தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !

 

தஞ்சையில் முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன் உரை!

 

 

தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார்.

 

அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மூலிகைப் பண்ணை வைத்திருந்த 25 ஏக்கர் நிலத்தை நடுவண் அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது தமிழக அரசு. அதன் பிறகு 50 ஏக்கர் நிலத்தை வீட்டுவசதி வாரியத்திற்குக் கொடுத்தது. வீட்டு வசதி வாரியம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வீடுகட்டி தனியாருக்கு விற்றுவருகிறது .

 

இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முதலியவற்றைக் கட்ட பல்கலைக்கழத்தின் முதன்மை வாயிலுக்கு அருகிலும், முதன்மை நிர்வாகக் கட்டடங்களுக்கு அடுத்தாற் போலும் 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப் படுத்தி வழங்கியுள்ளது.

 

இவ்வாறு தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை வேறு வேறு நோக்கங்களுக்காகக் கையகப்படுத்திக் கொடுத்து வருகிறது. போதிய நிதியும் அளிக்காமல், இருக்கின்ற நிலத்தையும் பறித்து வருகிறது தமிழக அரசு.

 

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு எடுத்த 62 ஏக்கர் நிலத்தைத் திரும்பவும் பல்கலைக்கழகத்திற்கே ஒப்படைக்க வலியுறுத்தியும், நிதி நெருக்கடியை சமாளிக்க 1000கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதி வழங்க வலியுறுத்தியும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் 15.06.2012 அன்று மாபெரும் பொதுக் கூட்டம் நடந்தது.

 

தமிழ்ப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு திரு அய்யனாபுரம் சி.முருகேசன் (த.ப.பா.இ.) தலைமையேற்றார். சென்னைப் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் திரு பெ.மணியரசன் (த.ப.பா.இ), முனைவர் கு.திருமாறன்(தமிழியக்கம்), முனைவர் கு.முருகேசன்(முன்னாள் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), இரா.திருஞானம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), வழக்குரைஞர் அ.நல்லதுரை (நாம் தமிழர் கட்சி), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள்), வெற்றிவேந்தன் (விடுதலைச் சிறுத்தைகள்), சென்னை பா.இறையெழிலன் (த.ப.பா.இ), ஜே.கலந்தர் (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் உரையாற்றினர். தோழர் பழ.இராசேந்திரன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) நன்றி கூறினார்.

 

தஞ்சைக்கு மட்டும் இன்றி தமிழினத்திற்கே பெருமை சேர்க்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம் நலிந்து போக விடக்கூடாது; என்ன நோக்கத்திற்காகப் பல்கலைக்கழகத்திற்கு 1000 ஏக்கர் ஒப்படைக்கப் பட்டதோ, அந்நோக்கங்களை நிறை வேற்ற வேண்டும்; அதற்கு மாறாக பல்கலைக்கழக நிலத்தை அவ்வபோது எடுத்து பல்கலைக்கழகத்திற்குத் தொடர்பில்லாத வேறு நோக்கங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று முன்னாள் துணைவேந்தர்களும் மற்ற பேச்சாளர்களும் வலியுறுத்தினர்.

 

கூட்டத்தில் பெருந்திரளாக மக்கள் திரண்டிருந்தனர்.

Series Navigationதுருக்கி பயணம்-7மஞ்சள் கயிறு…….!