திருடுப் போன கோடாலி

ஒரு விறகு வெட்டி ஒரு நாள் காலை, விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான். விறகை வெட்டி கட்டுக் கட்டாகக் கட்டி வீட்டிற்குக் கொண்டு வந்தான். தன் பட்டறையில் பெரிய விறகுகளை சிறிதாக வெட்டிச் சந்தைக்கு விற்கச் சென்றான். மதியம் மறுபடியும் சந்தைச் சென்று மேலும் விறகுகளை விற்கச் செல்லலாம் என்று எண்ணி கோடாலியைத் தேடினான். அதிர்ச்சிக்குள்ளானான். விறகுகளை வெட்ட இருந்த ஒரு கோடாலி எங்கே சென்றது என்று பதறிப்போய் வீடு முழுக்கத் தேடினான். வீட்டைச் சுற்றிலும் தேடினான். எங்கும் இல்லை.
கோடாலியைத் தேடித் தேடி, அவனுக்கு அதிகமான பதற்றம் ஏற்பட்டது. ஒன்றும் புரியவில்லை. அப்போது அவனது கண்களுக்கு வீட்டைத் தாண்டி நின்றிருந்த பக்கத்து வீட்டுச் சிறுவன் கண்களில் அகப்பட்டான். விறகு வெட்டி அவனைக் கூர்ந்து நோக்கினான்.  “அவன் நம் பட்டறைக்கு பக்கத்தில் நிற்பதைப் பார்த்தால், அவன் கால் மாற்றி நிற்பதைப் பார்த்தால், இறுமாப்புடன் கைகளைச் சட்டைப் பையில் விட்டு கொண்டு நின்றிருப்பதைப் பார்த்தால், அவன் தான் என் கோடாலியை எடுத்திருப்பானோ? அதை நான் எப்படிக் கண்டு பிடிப்பது?” என்று எண்ணினான்.
விறகுவெட்டிக்கு அச்சிறுவன் மீது வெறுப்பு ஏற்பட்டது.  “இந்தத் தவறுக்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று மனத்திற்குள் கருவினான்.
அடுத்த நாள், அவன் முன்பே வெட்டிய விறகுகளை விற்க எடுக்கும் போது, அதற்கிடையே கோடாலி இருப்பதைக் கண்டான். “அடடா.. இப்போது ஞாபகம் வருகிறது. விறகுகளை வெட்டிய பின், கட்டிற்கு பக்கத்தில் வைத்து விட்டு எங்கெல்லாமோ தேடியிருக்கேன்!” என்று நினைவு கூர்ந்தான்.
அன்று அவன் அந்தப் பக்கத்து வீட்டுச் சிறுவனைக் கண்ட போது, அவனைக் கூர்ந்து கவனித்தான். அவனைத் தலை முதல் கால் வரைப் பார்த்தான்.  “சே.. என்ன விசித்திரம்.. நேற்றைக்கும் இன்றைக்கும் இச்சிறுவனிடம் எத்தனை வித்தியாசம்.. இன்று குற்றமற்ற முகமாகத் தெரிகிறதே..” என்று தன் தவறுக்காக வருந்தினான்.
Series Navigationதிருக்குறள் விளம்பரக்கட்டுரைகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்