திறனாய்வு

This entry is part 3 of 11 in the series 26 நவம்பர் 2017

thumbs_up_down,7-P-374821-13 - Copy(1)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 

 

கத்திரிக்கோல் அல்லது பிளேட் அல்லது பிச்சுவாக்கத்தி அல்லது வீச்சரிவாள்….
அவரவர் வசதிக்கேற்றபடி
ஆங்காங்கே வாலுடன் வளையவந்துகொண்டிருந்த
இருகால் விலங்கினங்களை விரட்டத் தொடங்கினர்.
.’நாலேயங்குலம்தான் வால் இருக்கவேண்டு’ மென்றார் ஒரு விமர்சகர்.
’இல்லை, மூன்றுதான்’ என்றார் இன்னொருவர்.
’மும்மூன்று ஒன்பது அங்குலம்’ என்று தன் வாதத்திற்கு வாய்ப்பாட்டைக்கொண்டு வலுசேர்த்தார் இன்னொருவர்.
’செவ்வாய்க்கிரகத்தில் எல்லா இருகால் முக்கால்

பொய்க்கால் விலங்கினங்களுக்கும்
ஒன்றரையங்குல நீளம்தான் வால் தெரியுமா’ என்றார்
கரையான்சாவடி எங்கேயிருக்கிறதென்று தெரியாதவர்.
’அதற்காக என் வாலை நான் ஏன் வெட்டிக்கொள்ள வேண்டும்?
முதலில் உங்கள் ஐந்துவிரல்களை ஒரேயளவாய் நறுக்கிக்

கொள்ளுங்களேன்’ என்றபடி
வேகமெடுத்தோடின அணிலும் முயலும்.
யானையின் குட்டிவாலை அளவெடுத்தவர்கள்
அதையும் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி வெட்டியாகவேண்டும்

என்று அடம்பிடித்தனர்.
’யார் நிர்ணயித்தது, யார் அப்படி நிர்ணயிக்க முடியும்’ என்று
கேள்வி கேட்க முற்பட்ட சிறிய மிருகங்களை
சங்கிலியிட்டுக் கட்டிவைத்துச் சிரிசிரியென்று சிரித்தார்கள்.
ப்ளூட்டோவிலிருந்து எடுத்துவந்த புகைப்படங்களாய்
அவர்கள் காட்டியவை
வால்களா? வயிறுகளா? – சரியாகத் தெரியவில்லை.
’வாலைச் சீர்திருத்திக்கொள்ளவில்லையானால்
நாளைக்குள் எங்கள் எழுதுகோல்கள் வழியே வரும்
விபரீதத்தை நீங்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்’
என்று ஆளாளுக்குஅச்சுறுத்திக்கொண்டே போனார்கள்.
”ஆனால், ஒன்றை கவனித்தாயா?
பணம், பதவி, அந்தஸ்தில் உழலும் பெருமுதலைகள்,
சிங்கம், புலி, கரடி, காட்டெருமைகளின் வால்களிடம்
இவர்கள் வாலாட்டுவதேயில்லை.
இரவல் கைகளால் எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாள, மொழிபெயர்ப்பாளர்களோடு

நல்லுறவைப் பேணுகிறார்களே யல்லாமல்
அவர்களுடைய நகல்வால்களை அடையாளங்காட்டுவதேயில்லை”
என்று சுட்டிக்காட்டியது சுண்டெலி.
’அப்படியானால் நாளை நான் ஒரு பணக்கார டினோசராகவும்,
நீயொரு பதவிக்கார யாளியாகவும் உருமாறிவிடவேண்டியதுதான்.
காஃப்காவிடம் செல்லலாம் வா’ என்று
ஒரே குரலில் கூறின அணிலும் முயலும்.

 

 

Series Navigationஅவுஸ்திரேலியா சிட்னியில் கலை – இலக்கியம் 2017 தமிழக கவிஞர் வைதீஸ்வரனும் உரையாற்றுகிறார்.ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2017
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *