தில்லிகை

 

தில்லிகை – தில்லியில் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தைப் பெற்றுவரும் தமிழ் இலக்கிய வட்டம்.  இது, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மதியம் மணிக்குதில்லித் தமிழ்ச் சங்கத்தில் சந்திப்புகளை நட த்தி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் ஒரு மையக் கருத்தை ஒட்டி இந்தச் சந்திப்புகள் நிகழ்கின்றன.  இதுவரை, ‘மதுரை’, ‘கரு’, ‘போர்’, ‘தில்லியும் தமிழ் இலக்கியமும்’, ‘தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்’ ஆகிய மையக் கருத்துக்களை ஒட்டி ஐந்து இலக்கியச் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன.  உறுப்பினராக வேண்டிய அவசியம் ஏதும் இல்லாத இந்தச் சந்திப்புகளுக்கு அனுமதி இலவசம்.  நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் கலந்துரையாடலும் இடம்பெறுகிறது.

 

தோற்றம், நோக்கம்


இலக்கிய ஆர்வம் கொண்ட சில நண்பர்களுக்கிடையேயான கலந்துரையாடல்களின் பொது, புது தில்லியில் ஒரு இலக்கிய வட்டம் அமைப்பதன் மூலம் நல்ல இலக்கியங்கள் குறித்துப் பேசலாம், அவற்றைப் பதிவு செய்யலாம் என்ற கருத்து எழுந்தது. தமிழிலக்கிய முதுநதியின் ஓட்டத்தில் தலைநகரின் அனுபவங்கள் தரும் பொருண்மையின் வழி தத்தமது பார்வைகளை சேர்ப்பதன் மூலமாக எமது சிறு பங்களிப்பை செய்யலாம், இவற்றின் மூலம் தற்காலத் தமிழிலக்கிய உலகின் நிகழ்வுகளில் பங்கேற்கலாம், இவற்றின் மூலம் தமிழிலக்கியச் சோலைக்கு மணம் சேர்க்கும் சிறு முயற்சியாக இது இருக்கும் என்ற எண்ணத்தில் இது  துவங்கப்பட்டது. தில்லி தமிழ் சங்கமும் இம்முயற்சியில் இணைந்துகொள்ள,  ஒவ்வொரு கூட்டத்திலும் வித்தியாசமான தலைப்புகள், பார்வைகள், பகிராளிகள், பங்காளிகள் என தற்போது ஐந்து கூட்டங்கள் நிகழ்ந்தேறியுள்ளன.

 

இதுவரை நிகழ்ந்த கூட்டங்கள்

 

  1. முதற் கூட்டத்தில் ‘மதுரை’ கருவாக எடுத்துக்கொள்ளப் பட்டது.  சங்கம் காட்டும் மதுரை என்ற தலைப்பில் முனைவர் சே. ராம்மோகன், சிலம்பு காட்டும் மதுரை பற்றி முனைவர் ம. சுசீலா, மகாவம்சம் காட்டும் மதுரை பற்றி திரு விஜய் ராஜ்மோகன் உரை நிகழ்த்தினர். கூட்டத்தை தொடர்ந்து மகாவம்சம் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது.

 

  1. இரண்டாவது கூட்டத்தில்  ’கரு’ மையமாக இருந்தது. ’உள்ளம் கவர் கள்வர்’ என்ற தலைப்பில் ஔவையிலிருந்து ஷேக்ஸ்பியர் வரை உதாரணங்களை எடுத்தாண்டு நாவலாசிரியர் திரு பி. ஏ. கிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். ஒளவையாரின் ஒரு பாடல் கரு எப்படி பாலி மொழியில் எழுதப்பட்ட தம்மபதத்திலிருந்து வருகிறது என்பதை உதாரணத்துடன் விளக்கியது மிகவும் சுவாரசியமாக இருந்தது. ’முள்ளும் மலரும் தருணம்’ என்ற தலைப்பில் சாதாரண கருவில் உருவான சில சிறந்த தமிழ்ப்படங்கள் பற்றி தில்லிகையின் நிறுவனர் திரு ஸ்ரீதரன் மதுசூதனன் பேசினார். ‘ ஒரு பிடி விதையும் ஒரு கானகமும்’ என்ற தலைப்பில் புதுமைப்பித்தன் மற்றும் சீனாவின் லூ ஸ்ஷுன் கதைக் கருக்கள் பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் திரு வீ காளத்தி உரை நிகழ்த்தினார்.

 

  1. மூன்றாவது கூட்டத்தின் கருவாக ‘போர்’ இருந்தது. ’பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும்’ என்ற தலைப்பில்  மாகாபாரத  மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் பற்றி தேசிய நாடகப்பள்ளியின் பேராசிரியர்  திரு எஸ். ராஜேந்திரன் மிகவும் சுவாரசியமான உரையை நிகழ்த்தினார். ‘நீதிக்கான போரும் நீதியான போரும்’ என்ற தலைப்பில்  பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணி குறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக  ஆய்வு மாணவரும், மொழிபெயர்ப்பாளருமான  திரு க. திருநாவுக்கரசு தமது உரையை நிகழ்த்தினார். 

 

  1. நான்காவது கூட்டத்தின் கருவாக   ‘தில்லியும் தமிழ் இலக்கியமும்’ இருந்தது. ‘தில்லியும் தமிழ் எழுத்தாளர்களும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி உரை நிகழ்த்தினார். ’தில்லியில் ஒரு தமிழ் வாசகன்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு வெ. சந்திரமோகன் மற்றும் ‘தில்லியில் தமிழுக்கான தேடல்’ என்ற தலைப்பில் இந்திய வெளியுறவுப் பணியில் இருக்கும் திரு ச. ராம் குமார் ஆகியோர் உரையாற்றினர்.

 

 

கடந்த வாரக் கூட்டம்


ஐந்தாவது கூட்டத்தின் மையக் கருவாக  ‘தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்’ இருந்தது. இது கடந்த வாரம் (14 ஜூலை 2012) நடைபெற்றது.

தமிழ் – இந்தி மொழி இலக்கிய உறவு என்னும் தலைப்பில் பேசிய எழுத்தாளர் புதியவன் (திரு ஷாஜஹான்) அவர்களின் உரை வங்கம்மராத்திமலையாளம் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளோடு தமிழுக்கு நேர்ந்திருக்கும் விரிவான தொடர்புகளையும் முன் வைத்தது.  வங்கத்திலிருந்து தமிழுக்கு அரிய பல நூல்களைக் கொணர்ந்த தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்த த.நா.சேனாபதித.நா.குமாரசுவாமி தொடங்கி இன்று அப்பணியை முழு மூச்சாகச் செய்து வரும் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி வரை பல மொழிபெயர்ப்பாளர்களையும் சுட்டிக் காட்டிய ஷாஜகான்காண்டேகர் மராத்தியில் பெற்ற புகழை விடவும் அவரது மொழிபெயர்ப்பாளராக வாய்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீயால் தமிழில் பெரிதும் அறியப்பட்டதையும் எடுத்துக் காட்டினார். இந்தியில் சரஸ்வதி ராம்நாத்தில் தொடங்கி இன்று தொல்காப்பியத்தை இந்தியில் கொணர அரிய முயற்சி மேற்கொண்டுவரும் சாகித்திய அகாதமி விருது பெற்ற எச்.பாலசுப்பிரமணியம் வரை பலரின் செயல்பாடுகளும் அவரது உரையில் விரிவாகக் காட்டப்பட்டன.  காண்டேகர் என்னும் எழுத்தாளரின் முகம் தெரியாமல், பின்னணிப் பாடகர் கண்டசாலாவின் பெயரும் இச்சாயலில் இருப்பதால் அக்குரலுக்கு நடித்த பழம்பெரும் நடிகர் ரங்காராவ் அவர்களின் முகத்தையே காண்டேகரின் உருவமாக தனக்குள் வரிந்துகொண்ட்து போன்ற நூதனமான நுண்ணிய உணர்வுகளையும் தனது பேச்சில் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் புதியவன்.  இன்றைய தலைமுறை இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரது உரை பெரிதும் முன்மாதிரியாகபயனுள்ளதாக அமைந்திருந்தது.

 

இதைத் தொடர்ந்து தமிழ் – கொங்கணி இலக்கிய உறவு குறித்துப் பேசியவர் ஜவஹர்லால் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. தமிழ்ச்செல்வன். கொங்கணி மொழியைச் சார்ந்தே தன் முனைவர் பட்ட ஆய்வையும் தொடர்ந்து வரும் அந்த மாணவர் முன் வைத்த செய்திகள் அதிகம் அறியப்படாதவைபரவலான தளத்தில் இன்னும் அறிமுகமாகாதவை.  கொங்காணம்(கொன் காணம்) என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி கொங்கணி மொழி பேசிய மக்கள் வாழ்ந்த இடமாக இருக்கலாம் என்றும், தெற்கிந்தியப் பகுதியில் ஜைன மதத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளில் தமிழும் கொங்கணியும் ஒரு சேர இடம்பெற்றிருப்பது இரு மொழி பேசுவோரிடையேயான தொடர்புகளைச் சுட்டும் என்றும் பல ஆராய்ச்சித் தகவல்களை எளிமையாகச் சொல்லினார் தமிழ்ச்செல்வன். பெரு முயற்சி மேற்கொண்டு கொங்கணி மொழியைக் கற்று அம்மொழியிலிருந்து நேரடியாகவே தமிழுக்கு இரு சிறுகதைகளை மொழிபெயர்த்தும் அளித்திருப்பவர் இவர். அக்கதைகள் அவரது இள முனைவர் பட்ட ஆய்வேட்டில் இடம் பெறிருப்பதோடு அண்மையில் அவற்றில் ஒரு படைப்பான சிடுமூஞ்சி’ என்னும் சிறுகதை திசை எட்டும்’ இதழிலும் வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.

 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா, தில்லிகை போன்ற இலக்கிய அமைப்புகளின் முக்கியத்துவத்தைப் பாராட்டிப் பேசுகையில் “வெளிச்சத்தைப் பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்..விளக்கை ஏற்று’’என்கிற அப்துல் ரஹ்மான் கவிதையில் சொல்லியது போன்ற சிற்றகல்களை ஏற்றி இளம் நெஞ்சங்களில் இலக்கிய ஆர்வத்துக்கான பொறிகளைப் பதிய வைக்கும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான இத்தகைய நிகழ்ச்சிகளும்  இன்றில்லை எனினும் என்றோ…எப்பொழுதோ…எவருக்கோ பலனளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன” என்றார்.

 

அடுத்த கூட்டம்


தில்லிகையின் ஆறாவது கூட்டம், ஆகஸ்ட் 11ம் திகதி நடைபெறும். தில்லியில் வசிக்கும் அன்பர்கள் மற்றும் தில்லிக்கு வருகை தரும் இலக்கிய ஆர்வம் உடைய தமிழர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

 

* * * * * * *

தில்லிகை நண்பர்கள் குழு, புது தில்லி

19.07.2012

Series Navigationபதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி