தலையெழுத்து

தேவி நம்பீசன்

சோம்பல் முறித்து எழும்
காலைப்பொழுதுகளில் எல்லாம்
அம்மா – ‘இதை’ சொல்லித்தான்
வசைபாடுவாள்.

வியாபாரத்தில் நட்டம் வந்தபோது
அப்பா – நான் பிறந்த நேரத்தைப் பழித்து
‘இதை’க் கூறியே சதா
வதை செய்தது.

சடங்காகி மனையில் அமர்கையில்
அப்பத்தாளும் ‘இதை’ப்பற்றி
எந்நேரமும் சொல்லியழுது
புலம்பி தீர்த்தது.

இன்னும் மீதமிருக்கும்
குழந்தைத்தனம் தேடுவதால்
தலை சீவி வகிடெடுக்கும் பொழுதெல்லாம்
தேடுகிறேன் ‘அதை’.

Series Navigationசூத்திரம்பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.