திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை

அர.வெங்கடாசலம்

(விளம்பரக் கட்டுரை)
என் நண்பன் மிகவும் கொதித்துப் போயிருந்தான்.

”எவ்வளவு தூரம் அவனை நம்பி இருந்தேன். இப்படிச்செய்துவிட்டானே. அவனுடைய அப்பா அம்மா எல்லாம் எவ்வளவு நல்லவர்கள். அவர்களுக்குப்போய் இப்படிப்பட்ட ஒரு பிள்ளையா? நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டானே.”

என்றெல்லாம் மற்றொரு நண்பனைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தான் அவன்.

“எனக்கொரு சந்தேகம் அவன் உண்மையில் அத்தாய் தந்தையருக்குப் பிறந்தவனா அல்லது ஏதாவது தத்து எடுத்த பிள்ளையா?”

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த என்னை அவன் கேட்ட கேள்வி தூக்கி வாரிப்போட்டது. இனி அடுத்து அவனுடைய பிறப்பைப் பற்றியே சந்தேகப்படப் போகிறானா?

அடுத்து வந்தது அவனுடைய வாயிலிருந்து ஒரு குறள்:

நலத்தின்கண் நாரிண்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும் 958

நான் நிமிர்ந்து அமர்ந்தேன். டாக்டர் மு.வரதராசனார் இக்குறளுக்கு என்ன பொருள் கூறி உள்ளார் தெரியுமா என்று கேட்டு நிறுத்தினான். நான் பதில் பேசவில்லை.

“நான் என் நினைவிலிருந்து கூறுவதை விட மு.வ வின் உரையை படித்துக்காட்டுகிறேன் இரு என்று கூறியபடி அலமாரியில் இருந்து புத்தகத்தை எடுத்து முவ வின் உரையைப் படித்தான்.

”ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.”

திருப்தி இல்லையா? என்ன கலைஞர் என்ன உரை எழுதி உள்ளார் எனத் தெரிய வேண்டுமா?

நான் அமைதியாக இருந்தேன். அவன் தன் மனக் குமறல்களை எல்லாம் கொட்டித் தீர்த்த பிறகுதான் நான் பேசுவேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

“என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்”

இது கலைஞர் உரை என்றவன் இரு இரு நீ தான் பாவாணர் ரசிகனாயிற்றே . . . அவருடைய உரையையும் படித்துவிடுகிறேன் என்று அவருடைய உரையையும் எடுத்துப் படித்தான். .

“குடிச்சிறப்புடையவனாய்ப் பிறந்தவனிடத்தில் அன்பின்மை காணப்படின் உலகம் அவனை அக்குடிப் பிறப்புப் பற்றி ஐயுறவு கொள்ளும்”

என்னிடமிருந்து உடனே பதில் வரும் என எதிர்பார்த்தவன் அவ்வாறு எதுவும் நிகழாத நிலையில்
ஏதாவது பேசுப்பா என்றான். சரி நான் புரிந்து கொண்ட விதத்தைப்பற்றிக்கூறுகிறேன். அதற்கு முன் இக்குறள் வந்துள்ள குடிமை அதிகாரத்தின் மொத்த சாரத்தை உணர்ந்தால்தான் இக்குறளுக்கு சரியான புரிதல் கிட்டும் என்றேன்.

“ஆகா உனக்குக் கூறமனம் இருந்தால் எனக்கு கேட்க மனம் இருக்கிறது,” என்றான்.

நான் பேசலானேன். குடிமை என்று பெயர்பெற்றிருந்தாலும் குடும்பம் என்ற பொருளே சரியானது. எவ்வாறு.? இவ்வதிகாரம் அல்லாமல் குடிசெயல்வகை என்று ஒரு அதிகாரமும் தந்துள்ளார் திருவள்ளுவர். அவ்வதிகாரத்தில் ஆறாது குறளும் (1026) ஒன்பதாவது குறளும் (1029 குடி என்பது இல்லம் அல்லது குடும்பத்தைத்தான் குறிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

குடும்பம் என்பது ஒரு பாசறை போன்றது. அப்பாசறையில் பயிற்சி பெறுபவர் அது நல்ல குடும்பமாக இருக்கும் பட்சத்தில் பல நற்குணங்களை தன்னுள் ஊன்றிக்கொள்வார்கள். அக்குணங்கள் அவர்களை வாழ் நாள் முழுக்க வழி நடத்துவனவாம். ஒரு நல்ல குடும்பத்தின் அடையாளங்களாக குடும்பத்தினர் சில பண்புகளை தன்னகத்தே கொண்டிருப்பர் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.அவை யாவை? நடுவு நிலைமை, நாணம், நல்ல செயல்முறைகள் (good practices) உண்மையாயிருத்தல்,பழிச்செயல்செய்ய வெட்கப்படுவது, இணிமையான சுபாபவம், ஈகை, இனிய பேச்சு, யாரையும் இகழாமை, கோடிகொடுத்தாலும் இழி செயலில் இறங்காதிருப்பது, ஈகை புரியமுடியாத அளவுக்கு வறுமை உற்றபோதும் பண்பை இழக்காமல் இருத்தல் அதாவது இதுகாறும் கூறிய குணங்களை இழக்காமல் இருத்தல், வறுமையினால் தரம் குறைந்த செயல்களில் ஈடுபடாமல் இருப்பது அகியனவாம் அவை.

இந்தப் பின்னணியில் குறளின் கருத்தைப் பார்ப்போம். குலத்தின் கண் ஐயப்படும் என்பதை தாயின் கற்பைப்பற்றி ஐயம் எழும் என்று பொருள் கொண்டால் பண்புகளெல்லாம் மரபு அனுக்களின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்பது போலப் பொருள்படுகிறது அல்லவா? ஆளுமைப்பண்புகள் மரபு அனுக்களில் பொதிந்து ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்பதற்குச் சரியான ஆதாரம் இல்லை. ஆகவே இந்தக்குறளுக்கு உண்மையில் வேறேதேனும் பொருள் இருக்கவேண்டும். அது என்ன?

ஒரு குடும்பம் வெளி உலகத்திற்கு சிறந்த பண்புள்ள குடும்பம் போலத்தோன்றினாலும் உண்மையில் போலியான ஒன்று என்றால் அதிலிருந்து வெளிவரும் ஒருவன் ஒரு சோதனையான கால கட்டத்தில் பண்பில்லாதவனாக நடந்துகொள்வது எதிர்பார்க்கக்கூடியதே. இதே கருத்தை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் அடுத்த குறளில் விளக்கு உள்ளார்.

பூமியின் நிலைமையை அதில் விளையும் பயிரின் வளத்தைவைத்துத் தெரிந்து கொள்ளலாம் என்பதுதான் அந்த எடுத்துக்காட்டு.

ஆகவே என்னைபொருத்தவரை சரியான உரை இதுதான்: மிகப்பண்புடைய குடும்பம் என்று கருதப்படும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் பண்பிறந்து நடந்து கொள்வானேயானால் அவன் குடும்பம் உண்மையில் உயர்ந்த பண்புகளின் விளைநிலமா என்ற ஐயமெழும்.

(நாட்டில் எவ்வளவோ உயர்ந்த அரசியல் வாதிகளின் குடும்பங்களில் இருந்து வெளிவரும் வாரிசுகள் மட்டரகமாக நடந்து கொள்வது நாம் அறியாததல்ல. அது ஏன் எனில் உண்மையில் அக்குடும்பங்கள் வெளி உலகுக்கு மிகச்சிறந்த குடும்பங்களாகக் காட்டப்பட்டாலும் உண்மையில் அவை தரம் கெட்ட குடும்பங்களாக இருப்பதுதான்..)

நண்பர்களே, மேலே கண்டவாறு ஒரு நண்பனுடன் நான் உரையாடுவது உண்மையன்று அது ஒரு கற்பனை. .

என்னுடைய திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதனை தங்களுக்கு அறிவிக்க நான் எடுத்துக்கொண்டுள்ள முயற்சியின் தொடர்ச்சிதான் இந்தக்கட்டுரை. புத்தகவிவரங்கள் கீழே:

புத்தகத்தின் பெயர்: திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல்பார்வை
பக்கங்கள் : மேப் லித்தோ 574 பக்கங்கள்
விலை: ரு.285/-
புத்தகத்தைப்பெற: Dr.R.Venkatachalam, A 19 Vaswani Bella Vista, Sitrampalya main road, Graphite India Junction, Bangalore 560048 என்றமுகவரிக்கு R.Venkatachalam என்றபெயரில் அட்பாஅர் டிராஃப்ட் அல்லது செக் அல்லது மணி ஆர்டர் செய்யவும்
புத்தகத்தை என்னுடைய செலவில் அனுப்பி வைக்கிறேன்.
09886406695 prof_venkat1947@yahoo.co.in

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – 88இதுவேறு நந்தன் கதா..