தந்தையர் தினம்

அச்சாணிக்
கெதற்கு ஆராதனை
அச்சாணி தந்தை

ஆழ் கடலுக்
கெதற்கு ஆரவாரம்
ஆழ்கடல் தந்தை

வேர்களுக்
கெதற்கு வெளிஅழகு
வேர்கள் தந்தை

அஸ்திவாரங்கள்
ரசிக்கப்படுமோ?
அஸ்திவாரங்கள் தந்தை

விதை காக்கும் உமிகள்
விரும்பப்படுமோ?
உமிகள் தந்தை

ருசி தரும் உப்பு
ருசிக்கப்படுமோ?
உப்பு தந்தை

சுமைதாங்கியைத் தாங்க
சுமைதாங்கி ஏது?
சுமைதாங்கி தந்தை

இமைகளைக் காக்க
இமைகள் ஏது?
இமைகள் தந்தை

சூரியனுக் கோர் தினம்
சந்திரனுக் கோர் தினம்
இருக்கு மென்றால்
தந்தையர்க்கும்
இருக்கட்டுமே
தந்தையர் தினம்.

அமீதாம்மாள்

Series Navigationஇரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறதுராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை