தலைமுறை இடைவெளி

எனக்கும் என் மகனுக்குமிடையே

அரைநூற்றாண்டு இடைவெளி

அப்பா-மகன், குரு-சீடன்

இப்படித்தான் நாங்கள்

குருவாக அப்பாவாக என்மகன்

எங்கள் மல்லிப்பூ உரையாடலில்

முட்கள் இருந்ததில்லை

கின்னஸ்களில் அவர் வாழ்க்கை

கிண்ணத்தில் என் வாழ்க்கை

போயிங்கில் அவர் பயணம்

பொட்டு வண்டி என்பயணம்

அவரின் ரசிகர்கள் மின்மினிகள்

என் ரசிகர்கள் மினுக்கட்டான்கள்

அவரின் அசைவுகளுக்கு 

ஆயிரக்கணக்கில் லைக்குகள்

சிதறிய ஒன்றிரண்டே எனக்கு

அவர் சம்பளம் கொடுக்கிறார்

நான் சம்பளம் பெறுகிறேன்

மனங்களால் அவர் மாலை

மலர்களால் என் மாலை

நான் வட்டம் அவர் வானம்

வானத்திற்கேது மையம்

நான் காற்று அவர் கற்பனை

கற்பனைக்கேது திசை

அர்த்தங்களே புரியாத அப்பா

மகனோ அகராதிகள் எழுதினான்

செருப்புத் தைத்த அப்பா

மகனோ சிம்மாசனம் அசைத்தான்

கரி வைரமாவதே தலைமுறைத் தத்துவம்

கடலாக விரிந்த மகன்முன்

நான் குளமாக இருப்பதில் பெருமையே

அமீதாம்மாள்

Series Navigationதி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை