தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

‘அம்மா என் உலகம்’ கவிதைத் தொகுப்பை எழுதியவர் திருச்சியில் அரசு பணியில் உள்ள தனலெட்சுமி பாஸ்கரன். இதில் சுமார் 130 சிறு கவிதைகள் உள்ளன. கவிதைகள் எளிமையானவை. நேர்படப் பேசுபவை. வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களின் மறுபக்கத்தை நமக்குக் காட்டுபவை. உற்று நோக்குதலைத் தொடரும் படைப்பாற்றலால் கவித்துவம் தெறித்து விழுகிறது. கிணற்றில் நீர் இறைப்பது சாதாரண செயல்தான். அதை இவர் பார்க்கும்போது கவிதையாகிறது. கவிமனம் இவருக்கு இயல்பாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் உரசி
அமிழ்ந்து மேலெழும்பும்
பாத்திரத்தின் வெற்றிடத்தை
ஆவலுடன் நிரப்பி விட்டு
ஆசுவாசமாகிறது
கிணற்று நீர்
‘கால்களும் கவிதையும்’ கவிதையை ஓர் ஆண் எழுதியிருக்க வேண்டும். இவரால் எப்படி எழுத முடிந்தது?
படித்துறை நீரில் நிற்கும்
அவளின் கால் முகர்ந்து
கவிதை உறிஞ்சிப் போகின்றன.
ஓராயிரம் மீன்கள்…

காதலை வித்தியாசமாகச் சொல்கிறது ‘மீளாமை’
தன் தலை முடியைத்
தானே பற்றிக் கொண்டு
விடுவிக்கும் உபாயம் அறியாமல்
வீறிட்டழும் சிசுவைப் போல்
உன் நினைவுகளிலிருந்து நான்…
இக்கவிதையில் முத்தாய்ப்பு கவிதையை வெகு உயரத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.

சாலையில் நாம் எல்லோரும் பார்க்கும் காட்சியில் கவித்துவம் கண்டுள்ளார் தனலெட்சுமி!
சவ ஊர்வலத்தில்
சிதறிய பூக்களை
சுவைக்கினறன பலி ஆடுகள்…
என்கிறது ‘பூவும் சாவும்’ கவிதை!
‘கழைக் கூத்தாடி’யில் வறுமையின் கொடுமை திருக்குறள் போல் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.
‘நெருப்பு வளையத்துக்குள்
சாகசம் புரியும் மகள்
பற்றி எரியும் தாய் வயிறு…’

கணவன் – மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் குழந்தையின் அழகான விளையாட்டை அவர்கள் ரசிக்க முடியாமல் போவது ஒரு கவிதை.
அம்மாவின் சேலை சுற்றி
அப்பாவின் செருப்பணிந்து
தனியே விளையாடும் மழலையை
ரசிக்கும் ஆயா!
கவிதை அறைகிறது!
காதல் நிறைவேறாவிட்டாலும் காதலன் முன்னேற்றம் கண்டு மகிழும் ஒரு பெண் மனம் காட்டுகிறது. ‘கரவொலிகளில்..’
“பெருங் கவியாக்கிய பெருமையில்
மறைந்திருக்கிறேன்”
என்கிறார் அந்தப் பெண்.
ஆண் நோக்கில் அமைந்துள்ளது ‘தாய்மை’ – பரிவு கவிதையின் கருப்பொருள் இதுவரை யாரும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். அது ‘பொம்பளைங்க சமாச்சாரம்!’
‘திருப்பள்ளியெழுச்சி’ வித்தியாசமான கவிதை! ‘அசதியில் உறங்கும் ஆண்டாள் எழுப்பும் சங்கொலி!’
சாலையில் செல்லும் போது நடக்கும் ஒரு யதார்த்தமான காட்சி…
தன்னிச்சையாய்
பறந்த பட்டாம் பூச்சிகள்
தலைக்கவசத்தில் மோதி
திசைமாறுகினறன.

முடிவாக தனலெட்சுமியின் கவிதைகள் வாழ்க்கையை விமர்சனக் கண்ணோட்டத்தில் காட்டுபவை. கவித்துவம் தெறிப்பதும் அறைவதுமாய் வாணவேடிக்கை காட்டுகிறது. சற்று நீளமான கவிதைகளையும் இவர் எழுத வேண்டும் கவிதையின் நல்ல தொடக்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான வழியை உருவாக்கட்டும்!

Series Navigationமொழியின் அளவுகோல்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 12