தாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?

This entry is part 3 of 29 in the series 20 மே 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இதுபோன்ற நாளொன்றில்
அவளுக்கு
எடுத்துச் சொல்ல ஏதுவானது
வானிருண்டு முகில் திரண்டு
பேய் மழை கொட்டும் வேளையில் !
இதுபோன்ற நாள் ஒன்றில்
என் மனம் திறந்து காட்ட
ஏதுவானது
பரிதி மேகத்தில் மறைந்து
ஒளிமங்கிய போர்வைக் குள்ளே
இடி முழக்கும் முகிலுக்கும்
தடமிட்டுச்
சடசடக்கும் சப்த மழைக்கும்
இடையே !

வேறெவர் காதிலும் வீழாது
இந்த வார்த்தை !
ஏகாந்தம், நிசப்த அந்தரங்கம்.
இருவர் எதிரெதிர் நோக்கி
ஒரே ஆழ் துயரோ டிருப்பர் !
வான்மழை பெய்து கொண்டே
இருந்தது நிற்காமல்
வேறெதுவும்
பாரில் இல்லாதது போல் !

குடும்பம், சமூகம் என்பவை
மாயை போல் தெரிபவை !
வாழ்வின் கொந்தளிப்புகள்
பொருளற்றவை !
மற்றவை இருளில்
மறையும் போது
ஒருவிழி மற்றோர் விழித் தேனை
குடிப்பது,
ஓர் இதயத்தை மற்றொன்று
உணர்வது,
காணாமல் போயின இருளில்
மற்றவை எல்லாம் !

கனத்துப் போன இதயத்தை
கனிந்திடச் செய்தால்
காயப் படாது
எந்த இதயமும் இவ்வுலகில் !
மழை பெய்யும் நாளில்
வீட்டு மூலையில் சில வரிகளை
விளம்பினால்
வேறுபா டென்ன தெரியும்
மற்ற வருக்கு !

ஆத்திர மோடு புயலின்று
தாக்குது !
சுழற்றிப் போகுது மின்னல் !
இவ்வாழ்வு வெறும் சொற்கள்
இவை மனதிற்குள்ளே
ஒளிந்தி ருந்தவை !
அந்தச் சொற்கள்
சொல்லத் தகுந்தவை தான்
சூழ் முகிலில்
மழைப் பொழியும் இந்நாளில் !

++++++++++

+++++++++++++++++++
பாட்டு : 248 தாகூர் தன் 28 ஆம் வயதில் எழுதியது (May 17, 1889). தாகூர்

தன் சகோதரன் சத்யேந்தரநாத்தின் இளமங்கை இந்திராவுக்குப் புகட்டியது.

பின்னர் இக்கீதத்துக்கு மெட்டி இட்டவள் இந்திராதான்.
+++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore

Oxford University

Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 15, 2012

Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-2)முள்வெளி அத்தியாயம் -9
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *