தாவரம் என் தாகம்

துவக்கப் பள்ளியில்
தோட்டம் போட்டோம்
நான் கத்தரி வைத்தேன்
சாணமும் சாம்பலுமாய்
சத்துர மிட்டேன்
கண்காட்சியானது
என் கத்தரிச் செடிகள்

வாத்தியார் சொன்னார்

‘செடியைக்
குழந்தையாய் வளர்க்கிறாய்
சிறந்த தந்தையாவாய் நீ’

பத்தாம்வகுப்பில்
வாத்தியார் கேட்டார்
‘பார்த்ததில் ரசித்தது எது?’

‘பூவோடும் பிஞ்சோடும்
கொஞ்சும் கத்தரிச் செடி ‘
என்றேன்

‘நீ ஒரு கவிஞனாய்
வருவாய்’ என்றார்

அப்பாவுக்கு
அரசாங்க வேலை
புதுப்புது ஊர்கள்
புதுப்புது வீடுகள்
எல்லாம் அடுக்கு மாடி
தொட்டியில்
வைத்தேன் கத்தரி
காலை வணக்கம் சொல்வது
கத்தரிப் பூக்கள்தான்

இப்போதுதான் கிடைத்தது
தரை வீடு
இருபதாண்டு தாகத்திற்கு
இப்போதுதான் தண்ணீர்

தோட்டவேலைகள்
தொடங்கினேன்
முளை விடும்போதே
கொம்புகள் நட்டேன்
பந்தல் பரப்பினேன்

வேலியில் நடந்தது பாகை
தரையில் தவழ்ந்தன
சுரையும் பரங்கியும்
சாமரம் வீசின
கத்தரிச் செடிகள்
வேடிக்கை பார்த்தது வெண்டி
பூவும் பிஞ்சுமாய்
தோடி இசைத்தது
தோட்டம்

திருமண வீட்டில் தீ
அப்பாவுக்கு வந்தது
திடீர் வேலை மாற்றம்
நிசப்தமாய்த் தோட்டம்
நீர்விழியாய் நான்

இலைகளை பூக்களை
பிஞ்சுகளை முத்தமிடுகிறேன்
எல்லாவற்றிலும்
ஏராளமான நீர்த்துளிகள்
அவை என்ன
பனித் துளிகளா?
கண்ணீர்த் துளிகளா?

அமீதாம்மாள்

Series Navigationகணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலிநகர்வு