோயிலில் உள்ளிருந்து தொண்டு செய்து அருள் பெற்றவர்களே ஆவர்.

=====================================================================================                         

                   சுழல்வட்டத் துடிகொட்டத் துணைநட்டத்தினரே

                  தழல்வட்டத் தனிநெற்றித் தறுகட் கொட்பினரே.      [96]

[துடி=உடுக்கை; தழல்=நெருப்பு; தறுகண்=அஞ்சாமை; கொட்பு=சுழலுதல்]

      சிலபரிகார தேவதைகள் வட்டவடிவமான உடுக்கை எழுப்பும் ஒலிக்கேற்ப வேகமாக நடனம் ஆடுவர். சிலர் நெருப்புப் போன்ற நெற்றிக் கண்ணுடன் அஞ்சாமல் சுழன்று அத்திருக்கோயிலின் முன் ஆடுவர்.

=====================================================================================

             கழுவைப்புக்கு அறவெட்டிக் கவர் சுற்றத்தினரே

            உழுவைச் சிற்றுரிவைப்பச்  சுதிரப்பட்டினரே.               [97]

[கவர்=கவர்ந்து; உழுவை=புலி; பச்சுதிரப் பட்டு=பச்சை இரத்தம் ஒழுகும் மேலாடை]

      கழுவேலேற்றப் பட்டிருப்பவர்களை வெட்டிக் கொண்டு வந்து தின்னும் பேய்களுக்குச் சிலதேவதைகள் உறவினர்கள் ஆவர். சிலர் புலிகளின் தோலை உரித்தெடுத்து அதில் பச்சை இரத்தம் ஒழுக அதைப் பட்டாடையாக உடுத்துபவர்கள் ஆவர்.

====================================================================================

                      உகுநச்சுத் தலைநெட்டு எட்டு உரகக் கச்சினரே

                     தகுபுத்தப் புதுமக்கள் தலைமக்கட் டினரே.             [99]

[நச்சு=நஞ்சு; உரகம்=பாம்பு;

      ஒரு சிலர் நஞ்சைக் கக்குகின்ற தலை உடைய பாம்புகள் எட்டை அரைக் கச்சாகத் தம் பார்பில் அணிந்திருப்பர், சிலர் அதற்கு மேலே இறந்த மனிதர்கள் தலைகளை மாலையாக அணிந்திருப்பர்.

=====================================================================================            குடர்அட்டத்து ஒரு செக்கர்க் குருதிப் பெட்டினரே

            படர்பொற்கைச் செறிஅக்குச் சரி பப்பத்தினரே.            [100]

[அட்டுதல்=வடிதல்; செக்கர்=செந்நிறம்; செறி=நிறைந்த; அக்கு=சங்குமணி; பப்பத்து=

பத்து பத்து; நூறு]

      போர்க்களத்தில் இறந்துபட்ட வீர்ர்களின்  ஒழுகும் இரத்தத்தை எடுத்துச் சிலர் நெற்றியில் பொட்டாக இட்டுக்கொள்வார்கள்.  ஒரு சிலர் சங்கு மணிகளை தம் கைகளில் நூற்றுக்கணக்காக அணிந்திருப்பார்கள்

Series Navigationதனிமைஇன்னும் சில கவிதைகள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *